அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்
“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)
இந்தியாவின் – அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை. ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக் கிறார். அம்பேத்கர் – இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள்.
சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில் எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால் வேதத்தை ஓதும் ‘சூத்திரன்’ நாக்கை வெட்ட வேண்டும்; வேதத்தைக் கேட்கும் ‘சூத்திரன்’ காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ‘மனுஸ்மிருதி’யில் எழுத வைத்தது யார்? சமஸ்கிருதத் தில் எழுதப்பட்ட இந்த மனுஸ்மிருதிக்கு அம்பேத் கரே தீயிட்டாரே! ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படிக்க விரும்பிய அம்பேத்கரை அவர் தீண்டப்படாதவர் என்பதற்காக பார்ப்பனர்கள் சமஸ்கிருதப் பள்ளியில் சேர்க்க மறுத்ததை அம்பேத்கர் வரலாறு பறை சாற்றிக் கொண்டிருக்கிறதே! இது எப்படி மக்களின் மொழியாக இருந்திருக்கும்? ‘கடவுளுக்குத்’ தெரிந்த மொழி; பார்ப்பனர்கள் மட்டுமே படித்த மொழி என்பதைத் தவிர, சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்க அதில் என்ன இருக்கிறது? அனைத்து மக்களும் பேசிய மொழியாக அது இருந்திருக்குமானால் அது எப்படி வழக் கொழிந்து போனது?
சமஸ்கிருதம் ஒன்று மட்டுமே தேசிய மொழியாக வேண்டும் என்கிறார் கோல்வாக்கர். அது தேசிய மொழியாக இடம் பெறும் வரை இந்தி இருக்கட்டும் என்கிறார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதமும் இருப்பதை அம்பேத்கர் எதிர்க்கவில்லை. ஆனால் ‘குருஜி’யும், ‘அண்ணலும்’ ஒரே புள்ளியில் இணைந்து நிற்கிறார்கள் என்று புரட்டு வாதம் பேசி காதில் பூ சுற்றுகின்றன ‘சங்பரிவாரங்கள்’.
‘ஆரியர்’ குறித்த பார்வையில் ஆர்.எஸ்.எஸ். ‘குருஜி’ கோல்வாக்கரும் அம்பேத்கரும் ஒரே கருத்து கொண்டிருந்தார்கள் என்று மற்றொரு கதையை அவிழ்த்து விடுகிறார்கள். இதுவும் அபத்தமான வாதம். ஆரியர்கள்தான் இந்த தேசத்தின் மக்கள்; அவர்கள் ‘மூலதாரம்’ எது என்பது சரித்திர மேதை களுக்கே தெரியவில்லை என்று கூறும் கோல்வாக்கர், ஆரியர்களைத் தவிர, ஏனையோர் அறிவற்றவர்களாக இருந்தனர் என்று கூறுவதோடு, “நாம் ஆரியர்கள்; அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட் டோம்” என்று தனது நூலில் எழுதுகிறார். (றுந றநசந உயடடநன வாந நடiபாவநன – வாந ஹசலயள – யனே வாந சநளவ வாந அநடயஉhயள)
அம்பேத்கர் ஆரியரை அறிவாளிகள் என்றோ, ‘ஆதி அந்தமே’ இல்லாதவர்கள் என்றோ, ஆரியரைத் தவிர மற்றவர்கள் ‘மிலேச்சர்கள்’ (இழிவுக்குரிய வர்கள்) என்றோ கூறவில்லை. இந்தியாவின் பூர்வீகக் குடிகள் நாகர்கள் தான் என்றும்; அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அம்பேத்கர் உறுதியாக கூறுகிறார். ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் நடந்த மோதலில் ஆரியர்கள் நாகர்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்கிறார்.
அம்பேத்கர் கருத்தையே பார்ப்போம்.
