பார்ப்பன மரபை எதிர்த்த – உலகம் கொண்டாடும் நாட்டியக் கலைஞர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நடன-இசைக் கலைஞர் பாலசரஸ்வதி. பார்ப்பனரல்லாத சமுதாயத்தில் பிறந்தவர். வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை எதிர்த்தவர். இன்று அவரது மாணவர்கள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, பாலசரஸ்வதியின் புகழை உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாலசரஸ்வதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’

நூலாக எழுதியவரும் அவருடைய மருமகனும் (மகளை மணந்தவர்) மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட்டுடன் ஒரு பேட்டி.

 

பாலசரஸ்வதி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?

1968-ல் அமெரிக்காவின் வெஸ்லீயன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந் தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு நாடகத்தின் மீது ஆர்வம். கூடவே, மற்ற கலை வடிவங்கள் மீதும் மற்ற கலாச்சாரங்களின் இசை வடிவங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்தது. எனது ஆசிரியர்களில் தஞ்சாவூர் ரங்கநாதனும் ஒருவர். பாலாம்மாவின் தம்பி அவர். ஒருமுறை ரங்கநாதனைப் பார்க்க அமெரிக்காவுக்கு பாலாம்மா வந்திருந்தார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். அப்போதுதான் அவரது நாட்டிய நிகழ்வை முதன்முறையாகப் பார்த்தேன், பரதநாட்டியத்துக்கு மிருதங்கம் வாசிக்கப்பட்டதையும் கண்டேன். அடிப்படை யில் நான் மிருதங்கக் கலைஞன். அப்போது, பாலாம்மா என்னையும் அவர்களின் பரத நாட்டியத்துக்கு மிருதங்கம் வாசிக்கும்படி ஊக்குவித்தார். ரொம்ப நல்ல அனுபவம் அது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் பாலாம்மாவின் மகள் லெட்சுமிக்காக நான் மிருதங்கம் வாசித்தேன். 1973-ல் இந்தியாவுக்கு வந்தேன். ஓராண்டு கழித்து ஒரு கச்சேரிக்காக முதன்முறையாக மிருதங்கம் வாசித்தேன். பாலாம்மா, லட்சுமி, பாலாம்மாவின் இன்னொரு தம்பி புல்லாங்குழல் விஸ்வநாதன் இவர்களுடன். பாலாம்மா வீட்டில்தான் அப்போது தங்கியிருந்தேன். என்னுடன் மிகவும் இனிமையாகப் பழகினாலும் எனக்கு உதவினாலும்கூட அவர் ஒரு தனிமைவிரும்பி என்பதை உணர்ந்தேன். நான் வெளி நாட்டுக்காரன் என்பதால் பாலாம்மா செய்யும் பல விஷயங்கள் எனக்குப் புரியாது. எனினும், அவரிடம் நான் எதையும் கேட்க மாட்டேன். வாயை மூடிக்கொண்டு கவனிப்பதுதான் பெரிய பயிற்சி. லெட்சுமியிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்பேன். ஒருவகையில் எனக்கும் பாலாம்மாவுக்கும் நடுவில் மொழி பெயர்ப்பாளர்போல லெட்சுமி இருந்தார். இப்படித்தான் அவருக்கும் எனக்கும் இடையே உறவு உருவானது.

லெட்சுமிக்கும் உங்களுக்கும் இடை யிலான காதலுக்குப் பிறகு, உங்களுக்கும் பாலசரஸ்வதிக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது?

கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்தது. அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள்தானே! ஒரு மருமகனாக என்னைக் குறித்து அவருக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. மற்றபடி இசைக் கலைஞராக எனக்கும் அவருக்கும் இடையிலான உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையில் பாலாம்மா உயிரோடு இருந்த போது அவரை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. 2001-ல் என் மனைவி லெட்சுமி இறந்த பிறகுதான், பாலாம்மாவைப் பற்றிய புத்தகத்தை எழுதுவதற்கான தேடலில் ஈடுபட்டு பலரிடமும் பேசுகையில் பாலாம்மா எவ்வளவு உன்னதமான பெண்மணி-கலைஞர் என்பதை என்னால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமிழ்க் கலையுலகில் பாலசரஸ்வதி புறக் கணிக்கப்படுவது அவரது நூற்றாண்டிலும் கூட தொடர்கிறதே?

