கார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்?
கார்ப்பரேட் ஊழல் – வங்கிகளின் மோசடிக்கு அடிப்படையான காரணம் இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு தகுந்த கொள்கைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருப்பதுதான்.
ஊழல் என்பவை தனிநபர்கள் சார்ந்த விசயம் மட்டுமல்ல, அரசின் கொள்கை களிலேயே அதற்கான வித்து ஒளிந்திருக்கிறது. தொலைதொடர்புத் துறையையே உதாரணத் திற்கு எடுத்துக் கொண்டால் இந்தத் துறையில் ‘புரட்சி நடந்திருப்பதாக’ சொல்லப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், இத்துறையின் பல்வேறு கொள்கைகளை தனியார் லாபத்திற்கு ஏற்ப திருத்தி, புகுத்தியிருப்பதை கண்டுகொள்ள முடியும். யாரோ சில அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கால் நடைபெற்ற மாற்றங்கள் அல்ல அவை. 1999 வாஜ்பாய் ஆட்சியிலேயே தொலைத் தொடர்புத் துறை கொள்கையில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. பிறகு டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இந்தத் துறையில் கால்வைத்தன. சர்வதேச அழைப்பு களை இந்தியாவிற்குள்ளேயே செய்யப் பட்டதாக மாற்றி முறைகேடு செய்யப்பட்ட செய்தி 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.1300 கோடி வரை இழப்பை சந்தித்தன. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த இழப்பில் பாதியளவு மட்டும் அபராதமாக செலுத்தி வெளிவந்தது. ரிலையன்ஸின் உரிமத்தை ரத்து செய்ய முடியாது; அது பயனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விளக்கம் கொடுத்தார் அப்போதைய அமைச்சர். தனியார் துறை யினருக்கு சாதகமான முறையில் அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது தனியே விவாதிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். தனது சொந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைக் குறித்து சிறிதும் கவலையற்ற முறையில் மத்திய அரசு செயல்பட்டது. தனியார் நிறுவனங்கள் முந்திக் கொண்டு செல்ல ஏற்ற வகையில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசு நிறுவனத்தை பலவீனப்படுத்தியது. பி.எஸ்.என்.எல் நிறுவனத் தின் கட்டமைப்பு, தனியார் லாபத்துக்காக திருப்பிவிடப்பட்டது.
ஒரு ஊழலால் எத்தனை கோடி இழப்பு ஏற்படுகிறது என்பதை விடவும் முக்கியம் அது யாருடைய வாய்ப்பைமறுத்து யாருக்கு வசதியை உருவாக்குகிறது என்பதாகும்.மோடி ஆட்சியில் பல்வேறு ஊழல்களை நாம் பட்டியலிடுகிறோம். நவீன தாராளவாத கொள்கைகளுக்கும், தனியார்மயத்துக்கும் வெண்சாமரம் வீசுவதை முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. ஊழலை ஒழிக்க, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கொண்டுவருவதாக அறிவித்தார் மோடி. அது இந்திய சிறு முதலீட்டாளர்களை நசுக்கி, டிஜிட்டல் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் கார்ப்பரேட்டு களுக்கு வசதி அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையாக மாறியது. பணம் மாற்றிக் கொடுப்பதில்தொடங்கி பல்வேறு நிலைகளில் புதிய முறைகேடுகளுக்கு அது வழி வகுத்தது. நாட்டின் வளர்ச்சி சதவீதம் தலைகீழாக விழுந்துகொண்டிருக்கும் சூழலிலும், இந்தியாவில் உருவான சொத்துக்களில் 73ரூ பணக்காரர்களின் வசம்இருக்கிறது என்றால் அரசின் கொள்கைகள் எத்தனைதீவிரமாக வாய்ப்புக்களை மடைமாற்றிக் கொண்டி ருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இங்கே இடைத்தரகர்களுக்கு வேலையே இல்லை என்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஏனென்றால் அரசே இடைத்தரகர் வேலையை வெளிப்படையாக செய்து கொண்டிருக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு 60 ஆயிரம் கோடிக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியாத அரசு, பெரும் பணக்காரர்களுக்கு 2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது. ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கும்போது, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிகளிடம் அது வைத்துள்ள கடன் பாக்கிகளையும் நாம் கவனிக்க வேண்டும். எத்தனைஊழியர்களை வேலையிழக்கச் செய்து நடுத்தெருவில் நிறுத்தப்போகிறார்கள்? ஏற்கெனவே எம்.டி.எஸ், ஆர்.காம் நிறுவனங்கள் திடீரென சேவைகளை நிறுத்திக் கொண்டன. இப்படி திடீர் திடீரென நடக்கும் மாற்றங்கள் தன்னிச்சையானவையா?
