கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

“கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்; உள்நாட்டு தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஈரோட்டில் கைது

ஈரோடு மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பு 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங் கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஏற்கனவே காவல்துறையினரிடம் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் விநாயகன் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின் பரிசீலிப்பதாக காவல்துறையினர் கூறி யிருந்தனர். ஆனால், விநாயகன் ஊர்வலம் முடிந்த பின்பும் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “கோவில் நகைகளை அரசு கையகப்படுத்த வேண்டும். மக்களால் கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நகைகள்  மக்களுக்கே பயன்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 தோழர்களை  காவல்துறை கைது செய்தது. தோழர்கள் ஈரோடு பிரபு மகால் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்டச் செய லாளர் நிவாசு, தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் வைரவேல், இளைஞரணி அமைப்பாளர் கலைமதி, பள்ளிபாளையம் சரவணன், வேணுகோபால், ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், நகரச் செய லாளர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் (மேற்கு)

சேலம்  மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 13.9.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி யளவில் மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்குப் பயன்படுத்து! பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகை களை நிறுத்து! உள்நாட்டுத் தொழில் உற்பத்தியைப் பெருக்கு! ஆகிய கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முன்பாக, சுயமரியாதை கலைக் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. முருகன் (கடவுள்) மற்றும் பார்ப்பனர்கள் வேடமணிந்திருந்தது பொது மக்களை ஈர்த்தது. மாவட்டச் செயலாளர் கோவிந்த ராசு துவக்க உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் ஜஸ்டின்ராஜ் ஆகியோர் உரையாற்றினர். மேட்டூர் நகரச் செயலாளர் சம்பத் நன்றி கூறினார்.

சென்னையில்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகரன், மாவட்ட தலைவர் ஜான், செயலாளர் உமாபதி, பொருளாளர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் சுகுமார், காஞ்சி மாவட்ட செயலாளர் தினேஷ், அமைப்பாளர் செங்குட்டுவன், பொருளாளர் சேகர் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். கல் முதலாளி கடவுள், அதன் நிறுவனமான கோயிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிறவி முதலாளியான பார்ப்பனர்கள் தொழில் முதலாளிகளான பனியா-பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு கதவு திறந்துவிட்டு சமூக நீதியையும் அடித்தட்டு மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகளையும் நசுக்கி, சமூகத்தில் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

கேரள கோயில்களில் தங்கத்தின் இருப்புப் பற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டதற்கே பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலளிக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள். நாட்டின் பொது சொத்துக்கள் அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கம், நாட்டின் பொதுச் சொத்து. அதில் கையாடல், மோசடி நடந்தால் தலையிட்டு குற்றவாளிகளைத் தண்டிக்க அறநிலையத் துறைக்கும் அரசுக்கும் சட்டப்படி உரிமை உண்டு என்பதிலிருந்தே இவை அரசுக் கட்டுப்பாட்டுக்கு உரியவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கோயிலில் முடங்கிக் கிடக்கும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாட்டின் தங்கத்தின் இருப்பை உயர்த்திக் காட்டும்போது பொருளாதார மதிப்பீடுகள் உயர்வதோடு, அமெரிக்க டாலரின் மிரட்டலையும் எதிர்கொள்ள முடியும். ஆனால், நாட்டின் பொதுச் சொத்தான கோயில் தங்கத்தை பார்ப்பனர்கள் ஏதோ தங்களின் சொத்துப் போல கருதி, அரசையே மிரட்டுவதிலிருந்தும், பார்ப்பன மிரட்டலுக்கு பணிந்து மத்திய அரசே கோயில் தங்கத்தில் கை வைக்க மாட்டோம் என்று அறிவிப்ப தும், நாட்டில் பார்ப்பன ஆதிக்கமே முதன்மை யானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டு கோயில் சொத்து தமிழர்களின் சொத்து, அதை எடுக்கக் கூடாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. நாம் இந்தியா முழுதுள்ள பணக்காரக் கோயில்கள் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டுப் பணக்காரக் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை தமிழ்நாடு அரசு கணக்கில் எடுத்து, தமிழக அரசு சார்பிலேயே ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யலாமே! நெருக்கடி தீர்ந்த பிறகு திருப்பிப் பெறலாமே! நிச்சயமாக பார்ப்பனர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். இங்கே உள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கும் மாநில அரசுக்கும் பார்ப்பன எதிர்ப்பை மீறி செயல்படக் கூடிய துணிவோ, ஆற்றலோ, கொள்கையோ இல்லை என்பது நமக்கு தெளிவாகவே தெரியும். ஆனால், நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிட பார்ப்பனியத்துக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் கல் முதலாளி மீது கை வைக்க பார்ப்பனர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்கள் வெகு மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மக்களிடம் அடையாளம் காட்டவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

