பொதுத் தொண்டு ஒன்றே பெருமையைச் சேர்க்கும்
ஒருவன் தனக்காக என்று ஏதேனும் காரியம் செய்து கொள்வதென்றால் அக்காரியம் பொதுமக்களுக்கான நற்காரியத்தைச் செய்து, அவர்களுடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாவதுதான்; இம்மாதிரிப் பலர் கூடி தன் மறைவுக்காக வருத்தப்படும் அளவுக்குப் பொதுத் தொண்டு ஆற்றுவது தான்.இதுவே ஒருவன் தனக்கெனச் செய்து கொள்ளும் காரியமாகும். மற்ற காரியமெல்லாம் தன் மனைவி மக்களுக்காகச் செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட போதிலும் அவை ஊருக்குச் செய்யப்பட்டதாகத்தான் கண்டவர்களுக்குச் செய்ததாகத்தான் போய்விடும். ஒருவன் எவ்வளவு தான் சொத்துச் சேர்த்து வைத்துவிட்டுப் போனாலும் அது அவனுக்குப் பெருமை அளிக்காது; அதற்காக அவனுக்கு யாரும் மரியாதை செய்யவும் மாட்டார்கள். அச் சொத்து, மறைவின் போது அவனுடன் செல்வது இல்லை.
ஒவ்வொருவரும் எந்த வகையில் இருந்தாலும், தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை, உழைப்பின் ஒரு பகுதியை, ஊதியத்தின் ஒரு பகுதியை , பொதுத் தொண்டிற்காக, ஏனைய மக்களுக்காகச் செலவிட வேண்டும். அதுதான் தனக்கென்று செய்து கொள்வதாகும்; மறைந்த பிறகும் தன் பெயர் நிலைத்து நிற்கச் செய்து கொள்வதாகும்.
என் தமையனார் இந்த வகையில் தொண்டாற்றி உங்களுடைய பற்றுதலைப் பெற்றிருக்கிறார். எனவே தான் அவருடைய மறைவுக்காக நீங்கள் வருத்துகிறீர்கள். ஒரு நாளைக்குத் தம் ஆஸ்பத்திரிக்கு ஒரு 150 பேர் வந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு பேருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தது என்று அவர் அவ்வளவு பூரிப்படைவார். அவர் அரிய காரியம் ஏதும் செய்துவிடவில்லை என்றாலும் அவருடைய எண்ணம் கருத்து அதுவாகவே -பொதுநலத் தொண்டு செய்ய வேண்டுமென்றே ஆர்வமாகவே இருந்தது. நீங்களும் அம்மாதிரியான ஆர்வம் பெற்று எல்லோருடைய வாழ்வும் சிறக்கப் பாடுபட வேண்டும். உங்களுடைய அனுதாபமும் புகழுரைகளும் எங்களுக்கு மிக ஆறுதலைத் தந்திருக்கின்றன. இதற்காகவும் நாங்கள் நன்றி செலுத்திக் கொள்ளுகிறோம்.
பெரியாரின் தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி இரங்கல் கூட்டத்தில் பேசியது. (விடுதலை -07.02.1950)
நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்