கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”

நடிகர் கமலஹாசன் தன்னை பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்படி பெரியார் கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், சமூக நீதிக் கொள்கையில் அவர்கள் வேறுபடுகிறார்கள். குறிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக கமலஹாசன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு கோட்பாடு, சமூக நீதியையும், பார்ப்பனிய சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகும். மக்கள் விடுதலைக்கான சமூகநீதியைக் கொண்டதே பெரியார் பேசிய நாத்திகம். இது கமலஹாசன் பேசும் நாத்திகத்திலிருந்து மாறுபட்டது.

இப்போது கமலஹாசன் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரை சூட்டியிருப்பது விவாதங்களை கிளம்பியிருக்கிறது. படத்தின் பெயரோடு ஏன் ஜாதியை இணைக்க வேண்டும்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகின்றன. ‘படத்தின் கருத்தைப் பாருங்கள். தலைப்பை பார்க்காதீர்கள்’ என்று பதில் கூறுகிறார் கமலஹாசன். இப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்குவதேகூட படத்துக்கான ஒரு விளம்பர தந்திரம் தான் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. பல திரைப் படங்களின் பெயரை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வருகின்றன. இதன் மூலம் படம் மக்களிடையே எந்த செலவும் இன்றி விளம்பரமாகி, ஏடுகளில் செய்திகளாக மாறுகிறது.  கமலஹாசன் அத்தகைய விளம்பர யுக்திக்காக இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனாலும், ‘தேவர் மகன்’, ‘சண்டியர்’, ‘மண்வாசனை’ போன்ற திரைப்படங்கள் வழியாக ஜாதியப் பெருமைகள் உணர்ச்சிகளாக கட்டமைத்து ஜாதியத்துக்கு உயிரூட்டும் வேலைகளை சில தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் செய்தார்கள் என்பதை மறுத்துவிட

முடியாது.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடும் ‘ஜாதிய ஆச்சாரம்’ அநேகமாக தமிழ்நாட்டில் மறைந்தே போய் விட்டது. கொங்கு வேளாளர்களுக்காக, வன்னியர் களுக்காக, பார்ப்பனர்களுக்காக சங்கங்கள் நடத்தும் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி ‘வாலை’ ஒட்ட வைத்துக் கொள்வதில்லை என்பதை கவனிக்க வேண்டும். ‘தேவர்’, ‘நாயுடு’, ‘பிள்ளை’, ‘அய்யர்’, ‘அய்யங்கார்’ என்று ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதுபோல் பறையரும், பள்ளரும், வன்னியரும், வண்ணாரும் அம்பட்டரும், அருந்ததியினரும் பெயருக்குப் பின்னால் ஜாதி அடையாளத்தைப் போட்டுக் கொண்டு சமூகத்தில் ‘கவுரவத்துடன்’ உலா வர முடியுமா? என்ற கேள்வியை கமலஹாசனை நோக்கி எழுப்பினால், அவரிடம் என்ன பதில் இருக்கிறது?

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

You may also like...