தோழர் கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!!
தோழர்.கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்!
மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!!
*************************
முத்துராமலிங்கத்தைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதாக தோழர்.கொளத்தூர் மணி மீது இந்து மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட சாதி வெறியர்கள் தங்களது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முத்துராமலிங்கம் குறித்த அவரது பேச்சிற்கு சாதிப் பாசம் அப்பட்டமாக வெளிப்படும் வண்ணம்
இதுகாறும் தங்களை முற்போக்காளராகக் காட்டி வந்த பலரும் ்எதிர்வினையும் அறிவுரையும் வாரி வழங்கி வருகிறார்கள். முத்துராமலிங்கத்தைப் முக்கி முக்கி புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்நிலையில் சாதிவெறித்தனத்தின் உச்சபட்ச நடவடிக்கையாக தோழர்.மணி கடந்த 01.08.2017 அன்று மதுரைக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.
முத்துராமலிங்கம் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர். சனநாயகப்பூர்வமாக சாதியாதிக்கத்திற்கு எதிராக தனது தன்மான உணர்வை வெளிப்படுத்திய காரணத்திற்காகவே இமானுவேல் சேகரனை கொலை செய்வதற்கு துணை நின்றவர். தன் சாதியைச் சார்ந்த அப்பாவி உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியூட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியவர். இதனால் மறவ்ர்,பள்ளர் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே தீராத பகைமையை உருவாக்கி இருதரப்பிலும் தொடர் கலவரங்களும், களச்சாவுகளும் ஏற்பட காரணமானவர். சம காலத்தில் எழுதப்பட்ட முதுகுளத்தூர் கலவரம், முதுகுளத்தூர் பயங்கரம் என்கிற இரண்டு ஆவணங்களும், பத்திரிகை செய்திகளும் இதனைத் தெள்ளத் தெளிவாக முன் வைத்திருக்கிறது.
1957, செப்டம்பர்,11-ல் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டதிற்கு பின்னிட்டு தொடர்ந்த முதுகுளத்தூர் கலவரத்தில் பள்ளர்கள், மறவர்கள் என இருதரப்பிலும் தொடர்ந்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. இமானுவேலின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய செப்.14-ல் கீழத்தூவல் கிராமத்திற்கு சென்ற காவல்துறை படுபயங்கரமான துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்தி கலவரம் செய்தவர்கள் என மறவர் சமூகத்தவர்கள் 5 பேரைக் கொலை செய்கிறது. அதனைத் தொடர்ந்து பள்ளர்கள், மறவர்கள் இரு தரப்பிலும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளனர்.
ஆனால் கலவரத்திற்கு முழுமுதற் காரணமான முத்துராமலிங்கத்தை மிகத் தாமதமாகக் கைது செய்து சிறையிலடைத்தது அன்றைய காமராசர் அரசு. பின்னர் அவர் வழக்கில் வழக்கம் போல விடுவிக்கப்பட்டார். ஆளும் வர்க்கம் எப்போதுமே தன்னுடைய விசுவாசிகளைக் காப்பாற்றுவதில் தெளிவாக இருக்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. ஆனால், நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதாலேயே முத்துராமலிங்கம் யோக்கியமானவர் என்றும், வன்கொடுமை நடக்கவில்லை என்று ஒரு கூட்டம் கூவித் திரிகிறது. ஆக மக்கள் தாமாகவே வெட்டிக் கொண்டார்கள் என்று நாமே தீர்ப்பு எழுதிக் கொள்ளவேண்டும் என்பது அவர்களது விருப்பம்.
