20 நாள் “சுயமரியாதை-சமதர்ம”ப் பரப்புரைப் பயணம் தொடருகிறது ஜாதி சங்கங்களை புறக்கணிக்க வேண்டுகோள்!

ஒரு காலத்தில் ஜாதி சங்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தன. இப்போது ஜாதி சங்கங்கள் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, பாhர்ப்பனியத்தை நிலை நிறுத்தவும் தங்களைத் தலைவர்களாக நிலைநிறுத்திக் கொள்ளவும் வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவுமே பயன்படு கின்றன. அதே வேளையில் ஜாதிக் குழுவைச் சார்ந்த அனைவருமே ஜாதி சங்கங்களை ஏற்க வில்லை. அதை எதிர்க்கும் ஜாதி எதிர்ப்பாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒவ்வொரு ஜாதியிலும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஜாதி எதிர்ப் பாளர்கள் துணிவுடன் வெளியே வந்து ஜாதி வெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று பரப்புரைக் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வலியுறுத்தினர்.

ஜூலை 24ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை சுயமரியாதை-சமதர்மப் பரப்புரைப் பயணத்தின் நிகழ்வுகள் கடந்த வாரம் வெளி யிடப்பட்டிருந்தன. ஜூலை 29ஆம் தேதியி லிருந்து ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நடந்த பயணத்தின் செய்தித் தொகுப்பு:

ஜூலை 29

காலை 11 மணிக்கு துறையூர் பேருந்து நிலையத்தில் பறைமுழக்கம், வீதி நாடகத்துடன் பிரச்சாரம் தொடங்கியது, பெரம்பலூர் தோழர் கண்ணையன், திருப்பூர் மணிகண்டன் ஆகியோர் பாடல் பாடினர். சிவக்குமார், பால்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

துண்டறிக்கை அச்சடித்த அச்சகத்திற்கு தர வேண்டிய தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக தோழர் சிவக்குமாரும், தோழர் துரை.தாமோதரனும் பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்குச் சென்றனர். தோழர்கள் இருவரும் கருப்புச் சட்டையில் இருந்ததைப் பார்த்த, அந்த வங்கியின் பார்ப்பன காசாளர், அவர்கள் கொண்டு சென்ற பணம் பத்து ரூபாய் தாள்களாக உள்ளது (கடைவீதி வசூல் செய்தது) என்று சாக்குக் காரணம் சொல்லி வாங்க மறுத்தார். தோழர்கள் இருவரும் வங்கியின் மேலாளரிடம் முறையிடவே, மேலாளர் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். வேண்டாவெறுப்பாக பணத்தை வாங்கிய காசாளர், ரூபாய் நோட்டுகள் அழுக்காக உள்ளது என்ற ஒரு காரணத்தைக் கூறி, மீண்டும் வாங்க மறுத்து மேலாளரிடம் சென்றார். அவர் வாங்கிக் கொள்ளு மாறு மீண்டும் அறிவுறுத்தியதற்குப் பிறகு தான் பார்ப்பனக் காசாளர் அந்தப் பணத்தை வாங்கினார். அப்போதும் கூட நீங்கள் போய் இருக்கையில் அமருங்கள் நான் பிறகு கூப்பிடுகிறேன் என்றார். சற்று நேரம் பொறுத்த தோழர் சிவக்குமார், எனக்குப் பின்னால் வந்தவரைக் கூப்பிடுகிறீர்கள், என்னை ஏன் காத்திருக்கச் சொல்கிறீர்கள் என்று சத்தம் போட்ட பிறகு தான் நமக்குரிய ரசீதைத் தந்தார். பெரியார் மீதும் கருப்புச் சட்டை மீதும் பார்ப்பனர்கள் எவ்வளவு வெறுப்பை இன்னமும் காட்டுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். மதியம் அசைவ உணவு ரயில் நிலையம் அருகில் உள்ள சுப்பிரமணி மஹாலில் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு குளித்தலை பேருந்து நிலையம் அருகில் இயக்கக் கொடியேற்று விழா நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். தோழர்கள் துண்டறிக்கைகளை விநியோகித்து கடைவீதியில் வசூல் செய்த வகையில் ரூ.2570/- வசூலானது.