உண்மையில் இந்தியாவில் தொலைத் தொடர்பு புரட்சி என்று குறிப்பிடப்படும் கடந்த 20 ஆண்டு காலங்களில், தொலைபேசித் துறையில் நடைபெற்ற அடுக்கடுக்கான மோசடிகள், மிகக் குறைந்த அளவே வெளிவந்திருக்கின்றன. இப்போதுமோசடிகள் வங்கித்துறையை மையம்கொண்டிருக்கின்றன. தனியார்மயத்தின் முதன்மைச் சேவகனான மோடி, நாட்டின் செல்வ வளங்களையும், வாய்ப்புகளையும் கூடுமானவரையில் பெரும் பணக்காரர்களின் கைகளுக்கு திருப்பி வருகிறார். மோடி ஆட்சியில் பல மோசடி மோடிக்களை உருவாக்கியுள்ளார். அவர்கள் ஊழலை நாட்டை விட்டே விரட்டி வருகின்றனர். அதுதான் எல்லா ஊழல்வாதியும் வெளிநாட்டில் செட்டில் ஆகிறார் என்று கிண்டலாகப் பேசுகிறார்கள். பொதுத்துறைகளை விற்பதே தனது கொள்கை எனச் செயல்படுகிற அரசு, அதற்காக இலக்கு நிர்ணயிக்கிறது. நட்டக் கணக்கு காட்டி மிகத் திறமையாக விற்பனை செய்கிறார்கள்.
வணிகமான அரசியல்… வழியமைக்கும் கொள்கை…
அரசியல் என்பது மக்கள் சேவை – அது கொள்கைக்கான போராட்டம் என்பது ஒரு காலத்தில் பல கட்சிகளைச்சேர்ந்த ஒரு சிலருக்குப் பொருந்துவதாக அமைந்தது. ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான முதலாளித்துவக் கட்சிகளுக்கு வணிகமாக அரசியல் ஆக்கப்பட்டு இவர்கள்கார்ப்பரேட்டு களுடன் சேர்ந்து இந்திய நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை தினம் தினம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் மக்களுக்கோ ஊழல் என்பது எளிய நோக்கில் அரசியல்வாதிகள் அடையும் ‘முறைகேடான’ வருமானம் என்று மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சிலருக்கு பலன் கொடுக்கும் வகையில் ஒப்பந்தங்களைக் கட்டமைப்பதன் மூலம் அவர்கள் ஒரு பகுதி பலனை அடைகிறார்கள். அதாவது இங்கே பெரும்பலனை அடைவது யார்? என்பது மறைக்கப்படுவது வெளிப்படை.நமது நாட்டின் ஒவ்வொரு தனியார்மய, தாராளமய கொள்கைகள் வகுக்கப்பட்ட விதமே அதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது.நிலக்கரி ஊழல் 2 லட்சம் கோடி, கிரானைட் ஊழல் 1 லட்சம் கோடி, தாது மணல் ஊழலுக்கு கணக்கே இல்லை, வங்கித்துறை ஊழலில் இதுவரை இழப்பு ரூ.2 லட்சம் கோடி, இன்னும் வராக் கடன் 8 லட்சம் கோடி, ஆண்டுக்கு ஆண்டு கார்ப்பரேட் வரிச் சலுகை குறைந்தது ரூ.4 லட்சம் கோடி – இப்படி நாடு இழந்திருக்கும் தொகை களைக் கணக்கிட்டால் ஓராண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு ஈடாக வருகிறது. தமிழகம் போன்ற மாநிலத்தின் கடன் சுமையை மொத்த மாய் அடைத்து, 2 நிதிநிலை அறிக்கை செலவு களை வரியில்லாமல் மேற் கொள்ளலாம். இவ் வகையில் பார்க்கும்போது, ‘கொள்கை வகுத்தல்’ என்ற களம்தான் ஊழல் முறைகேடுகளுக்கு இடம் அமைத்துக் கொடுக்கும் முதன்மைத் துறையாகும். ஊழல் முறைகேடுகளுக்கான ஊற்றுக்கண் அங்கே அமைந்திருக்கிறது.
வங்கிக் கொள்ளைக்கு யார் காரணம்?