நிலவுடைமைச் சாதியமைப்பில் சுரண்டல் சக்திகள் தங்களுடைய சுரண்டல் நலனைப் பாதுகாப்பதற்காக அப்பாவி உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியூட்டி மோதலை உருவாக்கித் தங்களது ஆதிக்கத்தையும், சுரண்டலையும் பாதுகாத்துக் கொள்வர். இத்தகைய உக்தி என்பது ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான போட்டியில் மிகப் பெரிய அளவில் வெளிப்படும். அதைத்தான் காங்கிரசும், முத்துராமலிங்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு செய்தார்கள். ஆனால், பாதிப்பு முழுவதும் அப்பாவி பள்ளர்- மறவர் உழைக்கு மக்களுக்குதான்.
தோழர்.மணி தன்னுடைய உரையில் மிகத் தெளிவாக பெரியாருக்கும், காமராசருக்கும் இடையிலான உரையாடல்களை விவரிக்கிறார். மக்கள் மீதான கலவரங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேசுகிறார். கீழத் தூவல் துப்பாக்கிச் சூடு குறித்து பேசுகிறார். முதலிலேயே முத்துராமலிங்கத்தை சிறையில் அடைத்திருந்தால் கலவரமே நடந்திருக்காது என்கிறார். முத்துராமலிங்கத்திற்கு இதில் என்ன மரியாதைக் குறைவு ஏற்பட்டுவிட்டது.
முத்துராமலிங்கம் சாதியத்தைக் ஏற்றுக் கொண்டவர், சாதிய வன்மத்தை கொள்கையாக பின்பற்றியவர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரநிதியைத் தன்னை எதிர்த்தார் என்பதற்காக கொலை செய்தவர், கலவரங்களைத் தூண்டியவர், அப்பாவி மறவர், கள்ளர் சாதி மக்களைக் கலவரங்களுக்கும், அரச வன்முறைக்கும் பலி கொடுத்தவர், இன்றளவும் மறவர், கள்ளர் சாதி உழைக்கும் மக்கள் தங்கள் மீதான பார்ப்பனிய சுரண்டலை உணரமுடியாத அளவிற்கு சாதி வெறி போதையூட்டியவர், பார்ப்பனியத்தின் மீது எவ்வித விமர்சனமும் இல்லாதவர், நேதாஜியின் இந்திய தேசியக் கனவைத் தமிழகத்தில் நிறைவேற்றுவதற்கு துணை நின்றவர், பொய்களை மட்டுமே உரையாகப் பேசித் தள்ளியவர், இரு பிறவி வர்ணத்தாருக்கு சேவை செய்வதை தன்னுடைய கொள்கையாகக் கொண்டவர், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும், அதன் தலைமைக்கும் தமிழகத்தில் செயற்களம் அமைத்துக் கொடுத்தவர் போன்ற காரணங்கள் மட்டும் போதாதா? முத்துராமலிங்கம் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர் என்பதற்கு….
ஒரு மக்கள் விரோதியை விமர்சித்ததற்காக தோழர்.கொளத்தூர் மணியின் மீதான இத்தகைய அவதூறுகள், அடக்குமுறைகள் ஆகியவை நடக்கிறது என்றால் அது ஆர்.எஸ்.எஸ்-சின் பின்புலத்தோடுதான் நடக்கிறது என்பதைக் கூட சில சோசலிச? அறிவு ஜீவிகள் புரிந்து கொள்ளவில்லை (நடிக்கிறார்கள்). சங்க பரிவாரத்தின் கைக்கூலிகளான சில சாதிச் சங்கங்கள், அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த விவகாரத்தைப் பெரிதுப்படுத்தி அறுவடை செய்ய முயற்சிப்பது அதனை உறுதிப் படுத்துகிறது.