சுப்ரமணியசாமியும், இராமகோபாலனும் விசுவ இந்து பரிஷத்தும், பா.ஜ.க.வும் இதில் வெளிப்படையாகவே அடையாளம் காட்டிக் கொண்டனர். ரிசர்வ் வங்கி ஆளுநர் தொழில் முதலீட்டு வாரியத் தலைவர், நிதித் துறைச் செயலாளர், பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் உள்ளிட்ட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் தான். அவர்கள் தான் கொள்கை களையும் உருவாக்குகிறார்கள் என்பதை விளக்கி, விடுதலை இராசேந்திரன் பேசினார். முனைவர் ஜீவானந்தம் தனது உரையில், கடன் கொடுக்கும் உலக வங்கி, கடன் பெற்ற தொகையை எப்படி செலவிட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது என்ன நியாயம்? உலக வங்கி கட்டளையை ஏற்று, இந்தியா தனது பொருளாதாரக் கொள்கைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே வகுப்பதை சுட்டிக்காட்டினார்.

தூத்துக்குடியில்

13.9.2013 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.மதன், திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர்  தே.சந்தனராசு ஆகியோர் முன்னிலையில் ஆதித் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் க.கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார் உரைக்குப்பின், திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் பால். அறிவழகன், மாநகரத் தலைவர் சா.த.பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு,

ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர் மதுரை வீரன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் திரளாகக் கலந்து  கொண்டனர். இறுதியில் மாவட்டப் பொருளாளர் ரவிசங்கர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

மன்னார்குடியில்

டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டுமென கோரி கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதார கொள்கை களால் உள்நாட்டு தொழில் வளர்ச்சி முடங்கி, விவசாயம் நசிந்து, பெட்ரோல், டீசல் விலை வாரம்தோறும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசுத் துறை நிறுவனங்கள் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்கும் சூழ்நிலை உருவாகி உலக வங்கியின் கட்டுப்பாட்டினால் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், விவசாய செலவினங்களுக்கு மானியங்களை குறைத்து மக்கள் அவதிப்படுவதற்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் முழு பொறுப்பேற்க வேண்டும். சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு உடனடியாக நாடு முழுவதிலுமுள்ள கோவில்களில் முடங்கிக் கிடக்கும் சுமார் 30 ஆயிரம் டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி யின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வலியுறுத்தி கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் காளிதாசு தலைமையேற்றார். மண்டல அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட தலைவர் மகாலிங்கம், மன்னை நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக்கோட்டை முருகன், வலங்கைமான் கரிகாலன், அம்மாபேட்டை செந்தமிழன், கோட்டுர் அனுராசு, பேராவூரணி திருவேங்கடம், சேதுபாவா ஜெயசந்திரன், ஒரத்தநாடு கார்த்திகேயன், மாவட்ட அமைப்பாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க குணசேகரன் கண்டன உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “உலகிலேயே தங்கம் அதிக கையிருப்பு உள்ள நாடு அமெரிக்கா. அங்கே தங்கம் முழுவதும் அரசு காப்பகத்தில் தான் உள்ளது. அதனால் தான் டாலர் தங்கமாக கருதப்படுகிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் இருப்பதைவிட கோயில்களில் தங்கம் அதிகமாக முடங்கிக் கிடக்கிறது. இந்தத் தங்கத்தை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் அது நாட்டின் பொருளாதார கையிருப்பாக மாறி நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக மீள முடியும் என வலியுறுத்தினார்.                                      ட

பெரியார் முழக்கம் 19092013 இதழ்

You may also like...