ஏற்கெனவே, வாராக் கடன்கள் அதிகரிப் பால் வங்கித் துறை விழிபிதுங்கி யிருக்கும் நிலையில்தான் பஞ்சாப் தேசிய வங்கி (பிஎன்பி) மோசடியும், பேங்க் ஆஃப் பரோடாவில் (பிஓபி) நடந்த மோசடியும் வெளியாகியிருக்கின்றன. வங்கிகளின் வாராக் கடனின் மொத்த அளவு இந்த மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுவிடும் என்று தெரிகிறது. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட ரூ.6 லட்சம் கோடி இதில் சேராது! இதனால் வங்கிகள் கடன் வழங்குவது மந்தப்பட்டுள்ளது. பயனுள்ள முதலீடுகள் குறைந்துவருகின்றன.
முறையான கட்டுப்பாடுகளும் கண் காணித்தல்களும் இல்லாததால்தான் இத்தகைய மோசடிகள் நடைபெறுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. வங்கி நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும் இந்தத் தவறுகள் நிகழ்ந்துள்ளன. மிகச் சிலர் மட்டுமே சேர்ந்து இவ்வளவு பெரிய மோசடியைச் செய்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எங்கே போகின்றன என்று ஆராயாமலேயே இருந்திருக்கிறார்கள் மூத்த அதிகாரிகளும் தணிக்கையாளர்களும். இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளைச் சரியாகக் கண்காணிக்கவில்லை. நிதியமைச்சகமும் தனது கடமையில் தவறி விட்டது.
கடன் உறுதியேற்புக் கடிதம் (எல்ஓயு) மூலம் பெரும்பகுதி மோசடி நடந்திருக்கிறது. தனது வாடிக்கையாளர் வெளிநாட்டில் உள்ள இன்னொரு இந்திய வங்கியின் கிளையில் பெருந்தொகையை மிகக் குறுகிய காலத்துக்குக் கடனாகப் பெற, மூல வங்கி இந்தக் கடன் உறுதியேற்புக் கடிதத்தை அளிக்கிறது. இந்த நடைமுறை பிற வெளிநாடுகளிலோ, வெளிநாட்டு வங்கிகளிலோ கடைப்பிடிக்கப்படு வதில்லை. இந்தக் கடிதங்கள் வங்கியில் வாடிக்கையாளர் கணக்கிலும் ஏற்றப் பட்டு, வங்கியின் பதிவேட்டிலும் குறிக்கப்பட் டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. பிற வங்கிகளிடம் வாங்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் ‘மோடி-சோக்சி ஜோடி’யால் நிர்வகிக்கப்பட்ட முகமூடி நிறுவனங்களின் கணக்குகளில் போடப்பட்டு, பிறகு துடைத் தெடுக்கப்பட்டிருக்கிறது. வியாபாரத்துக்காகக் கொடுக்கப்பட்ட கடன் அதற்குப் பயன்படுத்தப் படாமலும், எந்த வகையிலும் வங்கியின் பதிவேட்டில் எழுதப் படாமலும், மேலதிகாரி களால் கண்காணிக்கப்படாமலும் சூறையாடப் பட்டிருக்கிறது. ரூ.20,000 கோடிக்கும் மேல் இது இருக்கலாம் என்று தெரிகிறது.
இது முழுக்க முழுக்க மோசடி நோக்கிலான குற்றச்செயல்தான்; திட்டமிட்ட மோசடிக்கும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத உண்மை நிலைக்கும் இடையில் சிறிய இடைவெளிதான் இருக்கிறது. வங்கிகள் வணிகத்துக்குக் கடன் கொடுப்பது பெருமளவுக்கு சொந்த விருப்பின் பேரிலேயே இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி 2016 மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எல்லா வங்கிகளிலும் தரப்பட்ட மொத்தக் கடனில் 38ரூ தொகையை, வெறும் 11,643 வாடிக்கையாளர்கள் மட்டும் பெற்றுள்ளனர். வாராக் கடன்களில் 84ரூ பெரிய வணிக நிறுவனங்களால் வாங்கப் பட்டவை. வங்கிகளின் மிகப் பெரிய 12 வாராக் கடன்களின் கூட்டுத் தொகை மட்டுமே ரூ.2,50,000 கோடி. காங்கிரஸ் கூட்டணி அரசில் வாங்கியதைப் போலவே பாஜக ஆட்சியிலும் பெருநிறுவனங்கள் தாராளமாகக் கடன் பெற்றுவருகின்றன. தங்களுக்கு நன்கொடை தரும் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதிச் சலுகைகளையும், வரிச் சலுகை உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது. அரசுக்குப் பிடித்த நிறுவனங்கள், வாங்கிய கடனை குறிப்பிட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல் மடைமாற்றியது தெரிந்தாலும் கூட, அந்தக் கடன்களை வாராக் கடன் என்று அறிவிப்பதில்லை என்பதைப் புலனாய்வு நிறுவனங்கள் பலமுறை கண்டுபிடித்துள்ளன. கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பித் தராமல் ஏமாற்றுபவர்கள் என்று சிலரை அறிவித்தாலும்கூட அவர்களைக் கைது செய்வதும் இல்லை, நாட்டைவிட்டு ஓடாமல் தடுப்பதும் இல்லை. அவர்களுடைய பெயர்களைக்கூட பகிரங்கமாக வெளியிட மறுப்பதால், அவர்கள் மேலும் பல வங்கிகளை அணுகிக் கடன் பெற முடிகிறது.