முத்துராமலிங்கத்தை விமர்சித்தால் கள்ளர், மறவர் போன்ற சாதி மக்களைத் திரட்டவும், அரசியல் பேசவும் முடியாது என சில முற்போக்காளர்கள் புலம்புகின்றனர். உண்மையில் அவர்களின் உள்ளத்தில் இருப்பது மக்களைத் திரட்டும் விருப்பம் அல்ல சொந்த சாதி உணர்வே! தங்களது உள்ளக் கிடக்கையை பொது சமூகத்தின் உணர்வாக பிரதிபலிக்க முத்துராமலிங்கத்தின் செயல்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முற்போக்காக மாற்ற முயற்சிக்கின்றனர். ஒரு பிச்சைக்காரர் தனக்கு பிச்சைப் போடுபவரைப் பார்த்து “மகாபிரபு” என விளிப்பது போலுள்ளது அவர்களின் செயல்பாடு..
முத்துராமலிங்கம் தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கான அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகி நின்றவர். தமிழ்ச் சமூகத்தின், உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் தீர்வெதுவும் முன் வைக்காதவர். சாதிகளற்ற சமத்துவ சமூகத்தை தமது விருப்பமாக விளம்பாவதவர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவிற்கு அவர் துணை நின்றதாகவும், நிலங்களைக் கொடுத்ததாகவும் கூறி அவரை சாதி வேறுபாடு பார்க்காதவர் எனவும், தர்மபிரபு எனவும் நிலைநிறுத்தப் பாடுபடுகின்றனர். கோவில் நுழைவு என்பது காந்தி-காங்கிரசின் தீண்டாமை ஒழிப்பு செயல்திட்டம். அந்த வகையில் மதுரை வைத்திய நாத அய்யர் தலைமையில் 1939-ல் நடைபெற்ற மீனாட்சி கோவில் நுழைவிற்கு இராஜாஜியின் உத்தரவின் பேரில் முத்துராமலிங்கம் உதவி செய்ததாகத்தான் வரலாற்றுச் செய்தி. அவர் அந்த போராட்டத்திற்கு அணிதிரட்டவும் இல்லை. தலைமைத் தாங்கவும் இல்லை. வேறெங்கவும் அதனை விரிவு படுத்தவுமில்லை. ஏனெனில் அது அவரது செயல்திட்டம் அல்ல. காந்தி வர்ணாசிரம தர்மத்தை தன்னுடைய உயிர் மூச்சாக விளம்புகை செய்து தீண்டாமையை மட்டும் எதிர்ப்பதாக நாடகமாடிய நிலையில் அடையாளத்திற்காக வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஒரு செயலை முத்துராமலிங்கத்தின் மிகப்பெரும் புரட்சியாகக் கூறுவது வரலாற்றுக் கயமைத்தனம் அன்றி வேறல்ல..
தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கான அரசியல் இயக்க மரபுகளில் தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் அப்பட்டமான சனாதனவாதியாக, மத நம்பிக்கையாளராக, சாதி வெறியராக வாழ்ந்த முத்துராமலிங்கத்தை மக்கள் நலன் விரும்பியாக முன்னிறுத்துவது எந்த வகையிலும் சரியானதல்ல. முத்துராமலிங்கத்தின் காலம் முடிந்து விட்ட ஒன்று. அவர் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்றது சாதிய உணர்வைத்தானே தவிர வேறல்ல. அவரை வைத்து இன்றைக்கும் அப்பாவி கள்ளர், மறவர் சாதி உழைக்கும் மக்களை சாதி வெறியூட்டி பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து வருகிறார்கள். பிற சாதி உழைக்கும் மக்களோடு மோத வைக்கிறார்கள். எனவே முத்துராமலிங்கம் ஒரு சாதிக் கலவர பிம்பம்.
பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் பிற்போக்கு அடையாளங்களையும், நபர்களையும் மக்கள் முன்னால் முன்னிறுத்தி வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்துதான் பகிரங்கமாக முத்துராமலிங்கத்தை விமர்சனம் செய்கிறார்கள். தோழர்.மணியும் அதைத்தான் செய்துள்ளார். அவர் விமர்சித்தது பார்ப்பனியத்தின் சூத்திர எடுபிடியை. உழைக்கும் மக்களின் தலைவரையல்ல.
மலரவன் ஆர்தர் முகநூலில்