ஜி எஸ் டி பெரும் பேரமா? சரணாகதியா? – பேராசிரியர் ஜெ ஜெயரஞ்சன்
ஜி.எஸ்.டி.
1.7.2017 தேதி முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. (GST) எனும் வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. goods and service tax என்பதன் சுருக்கமே GST (ஜி.எஸ்.டி) என்பது நாம் அறிந்ததே. வரிகளில் நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளன. நேர்முக வரி என்பவை நாட்டின் குடிமக்களின் வருவாய்மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி வகையைச் சார்ந்தவை. ஒரு நபரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்கொண்டு வசூலிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகள் ஆகும். மறைமுக வரிகள் என்பவை தராதரம் பார்ப்பதில்லை. ஒருவன் ஏழையா, பரம ஏழையா, நடுத்தர வர்க்கத் தினனா, பணக்காரனா, பெரும் பொருள் படைத்தவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எவராயிருந்தாலும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து பெற்றால் அரசுக்கு (மாநில/ஒன்றிய) வரி செலுத்த வேண்டும். இத்தகைய வரிகள் மறைமுக வரிகள் ஆகும். ஒருவரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் விதிக்கப்படும் வரிகள் ஏழைகளையும், பணக்காரர்களையும் ஒருங்கே நடத்தும் தன்மையினால், இவை பிற்போக்கான வரிகள் என அடையாளம் காணப்படுகின்றன. நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைப்பதில் நேர்முக வரிகள் பெரும் பங்காற்றுகின்றன. மாறாக, மறைமுக வரிகள் ஏழைகளையும் செல்வந்தர்களையும் ஒருங்கே நடத்துவதால் ஏழைகளின் வரி செலுத்தும் திறனையும் மீறி அவர்கள் மீது வரிச்சுமை சுமத்தப்படுவதால் அவை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இந்தியத் திருநாட்டின் அரசுகள் பெறும் வரு வாயில் பெரும் பங்கு மறைமுக வரிகள் வாயிலாக பெறப்படுபவையே. நாட்டின் முன்னேற்றத்துக்குச் செலவிட பணம் வேண்டும் என்பதால் அரசு வரி வசூல் செய்கிறதாம். ஏழைகளைக் கசக்கி பிழிந்து பெறப்படும் மறைமுக வரிகளைக் கொண்டு அவர்கள் வறுமையை ஒழிப்பார்களாம்; வாழ்வில் ஒளி ஏற்றுவார்களாம்.
இத்தகைய மறைமுக வரிகளை ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை இதுவரை தனித்தனியாக வசூலித்து வந்தன. ஆகையால், மறைமுக வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டது. இத்தகைய வரி செலுத்தப்பட்டனவா என்பதை நிர்வகிக்க ஒவ்வொரு மாநிலமும் விற்பனை வரித்துறையைக் கொண்டிருந்தன. ஒன்றிய அரசு அதற்கான துறையை ஏற்படுத்தி வைத்திருந்தது. நாடு பல மாநிலங்களாகவும், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வரி விதிப்புமுறை, விகிதம், கொள்கை, அமைப்பு ஆகியவற்றை கொண்டிருந்தன.
இது உள்நாட்டு சந்தை இயக்கத்தை குறைப்பதாகவும், சுதந்திர சந்தையாக இயங்க முடியவில்லை எனவும் கருதிய ஆட்சியாளர்கள், நாடு முழுவதற்குமான ஒரு மறைமுக வரிவிதிப்பு முறையை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சித்தனர். முதன் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த வாஜ்பாய் தலைமையிலான NDA அரசு இதன் விதைகளை விதைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வந்த ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி (UPI I, II) அரசுகள் இதை முன்னெடுத்துச் சென்றன. அப்போதெல்லாம் கடுமையாக இதை எதிர்த்த பாஜக, தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதை விரைவுபடுத்தி தற்போது அமல்படுத்தியும் உள்ளது. இந்த ஜி.எஸ்.டி-யினால் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 2017, ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதற்குமான தடையற்றஒருசந்தையைஉருவாக்கும்பொருட்டு மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வந்த வரி விதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததன் வாயிலாக இந்த புதிய வரிவிதிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் அதிகாரம் விட்டுக்கொடுக்கப்பட்டு அந்த இடத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்ற அமைப்பு இந்த வரியை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வந்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எல்லா மாநிலங்களின் நிதியமைச்சர்களும் உறுப்பினர்கள். மத்திய நிதியமைச்சர் இந்த அமைப்பின் தலைவர். எல்லா உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. முடிவுகள் இந்த கவுன்சிலில் எடுக்கப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும். வாக்குகள் சமமாக வழங்கப்படவில்லை. மத்திய அரசின் வாக்குக்குக் கூடுதல் கனம் வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பாக எந்த ஒரு முடிவையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் மத்திய நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கலந்து பேசி எடுக்கப்படும் முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனவும் இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றெல்லாம் போற்றிப் புகழப்படுகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் பெருந்தொழில்களைக் காப்பதிலும் அவர்களின் கருத்தாக்கங்களைத் தாங்கிப் பிடிப்பனவாகவும், பெரு முதலாளிகளுக்குச் சொந்தமானவையாகவும், ஆளும்கட்சிகளுக்கு ஆதரவளிப்பனவையாகவும் மாறிவிட்ட இச்சூழலில் இத்தகைய புகழாரங்களும் வரவேற்புகளும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
மக்களுக்கான ஊடகங்களில் பணி என்பது எந்தவொரு மாற்றத்தையும் கொள்கையையும் ஆராய்ந்து அதுகுறித்த விமர்சனங்களையும் சந்தேகங்களையும் மக்கள் முன்வைப்பதும் அதன் வாயிலாக ஒரு விவாதத்துக்கு வித்திடுவதுமாகும். அந்த வகையில் ஜி.எஸ்.டி. குறித்த நமது விமர்சனங்களை வாசகர்களுக்கு வழங்குகிறோம். வாசகர்கள் ஜி.எஸ்.டி. குறித்த தங்கள் கருத்துகளை அதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்க ஏதுவாக்கும் ஒரு முயற்சியே இக்கட்டுரை.
