இலண்டனும் புதுடில்லியும்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக்கான் என்ற இஸ்லாமியர், கடந்த மே 5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான ‘கன்சர்வேட்டிவ்’ கட்சியைச் சார்ந்த ஜாக். கோல்ட் ஸ்மித் என்ற பெரும் பணக்காரர். ‘நான்தான் சாதிக் கான்; இலண்டன் மாநகரத்தின் மேயர்’ என்று மக்களிடம் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரின் மூதாதையர் பாகிஸ்தானியர்கள். இவரது தந்தை, இலண்டன் மாநகர வீதிகளில் பேருந்து ஓட்டுனர். சாதிக் கான் 1970இல் இலண்ட னில் பிறந்தவர்; சட்டம் படித்தவர். எதிர்த்துப் போட் டியிட்ட கோல்ட்ஸ்மித், சாதிக் கானை இஸ்லாமிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய பயங்கரவாதம் இலண்டனுக்குள் ஊடுருவிவிடும் என்று மக்களிடம் மத வெறுப்புகளைத் தூண்டி விட்டார். இலண்டன் நகர மக்கள், இந்த ‘மதவெறி’ப் பிரச்சாரங்களை புறந்தள்ளி விட்டார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு. ஒற்றை அடையாளத்துக்குள் திணித்துவிட முடியாது ‘பன்முக’ அடையாளங்களை அங்கீகரிப்பதே – மக்கள் நாயகத்துக்குரிய செழுமையான அடை யாளம். சாதிக் கான் – அதே கண்ணோட் டத்திலே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவரிடம் முன் வைத்த கேள்வி, “உங்களை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள்?” சாதிக் கான் குழப்பம் ஏதுமின்றி இவ்வாறு கூறினார். “நான் இலண்டன் வாசி; இலண்டனில் வாழும் அனைத்து குடிமக்களுக் கும் மேயர்; நான் அய்ரோப்பியன்; நான் ஆங்கிலேயர்; ஆசியாவைச் சார்ந்தவன்; எனது மூதாதையர் பாகிஸ்தானியர்கள்; நான் ஒரு தந்தை; நான் ஒரு கணவன் – இப்படி எனக்குப் பல அடையாளங்கள் உண்டு” இது சாதிக்கான் அளித்த பதில். எவர் ஒருவரையும் ஒற்றை அடையாளத்துக்குள் திணிக்க முயல்வது ஆபத்தானது. பன்முக அடையாளங் களிலும் முன்னுரிமை தரும் அடையாளம் ஒன்று தேவைதான். அந்த அடையாளம் சமத்துவத்துக்கும் மனித உரிமைகளுக்குமான அடையாளமாக இருக்க வேண்டும். ஒற்றை வார்த்தையில் கூற வேண்டு மானால், அந்த அடையாளத்தின் பெயர் ‘சுயமரியாதை’. எனவேதான் பெரியார் ‘சமூகத்தின் சுயமரியாதை’ மீட்புக்கான போராட்டத்தைத் தொடங்கினார். இந்து மத அடையாளத்துக்குள் மக்களை திணித்து மக்களின் ஒரு பகுதியினரை விலக்குகளுக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்குவதும், மொழி, இன அடையாளங்களுக்குள் மக்களின் ஒரு பகுதியினரை ‘விலக்குகளுக்கும் வெறுப்புக்கும்’ உள்ளாக்குவதும், உள்ளடக்கத்தில் ஒன்றுதான். ஒற்றைச் சொல்லில் கூறினால் இதற்குப் பெயர் ‘பார்ப்பனியம்’; உலக மொழிகளில் கூற வேண்டு மானால், இதற்குப் பெயர் ‘பாசிசம்’.

பெரியார் முழக்கம் 19052016 இதழ்

You may also like...