மாலை 6 மணிக்கு குளித்தலை சுங்கச்சாவடி அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சத்திய சீலன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாபு (எ) முகமது அலி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தோழர் காமராஜ் வரவேற்புரை யாற்றினார். இயக்க ஆதரவாளர் தோழர் தமிழ் நெஞ்சன், பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ஈரோடு மண்டலச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தலைவர் தனது சிறப்புரையில், “இந்துக்களே ஒன்றாகச் சேர்வீர் என்று கூக்குர லிடும் இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராக வேண்டும் என்று போராட முன் வருமா? அவ்வாறு வந்தால் திராவிடர் விடுதலைக் கழகமும் அவர்களுடன் சேர்ந்து போராடத் தயார்” என்று அறிவித்தார்.

புரட்சியாளர் ஜோதிபாவ் புலே பற்றிக் குறிப் பிடும் போது, பெண்களுக்கென அக்காலத்திலேயே பள்ளிகளை நிறுவியவர், தனக்குச் சொந்தமான கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்களை நீர் எடுக்க அனுமதித்தவர் என்று கூறினார். ராஜாஜியின் மோசடித் தனமான குலக்கல்வித் திட்டம் பற்றி விளக்கிக் கூறிய கழகத் தலைவர், பச்சைத் தமிழன் காமராசரின் சிறப்புகளையும் அவர் தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்த நன்மைகளையும் பட்டிய லிட்டார். அறநிலையத் துறை அமைச்சராக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பரமேஸ்வரனை நியமித்ததையும், உள்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கக்கனை நியமித்ததையும் நினைவு கூர்ந்தார்.  அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த ராமசாமி செட்டி யாருக்கு திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் கையில் விபூதி கொடுக்க மறுத்து அங்கிருந்த கல்தூண் மேல் கொட்டியதையும், பிறகு திமுக அமைச்சரான நெடுஞ்செழியன் அதே திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் கொடுத்த விபூதியை பூச மறுத்து, அங்கிருந்த கல்தூண் மேல் கொட்டியதையும் குறிப்பிட்டார்.

இன்றைக்கு பிற்படுத்தப்பட்டோருக்கென்று சாதிக் கட்சிகள் நடத்தும் தலைவர்கள் தங்கள் மக்கள் மத்திய அரசுப் பணிகளில் மிகக் குறைந்த அளவில் உள்ளதை எதிர்த்து, தங்கள் சமூக மக்களுக்கும் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடாமல், சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிப்பதை எடுத்துக் கூறி, மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார். இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் மோகன் தாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த், வினோத், ரஞ்சித், சக்திவேல், கௌதம், பூமணி, மலைக்கொழுந்தன், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு சுப்பிரமணி மஹால் மண்டபத்தில் தோழர்களுக்கு முட்டையுடன் கூடிய சைவ பிரியாணி வழங்கப்பட்டது.

ஜூலை 30

காலையில் தோழர்கள் குளித்தலை காவிரி ஆற்றில் குளித்து அதன் பிறகு புறப் பட்டனர். கரூர் செல்லும் வழியில் உள்ள புலியூரில் தோழர்களுக்கு மாவட்டத் தலைவர் தோழர் பாபு (எ) முகமது அலி இல்லத்தில் காலை உணவு வழங்கப் பட்டது. அங்கிருந்து தோழர் கள் கொடுமுடி நோக்கிப் புறப்பட்டனர். ஈரோடு எல்லையில் கழக வாகனத்தை வழிமறித்த காவல்துறையினர் உங்களுக்கு கொடு முடியில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. எனவே நீங்கள் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறியதோடு, வாகனத்தின் பின்னேயே கொடுமுடி வரை வந்தனர். தோழர்கள் கொடுமுடியில் துண்டறிக்கை களை விநியோகித்து, கடை வீதி வசூல் செய்ததோடு, ஒவ்வொரு கடையிலும் பிரச்சாரமும் செய்தனர்.  வாகனம் கிளம்பும் வரை கூடவே இருந்த காவல்துறையினர் பின்னர் அங்கிருந்து திருச்செங் கோடு புறப்பட்ட வாகனத்தை, நாங்கள் சொல்லும் பாதையில் தான் செல்லவேண்டும் என்று கெடுபிடி செய்ததோடு ஈரோடு மாவட்ட எல்லை வரை கூடவே வந்தனர்.