ஜி.எஸ்.டி: பெரும் பேரமா (great bargain )?
ஜி.எஸ்.டி. எனும் கருத்தாக்கம் மிகச் சிக்கலான ஒரு சட்டப்பிரச்சனையை எதிர்கொண்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நேரடி வரிகளை மத்திய அரசும் சில மறைமுக வரிகளைமாநிலஅரசுகளும்வசூலிக்கும்உரிமை பெற்றன. மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் நடுவண் அரசின் செலவு போக மீதமுள்ள தொகையைப் பகிர்ந்தளிக்கும் நிதி (Divisible pool ) என்று அழைப்பர். இந்த நிதி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். எதன் அடிப்படையில் பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நிதிக்குழு அமைக்கப்படும். அக்குழு, மாநிலங்களில் நிதித் தேவைகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து, அவற்றின் வளர்ச்சிப் போக்கையும் கணக்கில்கொண்டு ஒரு சூத்திரத்தை வகுக்கும். இதன் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்கும் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ஒன்றியத் தொகுப்பு நிதி பிரித்தளிக்கப்படுகிறது.
இந்த ஏற்பாட்டினால் வளர்ந்த மாநிலங்கள் பலவும் மத்திய தொகுப்பு நிதியை இழந்த வரலாறு நம் கண்முன்னே உள்ளது. எடுத்துக் காட்டாக, தமிழகம் பொருளாதாரவளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. அதேவேளையில் தனது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும், நிதி மேலாண்மை மிகவும் ‘பொறுப்புடன்’ பற்றாக்குறையின் அளவை முன்பே சட்டப்படிதீர்மானிக்கப்பட்ட அளவினை மீறாமல் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து தமிழகம் தொடர்ந்து தனது பங்கை இழந்தே வந்துள்ளது. இச்சூழலில் அம்மாநிலத்தின் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த தனது சொந்த நிதி ஆதாரங்களை மட்டுமே சார்ந்து செயல்பட வேண்டிய நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய நிலை. ஆனால், பலவகைகளில் பின்தங்கிய மாநிலங்கள் தொடர்ந்து மேலும் மேலும் கூடுதலான நிதியை மத்திய தொகுப்பில் இருந்து பெறும் வண்ணமே நிதி பகிர்ந்தளிக்கும் சூத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் விளைவாக மத்தியஅரசிடமிருந்து தமிழகத் திலிருந்து செல்லும் நிதியைவிட அதனிடமிருந்து தமிழகம் பெறும் நிதி குறைவு.
ஒரே நாடு, ஒரே வரி என்ற தாரக மந்திரத்தைச் செயல்படுத்தும் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தலினால், தமிழகம் மறைமுக வரி விதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்த நிதிக்குழு நேரடி வரித்தொகுப்பை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்போதே தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் வெறும் கையோடு திரும்பும் நிலை ஏற்படுகிறது.
மறைமுக வரிகளை ஒருங்கிணைந்து செயல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. குறித்த அனைத்து முடிவுகளையும் ஜி.எஸ்.டி. குழு எடுக்கிறது.