‘அரசுத் துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் பெரிய தொழிலதிபர்களால் எளிதில் சூறையாட முடிகிறது, சலுகைசார் முதலாளித்துவம் வளர வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று சிலர் கூறுகின்றனர். எனவே அரசுத் துறை வங்கிகளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கின்றனர். தனியார் துறையிடம் ஒப்படைத்தால் இதை விடப் பெரிய கொள்ளைகளும் மோசடிகளும் தான் நடைபெறும். இங்குப் பிரச்சினைகளுக்குக் காரணம் வங்கியின் உரிமையாளர் யார் என்பதல்ல, கண்காணிப்பு சரியாக இல்லை என்பதுதான். இவ்வளவு பெரிய தொகை மோசடி நடந்ததாகச் செய்திகள் வந்த பிறகும்கூட பஞ்சாப் தேசிய வங்கி நொடித்துப் போகாமல் இருக்கக் காரணம், ‘இது அரசு வங்கி, இதில் செலுத்திய நம்முடைய முதலீட்டுக்கு அரசு பொறுப்பேற்கும்’ என்ற மக்களுடைய நம்பிக்கைதான். இதுவே தனியாரிடம் இருந்திருந்தால் எழ முடியாத அளவுக்கு வங்கி வீழ்ந்திருக்கும். முறையான கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இல்லாவிட்டால் தனியார் வங்கிகளும் மோசடிக்கும் இழப்புக்கும்தான் ஆளாகும்.
1969இல் 14 பெரிய வங்கிகள் அரசுடைமை யாக்கப்படுவதற்கு முன்னால் ஆண்டுக்கு சராசரியாக 35 தனியார் வங்கிகள் திவாலாகிக் கொண்டிருந்தன; 1990-களில் தாராளமய சீர்திருத்தங்களுக்குப் பிறகு குளோபல் டிரஸ்ட் வங்கி, செஞ்சுரியன் வங்கி இரண்டும் திவாலானதால் இணைக்கப்பட்டன. இழப்புகள் அரசுத் துறை வங்கிகளால் தாங்கப்பட்டன. தனியார் துறையில் உள்ள ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகளிலும் வாராக் கடன் அளவு அதிகம். தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் மூடு மந்திரமாக இருப்பதால் தெரிவதில்லை, அரசுத் துறை வங்கிகளைக் கட்டுப்படுத்துவது எளிது.
ரிசர்வ் வங்கி தன்னுடைய முக்கியக் கடமையான கண்காணித்தலைச் செய்ய முடியாமல் பணமதிப்பு நீக்கத்தின் பாதகங் களைச் சரி செய்வதற்கும், வங்கிக்கு வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை எண்ணுவதற்குமே நேரத்தைச் செலவிடுகிறது. இதனால் வங்கிகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் வேலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
பெருந்தொழில் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் தரவும், அவற்றிடம் நீக்குப் போக்குடன் நடந்துகொள்ளவும் வங்கி களுக்கு இந்த அரசும் ஊக்குவிப்புகளை அளித்ததால், பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பி அளிக்காதபோதும் அரசு வங்கிகள் மெத்தனமாக இருந்தன. பெரு நிறுவனங்களுக்கு அதிகம் கடன் கொடுத்தால் பொருளாதார வளர்ச்சி தொடரும் என்று அரசு நம்புகிறது.
இந்த நிலையிலிருந்து மீள, வங்கித் தொழிலுக்கான விதிகளை அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வங்கி நிர்வாகங்கள் முறை யாகக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிகளின் உயர் தலைமை தாங்கள் எடுக்கும் முடிவு களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். வங்கி களைக் கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கியும் தனது கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும்!
– ‘சித்தார்த்தன்’
நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்