மதியம் 2.30 மணிக்கு தோழர்கள் திருச்செங் கோடு வந்தடைந்தனர். தோழர் நித்தியானந்தன் இல்லத்தில் நடைபெற்ற பெரியார் அம்பேத்கர் படத்திறப்பிற்குப் பின், மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பின், தேநீர் அருந்திவிட்டு தோழர்கள், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். பிறகு பள்ளிபாளையம் செல்லும் வழியில் அண்ணா நகர் பகுதியில் தோழர் ரமேஷின் தந்தையாருக்கு செய்யப்பட்டிருந்த அறுவை சிகிச்சை குறித்து கழகத் தலைவர் அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார்.

மாலை 5.30 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரை யாற்றினார். அங்கிருந்து தோழர்கள் குமாரபாளையம் கிளம்பினர். வழியில் திருப்பூர் துரைசாமி, பால். பிரபாகரன் ஆகியோர் வந்த வாகனத்தை நிறுத்திய பள்ளிபாளையம் செந்தில்குமார் என்பவர், “நான் உங்கள் இயக்கத்தின் மேல் மிகப் பெரும் மதிப்பு உள்ளவன், எந்த வித சுயநலமும் எதிர்பார்ப்பும்  இல்லாமல், பெரியாரின் கொள்கையில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் செயல்படும் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்” என்று கூறி, நீங்கள் கட்டாயம் என்னுடன் தேநீர் அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கூறி தேநீர் வழங்கினார்.

மாலை 7 மணிக்கு குமாரபாளையத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாமி நாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாணவர் கழக ஈரோடு மண்டல அமைப்பாளர் வெங்கட் வரவேற் புரையாற்றினார். கேப்டன் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் வைரவேல், தண்டபாணி, கலைமதி, மணியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முனைவர் ஜீவானந்தம், ஈரோடு மண்டலச் செய லாளர் இராம.இளங்கோவன் ஆகியோர் உரை யாற்றினர். கூட்டத்தில் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தோழர்கள், ஒவ்வொரு தோழர்களும் சிறப்புரையாற்றுவதற்கு முன்பாக, இடையிடையே எழுந்து பறையடித்து, “இணைவோம் ஒன்றாய் இணைவோம், அழிப்போம் பார்ப்பனியத்தை அழிப்போம், படைப்போம் சமத்துவ சமுதாயம் படைப்போம்” என்று கூறி மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு வித்தியாசமான பிரச்சார உத்தியாக இருந்தது.

இறுதியாக பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் உரையாற்றினார். பார்ப்பனர்கள் அன்றைக்கு உருவாக்கிய மனுசாஸ்திர கோட் பாடுகளை வைத்து இன்றைக்கும் பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் விமர்சனம் செய்வது சரியாக இருக்குமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பி, இன்றைக்கும் பார்ப்பனர்கள் கடைநிலை வேலையைச் செய்கிறார்களா? செய்ய முன் வருவார்களா? என்று கேட்டு பார்ப்பனியம் நம்மை எப்படி யெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று விளக்கிக் கூறினார். கழகத் தலைவர் தனது உரையில், தனியார் நிறுவனங்கள் பெயருக்குத் தானே தனியார் நிறு வனங்களே தவிர, உண்மையில் அவை பொது மக்களின் பணத்தைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தான் என்பதை விளக்கிக் கூறினார். மேலும் அவர் பேசும் போது சாதியத்திற்கு எதிராக மக்கள் எவ்வாறு  அணி திரள்வது என்பது பற்றியும், சாதி தலைவர்களை மக்கள் புறக் கணிக்க வேண்டியதன் அவசி யத்தையும் விளக்கினார். நகரத் தலைவர் தோழர் தண்டபாணி நன்றியுரை கூறினார். இரவு உணவு பெருந்தொண்டர் தோழர் திராவிடமணி இல்லத்தில் நகரக் கழகம் சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது. தோழர்கள் பவானி  கூடுதுறையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜூலை 31

