தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே! தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

வீரமரணம் அடைந்த பழனிச்சாமி வீர வணக்கப் பேரணி சென்னையில் 14.7.2012 மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் புறப்பட்டது.   கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் முன்னிலை வகித்தார். வீர வணக்க முழக்கங்களுடன் பேரணி மயிலாப்பூர் டாக்டர் நடேசன் சாலை – அய்ஸ் அவுஸ் – வி.எம். சாலை வழியாக இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை வீதியின் இருபுறமும் மக்கள் திரண்டு பார்த்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேரணியில் பங்கேற்றார். இராயப்பேட்டை கழக அலுவலகமான பெரியார் படிப்பகம் அருகில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ‘சேவ் தமிழ்’ அமைப்பைச் சார்ந்த செந்தில், திருமுருகன் (மே 17 இயக்கம்), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தென் சென்னை மாவட்ட தலைவர் தபசி. குமரன், வட சென்னை மாவட்ட தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர். ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

குமாரபாளையம்

தோழர் பழனி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையிலும் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவி லிருந்து பேருந்து நிலையம் வரை வீர வணக்க ஊர்வலம் நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன் தலைமை தாங்கினார். கேப்டன் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தமிழ்  தேசிய விடுதலை இயக்க ஆறுமுகம், இலக்கிய தளம் அமைப்பு அன்பழகன், மக்கள் சிவில் உரிமை கழகம் பகலவன் ஆகியோர் வீர வணக்க உரையாற்றினர். இறுதியாக திருச்செங்கோடு நகர தோழர் சி.சிவகுமார் நன்றி உரையாற்றினார்.

திண்டுக்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனியின் வீர வணக்க நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் 14.7.2012 சனி மாலை  5 மணிக்கு மணிக் கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் துரை சம்பத் தலைமையில், மாவட்ட செயலாளர் க.சூ.ரவணா முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்று கண்டன உரையாற்றிய தோழர்கள் கு.செ. வீரப்பன் (தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர்), பா.பாஸ்கரன் (பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர்), சூ.ச.மனோகரன் (தலித் போராளிகள் முன்னணி), க.பாண்டியன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) மற்றும் பழனி நகர தோழர்கள் பழனிச்சாமி, துரைச்சாமி, திண்டுக்கல் நகர தலைவர் சுப்ரமணி, நகர பொறுப்பாளர் ந. கலைச்செல்வன் ஆகியோர் பேசினர். ப. கோபி நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி

பழனிச்சாமி அவர்களுக்கு வீரவணக்கம் நினை  வேந்தல் பேரணி விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 14.7.2012 அன்று மாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி, மந்தைவெளி பெரியார் சிலை அருகில் புறப்பட்டு அம்பேத்கர் சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் பழனிச் சாமிக்கு வீரவணக்கம் செலுத்தியும், தளி தொகுதி சி.பி.அய். சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனை உடனடியாக கைது செய்யக் கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். நிறைவாக தோழர்கள் ச. பெரியார் வெங்கட், திருமால், ச. இராமர், பா.கண்ணன், இராமலிங்கம் (விவசாய விடுதலை முன்னணி), சங்கை ரவி (மனித உரிமை அமைப்பு), மும்பை கதிரவன், ந. அய்யனார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிகழ்விற்கு ந. வெற்றிவேல் தலைமை தாங்கினார். சி.ஆசைத்தம்பி, கல்லை சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் ச.க. இளையராஜா, செ.நாவாப்பிள்ளை, செ.பிரபு, சு.தினகரன், பெ.கோவிந்தன், முருகன் உள்பட ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

சேலம்

வீரவணக்கப் பேரணி, சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 14.7.2012 அன்று சனிக் கிழமை மாலை 6 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் துவங்கி, பழைய பேருந்து நிலையம் வரை இடைவிடாத ஒலி முழக்கங்களோடு நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமையேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தின் முடிவில் பழைய பேருந்து நிலையத்தில் வீரவணக்க உரை ஆற்றப்பட்டது. சேலம் மக்கள் குழு லட்சுமி பிரியா, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி வின்சென்ட், சி.பி.ஐ.எம்.எல். (மக்கள் விடுதலை) மணிமாறன், சி.பி.ஐ.எம்.எல். கோ. சீனி வாசன், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் பூமொழி, கழக மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, முத்து மாணிக்கம், மாவட்ட செயலாளர் சூரிய குமார், துணைத் தலைவர் பெருமாள், துணைச் செய லாளர் மகேந்திரன், மாநகர அமைப்பாளர் தங்கராசு, செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் சவுந்தரராசன், கிருஷ்ணன் உள்ளிட்ட கழகத் தோழர்களும்,தோழமை அமைப்புத் தோழர்களும் சேர்ந்து சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

புதுவை

புதுவை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 14.7.2012 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி பிள்ளைத் தோட்டம், பெரியார் சிலை அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வீரவணக்க நிகழ்வுக்குப் புதுவை மாநில கழக அமைப்பாளர் இர.தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். புதுவைக் கழகச் செயலாளர் விசயசங்கர், தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், பெரியார் தி.க. தோழர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். கழகத் துணைத் தலைவர் இரா. வீராசாமி நன்றியுரையாற்றினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மாலை 5 மணியளவில்  தோழர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்வு, மாவட்ட தலைவர் அன்புரோசு தலைமை யில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர பொறுப் பாளர் சிங் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆதித் தமிழர் பேரவை சூரியன் துவக்க உரையாற்றினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், பொருளாளர் மதன், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், அமிர்தராசு, கனகராஜி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பாக மாலை 5 மணிக்கு வீர வணக்க ஊர்வலம் பெரியார் சிலையி லிருந்து துவங்கி, புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செ.துரைராஜ், பெரியார் தொண்டர் அக்ரி. ஆறுமுகம், அசேன் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பெ.ரா. முருகையன், த.மு.மு.க. நகர செயலாளர் மகம்மது ஹனீபா, சித்தார்த்தன், செயவர்த்னே ஆகியோர் வீர வணக்க உரை ஆற்றினர். கலந்துகொண்ட அனை வரும் ராமச்சந்திரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்திப் பேசினர். அம்மாபாளையம் ரஞ்சித்குமார், பாலா, பாடாலூர் சுதாகர், பெரம்பலூர் ராஜேஷ்குமார், கற்பனைப் பித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

தோழர் பழனிக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஈரோடடில் தந்தை பெரியார் சிலைக்கு முன்பு 14.7.2012 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி தலைமை தாங்கினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி, தமிழ் தேச விடுதுலை இயக்க பொதுச் செயலாளர் மோகன்ராசு, பகுத்தறி வாளர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ப.சிவக்குமார், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஜபருல்லா, விசயசங்கர், சென்னிமலை செல்வராசு, முத்தூர் மதிவாணன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர். மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தனது உரையில், பழனியின் படுகொலையில் சம்பந்தப்பட்ட தளி தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரனின் மக்கள் விரோதப் போக்குக் குறித்தும், அவரது அராஜகங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். மேலும் பழனியின் செயல்பாடுகள் குறித்தும் நினைவு கூர்ந்தார். இப்படுகொலையில் காவல்துறை யினரின் அலட்சியப் போக்கு குறித்தும், எம்.எல்.ஏ.வை இன்னமும் கைது செய்யாதது குறித்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் பேரவைத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகள் திரளாக உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 19072012 இதழ்

You may also like...