மேலைநாடுகளில் பாலசரஸ்வதி முறையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். ‘அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலாம்மாதான். ஆனால், இங்கே நிலைமை வேறு. பத்ம விருதுகளைத் தாண்டி வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் ஏதுமில்லை. அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது மேலும் அதிக மானது. இந்த நூற்றாண்டு தருணத்திலும்கூட நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே யில்லை. பாலாம்மாவின் பெயர் தொடர்ந்து மறைக்கப்படுவதன் பின் பெரிய அரசியல் இருக்கிறது. பாலாம்மாவின் பெயரே நடனத் துறையில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவது. பரதநாட்டியம் என்ற கலை மீது செய்யப்பட்ட ஆக்கிரமிப்புக்கு எதிரான பெயர் அவருடையது. அதனால்தான் இந்த அச்சம். இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய ‘பிராமணிய’ ஆக்கிரமிப்பை பாலாம்மா எதிர்த்தார். இன்றும் அவருடைய மரபு அதற்கு எதிரானது. அதன் விளைவாகவே புறக்கணிப்பை எதிர்கொள்கிறார். அதேபோல, பாலாம்மாவின் பெண்ணான லெட்சுமிக்கோ, பேரனும் என் மகனுமான அநிருத்தாவுக்கோ ஆடுவதற்கான வாய்ப்புகள் அவ்வளவாகக் கிடைத்ததில்லை. எனினும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பாலாம்மாவின் உள்ளம் விரும்பிய பணிகளை முன்னெடுப்பதில் மட்டும் சளைக்காமல் ஈடுபட்டுவருகிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இதில் நானே ரொம்பவும் அவநம்பிக்கைக் குள்ளாகித் தளர்ந்துவிட்டேன். அநிருத்தா நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டிருக்கிறான்.

பாலசரஸ்வதியின் தனித்துவம் என்று எதனைச் சொல்வீர்கள்?

ஒருவகையில் பாலாம்மாவையும் ‘எலைட்’ என்றுதான் சொல்ல வேண்டும். தனித்துவக் கலைஞர். அபூர்வமான ரசனை கொண்டவர் களால் மட்டுமே அவரை ரசிக்க முடிந்தது. ஏழு தலைமுறையின் பயிற்சி பாலாம்மாவுக்குள் ஒன்றாக ஊறியிருந்ததாலும், இரண்டு வயதிலிருந்து பாட்டிலும் நடனத்திலும் முழு மூச்சோடு அவர் பயிற்சி மேற்கொண்டதாலும் அவர் இப்படிப்பட்ட உன்னதமான கலை நிலையை அடைந்திருந்தார். ஆனால், இந்த ‘எலைட்’ தன்மையானது கலைஞர்களிட மிருந்துதான் வர வேண்டுமேயொழிய ‘எலைட்’ ரசிகர்கள் குழு என்று செயற்கையாக உருவாக்கப்படும் ஒன்றிலிருந்து வரக் கூடாது.

பாலசரஸ்வதி பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்துக்கு வரவேற்பு எப்படி?

ஆங்கிலத்தில் நல்ல வரவேற்பு. என்றாலும் பாலாம்மாவின் மொழியில் இந்த நூல் வெளியானதில்தான் எனக்குப் பெரிய மனநிறைவு. இந்த வரவேற்பையெல்லாம் தாண்டியும் அழுத்தமான ஒரு மௌனத்தை என்னால் உணர முடிகிறது.

நன்றி: ‘தமிழ் இந்து’

நிமிர்வோம் மே 2018 இதழ்

You may also like...