காலை 9 மணிக்கு இயக்க ஆதரவாளர் ஆசிரியர் முருகேசன் காலை உணவு வழங்கினார். பிறகு பவானி அந்தியூர் பிரிவில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. பரப்புரைச் செயலாளர் தோழர் பால். பிரபாகரன் உரையாற்றினார். பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் பி.பெ அக்ரஹாரத்தில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பெருமாள் அவர்களின் இல்லத்தில் தோழர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு மரப்பாலம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரமும், கொடியேற்று விழாவும் நடைபெற்றது. ஈரோடு மாநகரச் செயலாளர் தோழர் சிவானந்தம் வரவேற்புரையாற்றினார். மரப்பாலம் பகுதித் தோழர் சத்தியமூர்த்தி பயணத்தை வாழ்த்திப் பேசினார். கழகக் கொடியை பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஏற்றி வைத்து பயணத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தோழர் ரமேஷ் நன்றியுரை கூறினார். தோழர்கள் அங்கிருந்து கிளம்பி பெரியார் நினைவிடத்திற்குச் சென்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடிய தோழர்கள் என்பதால் ஆவலுடன் பெரியார்-அண்ணா நினைவிடத்தை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மதியம் 2.30 மணிக்கு கழகத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக பிரமுகருமான தங்கராசு இல்லத்தில் தோழர்களுக்கு சிக்கன் பிரியாணியும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு சென்னிமலை செல்லும் வழியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கழகக் கொடியேற்று விழாவும் கிளை திறப்பு விழாவும் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் பெரியார் இயக்கத்தின் அவசியம் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் பேசினார். ஏராளமான ஊர் மக்கள் திரண்டிருந்தனர். (அண்மையில் அப்பகுதியில் நடந்த சுடுகாட்டுப் பிரச்சினையில் அப்பகுதியைச் சார்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். இயக்கத்தின் முயற்சியால் அவர்கள் பிணையில் வெளிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.) பிறகு அருகில் உள்ள கே.ஜி வலசு பகுதியில் தெருமுனைப் பரப்புரை நடைபெற்றது. அடுத்ததாக கருங்கவுண்டன்வலசு பகுதியில் கொடியேற்று விழாவும் கிளை திறப்பு விழாவும் நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். பொதுச் செயலாளார் விடுதலை இராசேந்திரன் கொடியேற்றினார். சென்னிமலை ஒன்றியத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

மாலை 7 மணிக்கு சென்னிமலை பேருந்து நிலையத்தில்  பொதுக் கூட்டத் திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தெருமுனைக் கூட்டமாக  நடைபெற்றது. பறைமுழக்கம் வீதி நாடகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட இளைஞரணித் தலைவர் தோழர் சுப்பு கொள்கைப் பாடல்கள் பாடினார். பள்ளி மாணவர்கள் கார்மேகம், மதுமிதா ஆகியோர் பெரியார் கொள்கை விளக்கப் பாடல்களை பாடினர். 8 ஆம் வகுப்பு மாணவி கீர்த்தனா “பெரியாரின் காலக் கணக்கீடு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.முனைவர் ஜீவானந்தம் மூடநம்பிக்கைகளை ஏன் ஒழிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். ஜாதியத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பது குறித்தும் உரையாற்றினார். சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொள்ளும் தம்பதியர் தங்கள் குழந்தைகளுக்கு தங்களில் யாராவது ஒருவரின் சாதியைக் குறிப்பிட்டுக் கொள்வதால் ஜாதி ஒழியாது. எனவே, ஜாதி மறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு ஜாதியற்றோர் என்ற பிரிவில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறினார். உச்சநீதிமன்றம் விந்திய மலைக்குத் தெற்கே பிராமணர், சூத்திரர் என்ற இரு பிரிவுகள் மட்டுமே உள்ளது என்று தீர்ப்பு கூறிய பிறகும் கூட நம்மவர்கள் இங்கு, “நான் சத்ரியன், நான் வைசியன்” என்று கூறிக் கொள்வதை குறிப்பிட்டார். அக்காலத்தில் நகரவை தலைவராக இருந்த பெரியாரின் தந்தையை பார்ப்பன பில் கலெக்டர் பெயர் சொல்லி அழைத்ததைக் குறிப்பிட்டு, அக்கால நிலைக்கும், இன்றைக்கு கால மாற்றத்தாலும் பெரியார் இயக்கங்களின் பணியாலும் இந்த நிலை மாறியுள்ளதை சுட்டிக் காட்டினார். இறுதியாக மாவட்டத் தலைவர் தோழர் செல்லப்பன் நன்றியுரை கூறினார். பிறகு தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மரவபாளையம் பகுதி தோழர் ரவிக்குமார் உணவு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