“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தி யாவில் மட்டும் இருக்கவில்லை. ஆரியர்கள் வருகைக்கு முன் இந்தியா முழுமைக்குமான மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேசப்பட்ட மொழியாக தமிழ் இருந்தது” என்று கூறும் அம்பேத்கர், ஆரியருக்கும் நாகருக்கும் நடந்த மோதல்களைக் குறிப்பிடுகிறார். வட இந்தியா விலிருந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை கைவிட்டு, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தென்னிந்தியாவி லிருந்த நாகர்கள் தமிழை தங்கள் தாய் மொழியாகப் பேணி காத்து வந்தனர். ஆரியர் களின் சமஸ்கிருதத்தை தங்கள் மொழியாக ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை கருத்தில் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.” (அம்பேத்கர் நூல் தொகுதி 14)
நாடு முழுமையையும் ஆரியர்களுக்கும் சமஸ்கிருத கலாச்சாரத்துக்கும் உரிமை கொண்டாடு கிறார் கோல்வாக்கர். இதற்கு நேர்மாறாக நாடு முழுதும் வாழ்ந்தவர்கள் நாகர்கள்; அவர்கள் தாய்மொழி தமிழ் நாகர்கள்மீது ஆரியர்கள் சமஸ் கிருதத்தை திணித்தார்கள் என்கிறார் அம்பேத்கர். இருவரும் ஆனாலும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து நிற்கிறார்கள் என்று சங்பரிவாரங்கள் பிதற்று
கின்றன.
‘சிவன், விஷ்ணு போன்ற இந்து கடவுள்களை புறக்கணிக்கச் சொன்ன அம்பேத்கர், உப நிஷத்து களை ஏன் எதிர்க்கவில்லை? எனவே அவர் ஒரு இந்துத்துவ ஆதரவாளர் – இப்படியும ஒரு வாதம். சரி; எதிர்க்கவில்லை என்றால் எந்த இடத்திலாவது உப நிஷத்துகளை ஆதரிப்பதாக அம்பேத்கர் எழுதியோ பேசியோ இருக்கிறாரா என்ற கேள்விக்கு இவர் களிடம் என்ன பதில் இருக்கிறது? பார்ப்பனர்களின் கடவுள், வேதம், உபநிஷத், ஸ்ருதி, ஸ்மிருதி குறித்து அம்பேத்கர் அளவுக்கு விரிவாக ஆராய்ந்த தலை வர்கள் வேறு எவரும் இல்லை; வேதங்களுக்கும் உப நிஷதங்களுக்கும் மோதல்கள் இருந்ததை அம்பேத்கர் விவரிக்கிறார். இந்து கடவுள்களுக் குள்ளே மோதல் களை உருவாக்கியதும், பழைய கடவுள்களை அரி யணையிலிருந்து இறக்கிவிட்டு புதிய கடவுள் களையும் பெண் கடவுள்களையும் அரியணையில் உயர்த்தி வைத்ததையும் விரிவாக ஆராயும் அவர், எல்லாவற்றுக்கும் பின்னால் உந்து சக்தியாக இருந்தது பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதுதான் என்று அழுத்தமாக கூறுகிறார்.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தருவதில் அம்பேத்கருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அதை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அவரவர் பகுதிகளை பிரித்து தந்து விடலாம் என்பதே அவரின் நிலைப்பாடு. இந்துத்துவாவாதிகள் கூறுவதுபோல இந்தியாவில் ஒரு மாநிலமாக்கிட வேண்டும் என்பது அல்ல.
அம்பேத்கரை ‘இந்துத்துவா’ வலைக்குள் சிக்க வைப்பதற்கு இவர்களிடம் உள்ள சரக்கு இவ்வளவு தான்! வேறு எதுவும் இல்லை; எல்லாமுமே அபத்தம்; பிதற்றல்; புரட்டு.
இந்த கூட்டம் முன் வைக்காத வாதம் ஒன்று தான்; நீங்கள் என்னதான் மறுத்தாலும் அம்பேத்கர் – “இந்துவாகத்தானே பிறந்தார்!” என்றுகூட வாதாடக் கூடும். இதற்கும் அம்பேத்கர் ஆப்பு வைத்து விட்டார். “ஆம்! இந்துவாகத்தான் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக விரும்பவில்லை.”
பெரியார் முழக்கம் 28042016 இதழ்