வரிவிதிக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் விட்டுக்கொடுத்ததனால் மட்டுமே ஜி.எஸ்.டி. சாத்தியமானது. இதனைக் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு மைல்கல் என ஜி.எஸ்.டி. ஆதரவாளர்கள் பலரும் புகழ்கின்றனர். எமது கேள்வி… மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளன என்பது சரி. பேரம் என்றாலே இரு சாரரும் விட்டுக்கொடுப்பதாகும். மத்திய அரசு எதை விட்டுக் கொடுத்துள்ளது? கூட்டாக முடிவுகள் எடுக்கப்படும் எனத் திரும்பத் திரும்பக் கூறினாலும் மத்திய அரசு வீட்டோ உரிமையைப் பெற்றுள்ளதையும் அதன் வாக்கின் எடையையும் மறக்கலாகாது. ஆக, மாநிலங்கள் தங்கள் வரி உரிமையை இழந்துள்ளன. ஒன்றிய அரசு இதுவரை அதனிடம் இல்லாத வீட்டோ உரிமையைப்பெற்றுள்ளது.இதுதான்கூட்டாட்சித் தத்துவமா? இதுதான் பேரம் நடத்தும்விதமா? இதை எதனடிப்படையில் great bargain எனப் புகழ்கின்றனர்?உண்மையைக்கூறினால்இதுஒரு great surrender (பெரும் சரணாகதி) என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
மாநில அரசுகள் தங்களது மறைமுக வரி விதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்தது போல், ஒன்றிய அரசு தனது உரிமையான நேரடி வரிவிதிப்பை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டாமா? இப்போது ஜி.எஸ்.டி-யில் மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி. என இரண்டு வரிகள் இருப்பதுபோல் நேரடி வரியிலும் இரு பகுதிகள் என்ற ஒருமுறை உருவாக்கப்பட்டு மாநிலங்கள் வசூலிக்கும் மாநிலத்தின் நேரடி வரிவிதிப்பைஅவர்கள் வசமே என விட்டிருந்தால் அது கூட்டாட்சி. இப்போது நடைபெற்றிருப்பது சரணாகதியே.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜி.எஸ்.டியை தீவிரமாக எதிர்த்தார். (எதற்காக என்பதை யார் அறிவார்?) ஆனால், அவர் மறைந்தபின் மத்திய அரசிடம் முழுவதுமாக சரணடைந்த தமிழக அரசும் அமைச்சரவையும், ஆளும் கட்சியும் ஜி.எஸ்.டி-க்கு சத்தமே இல்லாமல் ஆதரவாக மாறியதைப் பெரும் சரணாகதியின் ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ளலாம். மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசியும் போராடியும் வந்த நீஜீமி(வி) போன்ற கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை ஏன் மாற்றிக் கொண்டன? கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஜி.எஸ்.டி. கவுன்சல் கூட்டத்தில் பறிபோகும் மாநில உரிமைகள் குறித்து எடுத்துரைத்தாரா? மற்ற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? எதன் அடிப்படையில் ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேறி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது?
பேரங்களில் கண்ணுக்குப் புலப்படுபவை போலவே கண்ணுக்குப் புலப்படாதவையும் இருப்பது வாடிக்கை. அது என்ன புலப்படாத பேரங்கள் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளத் தான் வேண்டும். அதுகுறித்து பொதுவெளியில் எந்தத் தகவலும் இல்லை என்பது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமைகள் பறிபோனது கொண்டாடப்படுகிறதேயன்றி உரிமைக்குரல் எங்கும் கேட்கவில்லை என்பது உண்மை.
பேரத்தின் இரு கூறு மட்டும் பொதுவெளியில் உள்ளது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முழுவதுமாக ஈடுகட்டப்படும் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சரி, ஐந்து ஆண்டுகளுக்குப்பின் என்ன நிலவரம்? மாநில அரசுகள் தங்கள் நிதித் தேவைக்கு என்ன செய்யப்போகின்றன? இந்திய ஒன்றியத்துக்கே முன்னோடியாக எண்ணிலடங்கா திட்டங்களை நெடுங்காலமாகத் தமிழக அரசு தனது சொந்த வரி வருவாயிலிருந்து செய்து வந்தது. மதிய உணவுத் திட்டமாகட்டும், எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பாகட்டும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையிலும் பின்னர் இலவசமாகவும் அளிக்கப்படும் அரிசியாகட்டும் என இன்னும் எத்தனை எத்தனையோ திட்டங்கள். இதுபோன்ற முற்போக்குத் திட்டங்கள் புதிய சூழலில் எப்படிச் சாத்தியமாகும்? இத்தகைய அச்சங்களை நீக்கும் பேரமாகத் தற்காலிகமாக பெட்ரோலியப் பொருள்கள் மீதானவரிமற்றும் சாராயத்தின் மீதான வரி ஆகிய இரண்டையும் ஜி.எஸ்.டி-க்கு வெளியே வைத்திருக்க ஒன்றிய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. ஒரு முழுமையான ஜி.எஸ்.டி. அல்ல. ஆனால் இந்த ஏற்பாடு தற்காலிகமானதுதான். நாளையே ஜி.எஸ்.டி. குழு இப்பொருள் மீதான வரி விதிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ள முடிவு செய்தால் மாநிலங்கள் என்ன செய்யும்? எதிர்க்குமா? எதிர்த்து நிற்க முடியுமா? காலம்தான் பதில் சொல்லும்.
கட்டுரையாளர் குறிப்பு :
(ஜெ.ஜெயரஞ்சன், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன. இந்திய அரசும், தமிழக அரசும் இவரது ஆய்வுகளை, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றன.)
நன்றி : மின்னம்பலம்
நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்