ஆகஸ்டு 1

காலை 9 மணிக்கு சென்னிமலை புதுப்பாளையம் பகுதியில் இயக்க ஆதரவாளர் குளத்து ராமு இல்லத்தில் தோழர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 10.45 மணிக்கு ஊத்துக்குளியில் தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கியது. ஆதித்தமிழர் பேரவை நிதிச் செயலாளர் நீலவேந்தன் பயணத்தை வாழ்த்திப் பேசினார். முனைவர் ஜீவானந்தம் பயணத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் அகிலன், ஈரோடு மாவட்டத் தலைவர் செல்லப்பன், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக மாவட்ட அமைப்பாளர்  பிரகாஷ், கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு கருமாரம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் நடை பெற்றது. பயணத்தின் சிறப்பான நோக்கங்களைப் பாராட்டி கழக ஆதரவாளர்கள் கருமாரம்பாளையம் வேலுச்சாமி, எழில் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கழகத் தலைவரிடம் ரூ.5000/- வழங்கினர். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். மதியம் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் தோழர்களுக்கு சிறப்பான அசைவ உணவு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு அருள்புரம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தோழர் சுப்ரமணி, அர்ஜுனன் ஆகியோர் பாடல் பாடினர். தோழர் மதுரை மாப்பிள்ளைச்சாமி (எ) லெனின் பாடலுக்குத் தகுந்தவாறு நடனம் ஆடி பொதுமக்கள் அனைவரையும் கூட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். முனைவர் ஜீவானந்தம் கொள்கை முழக்கமிட்டார். தோழர் முகில்ராசு நன்றி கூறினார்.

மாலை 6 மணிக்கு பல்லடம் சூழுசு சாலையில் வீதிநாடகம் பறை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மணிகண்டன் கொள்கைப் பாடல்கள் பாடினார். அவரின் பாடலைப் பாராட்டி அதே பகுதியைச் சார்ந்த சாந்தி என்ற பெண் ரூ 100/- அன்பளிப்பாக வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாடுகளை பெண்களும் உற்று கவனித்து வருகின்றனர் என்பதை இது உணர்த்துவதாக இருந்தது.

