விநாயகர் ஊர்வலத்தைத் எதிர்த்து பெரியார் கைத்தடி ஆர்ப்பாட்டம்: கைது!
“மதத்தை அரசியலாக்காதே; சுற்றுச் சூழலை சீரழிக்காதே; மக்கள் உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க.வின் பரிவாரங்கள் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலங்களை புறக்கணிப்பீர்” என்ற முழக்கங்களோடு பெரியார் கைத்தடிகளை ஏந்தி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி ‘அய்ஸ் அவுஸ்’ பகுதியில் ஆக.31, பிற்பகல் 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலம் நடந்த அதே நாளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு 9 மணி வரை திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டனர். 110 தோழர்கள் கைதானார்கள். விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள், புதுவையிலிருந்து பெரியார் சிந்தனை முன்னணியைச் சார்ந்த தீனா உள்ளிட்ட தோழர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் பார்த்திபன், ஜாதி ஒழிப்பு முன்னணி ஜெயநேசன், தமிழக மக்கள் முன்னணி அரங்க. குணசேகரன் காஞ்சி மாவட்டத்திலிருந்து ரவி பாரதி, கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, வேழ வந்தன், அய்யனார், தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகர், ஏசு குமார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 07092017 இதழ்