பொதுக்கூட்டத்திற்கு செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவையின் நிதிச் செயலாளர் நீலவேந்தன் உரையாற்றினார். அவர் தனது உரையில், “மும்பையில் அம்பானியின் 27 மாடி கட்டிடத்திற்கு மாதம் ஒன்றிற்கு மின்கட்டணம் ரூபாய் 6 லட்சமாகவும், தண்ணீர் செலவு மாதம் 2 லட்சம்  லிட்டராகவும் உள்ள நிலையில், தினம் ஒன்றுக்கு ரூ 27 க்கு மேல் சம்பாதிப்பவன் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவன் என்ற நிலை ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இதுதான் சமதர்மமா? என்று கேள்வி எழுப்பினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில், “நீ தமிழனா சாதிக்காரனா? என்று கேட்டால், இன்றைய நிலையில் நான் சாதிக்காரன் என்ற உணர்வே பெரும்பாலானோரிடம் மேலோங்கி உள்ளதை சுட்டிக் காட்டினார். இன்றைக்கு இருக்கிற சாதிய அமைப்பு ஒரு கூம்பு வடிவில் உள்ளதைக் கூறி, அந்தக் கூம்பின் அடிப்பகுதியில் கீழே உள்ளவன் தாழ்த்தப்பட்டவனாகவும், உயர்நிலையில் மேலே உள்ளவன் பார்ப்பனனாகவும் உள்ளான் என்றும், ஒவ்வொரு மனிதனும் தன் தோள் மேல் நின்று தன்னை அடிமைப்படுத்துபவனை நினைத்து கோபப்படாமல், தனக்கு கீழ் ஒருவன் உள்ளான் என்று நினைத்து, அவனை அடிமைப்படுத்துவதில் சந்தோசப்படுவதாகக் கூறினார். நாம் எல்லோரையும் கூம்பு வடிவ பிரமிடு வேண்டாம், எல்லோரும் வரிசையாக கைகோர்த்து நில்லுங்கள் என்று சொன்னால் அதில் பாதிக்கப்படுபவன் மேலே உள்ள பார்ப்பானாகத் தான் இருப்பான். எனவே தான் அவன் இந்த சாதிய அமைப்பை விடாமல் கட்டிக் காத்து வருகிறான் என்றும், என் தோள் மேல் இருப்பவன் மட்டுமே எனக்கு எதிரி, அதற்கு மேலே இருக்கும் பார்ப்பானைப் பற்றிக் கவலையில்லை என்று தான் ஒவ்வொருவனும் நினைக்கிறான். இந்த நிலை மாற வேண்டும். நம்மை, இந்த சாதிக் கட்டமைப்பை வலுப்படுத்தி விடாமல் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பானின் சூழ்ச்சியை நாம் உணராத வரை நம் தமிழ்ச் சமூகம் உயர முடியாது” என்று கூறினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும் போது, “காசியிலும் பண்டரிபுரத்தி லும் சாமியைத் தொட்டு பூசை செய்கிறார்கள். அங்கெல்லாம் தீட்டாகாத சாமி, தென்னிந்தியாவில் மட்டும் சூத்திரன் தொட்டால் தீட்டாகி விடுவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, இந்திய தேசியத்தைக் கொண்டு வரத் துடிக்கும் இந்து இயக்கங்கள், வட இந்தியாவில் உள்ளது போன்ற மாற்றத்தை தென்பகுதியிலும் கொண்டுவரப் போராடுமா?” என்று கேள்வி எழுப்பினார். பெரியார் காலத்தி லும் சாதிச் சங்கங்கள் இருந்ததையும், பெரியார் அது போன்ற சங்கக் கூட்டங் களில் கலந்து கொண்டு பேசி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அக்காலத்தில் இருந்த சாதிச் சங்கங்கள் தங்கள் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டதைக் கூறி, அன்றைக்கு நாடார்கள் சாதிச் சங்கம் அமைத்துக் கொண்டு கல்வி நிலையங்கள் அமைத்து  தங்கள் சமூகத்தை கல்வியில் உயர்த்தப் பாடுபட்டதையும், வங்கி அமைத்து தங்கள் சமூக மக்கள் பொருளாதாரத்தில் உயர பாடுபட்டதையும் குறிப்பிட்டார். மேலும் கொங்கு வேளாளர் சமூகம் தங்களது தீர்மானத்தில், “விதவைகள் வெள்ளை சேலை அணியும் பழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், மறுமணம் வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றியதைக் கூறினார். “ஆனால் இன்றைக்கு இருக்கிற சாதிச் சங்கத் தலைவர்கள் தங்களது தவறுகளை மறைக்கவும், தவறான வழியில் சம்பாதித்த தங்கள் சொத்துக்களை அரசிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், சமுதாயத்தை வைத்து தங்களை வளப் படுத்திக் கொள்ளவுமே சாதிச் சங்கங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். சாதிக் கலவரத்தில் ஈடுபட்டு அந்தக் குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், இடஒதுக்கீட்டால் கிடைத்த பலன்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். இறுதியாக உடுமலை நகர அமைப்பாளர் தோழர் குணசேகரன் நன்றி கூறினார்.

(பயணம் தொடர்கிறது)

பெரியார் முழக்கம் 08082013 இதழ்

You may also like...