‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இந்த அறிவிப்பு வரப்போகிறது என்ற தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றும், அதன் காரணமாகவே மோடி அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கல்கத்தாவில் பா.ஜ.க. 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கியில் ரூ.1 கோடிக்கு டெபாசிட் செய்ததையும் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், இந்த அறிவிப்பு வரப்போகும் தகவல் முன்கூட்டியே அம்பானி, அதானி தொழில் நிறுவனங்களுக்கு தரப்பட்டள்ளது என்று பேட்டி அளித்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக வங்கிகளில் செலுத்தப்பட்ட ‘டெப்பாசிட்’ தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சந்தேக சூழலில் மோடி மீதே கருப்புப் பண குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கின்றன. மோடி மீதான கருப்புப் பண குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் மத்திய புலனாய்வுத் துறை, மத்திய நேரடி வரி வாரியம், ஊழல் கண்காணிப்பு ஆணையம், கருப்புப் பணத்துக்கான சிறப்பு புலனாய்வுக் குழு ஆகிய அமைப்புகளிடமும் இருக்கின்றன. இந்த அமைப்புகள் அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றவையாகும். மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த ஆவணங்கள் மேற்குறிப்பிட்ட அமைப்புகளிடம் வந்துள்ளன. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட மேல்மட்ட ஊழல்களைத் தொடர்ந்து துணிவுடன் எதிர்த்து போராடி வரும் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன், இந்தத் தகவல்களை உரிய ஆதாரங்களுடன் உச்சநீதி மன்றத்தில் அக்டோபர் 25, 2016இல் வழக்கு மனுவாக தாக்கல் செய்துள்ளார். அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை.
‘சகாரா’ பெரும் தொழில் குழுமத்தில் வருமான வரித் துறை, 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய சோதனையில் இந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு கொடுத்த நன்கொடை பற்றிய விவரங்கள் அடங்கிய ‘நாட்குறிப்பு’ கைப்பற்றப்பட்டது. 2013 அக்.30 முதல் 2014 பிப்.21 வரையிலான ‘நன்கொடை’ தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் குஜராத் முதலமைச்சர் ‘மோடிஜி’ பெயரும் இடம் பெற்றுள்ளது. வருமான வரித் துறை இது குறித்து ஒரு மதிப்பீடு அறிக்கையையும் (ஹயீயீசளையட சுநயீடிசவ) எழுத்துபூர்வமாக பதிவு செய்திருக்கிறது. ‘மோடிஜி’க்கு அகமதாபாத்தில் ‘ஜெய்ஸ்வால்ஜி’ என்பவர் வழியாக எட்டு தவணைகளில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.40.10 கோடி. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது” என்று வருமான வரித்துறையின் அறிக்கை கூறுகிறது. குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரதமர் பதவிக்கு தன்னை வேட்பாளராக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம் அது என்பது குறிப்பிடத்தக்கது.
சகாரா குழுமத்தில் கைப்பற்றப்பட்ட அந்த நாட்குறிப்பில், ‘ம.பி. முதல்வர்’, ‘சத்தீஸ்கர் முதல்வர்’, ‘டெல்லி முதல்வர்’ ஆகியோருக்கு பணம் தரப்பட்ட பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘ஆதித்யா பிர்லா’ தொழில் குழுமத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் ‘சி.எம். குஜராத்’துக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டதாக பதிவாகியிருந்தது. இந்த ஆவணங்களைக் கைப்பற்றிய வருமான வரி அதிகாரிகள், இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர். பிர்லா குழும அதிகாரி ஒருவர், ‘குஜராத் சி.எம்.’ என்று குறிப்பிட்டிருப்பது, ‘குஜராத் அல்கலீஸ் மற்றும் கெமிக்கல்ஸ்’ என்ற நிறுவனத்தையே குறிக்கிறது என்று ஒரு விளக்கத்தை வருமான வரித் துறைக்கு அளித்தார். பிர்லா குழுமம் இப்படி ஒரு ‘விளக்கம்’ தந்தாலும், ‘சகாரா’ நிறுவனம் ‘மோடிஜி’க்கு நன்கொடை வழங்கியது குறித்து எந்த மறுப்பையும் தரவில்லை.
தனது மனுவில், இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ள பிரசாந்த் பூஷன், “எப்படி இருந்தாலும் வருமான வரித் துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ இதில் சட்டபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கைகளை தொடரவில்லை. இவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும். இந்த நிலையில் இந்த ‘பணம் பெற்றது’ தொடர்பான புகாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருந்த வருமானவரித் துறை அதிகாரி கே.பி. சவுத்ரி, 2015 ஜூன் மாதத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவர் என்ற பெரிய பதவியில் நியமிக்கப்பட்டார். ‘இந்த நியமனம் சட்ட விரோதமானது’ என்று பூஷன் இந்த நியமனத்தை எதிர்த்துள்ளார். அந்த நியமனத்தை நீக்கம் செய்ய கோரியுள்ளார்.
அக்டோபர் 25, 2016இல் பூஷன் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்கு சட்டபடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி நவம்பர் 8, 2016 அன்று மீண்டும் கடிதம் எழுதினார். சகாரா குழுமத்தில் கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பில் அடங்கியுள்ள தகவல்கள் சாதாரணமானவை அல்ல; அதை குறைத்து மதிப்பிட்டு மூடி மறைத்துவிடக் கூடாது என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். பூஷன் கடிதம் எழுதிய அந்த நவம்பர் 8ஆம் தேதி இரவுதான் மோடியின் ‘நோட்டுகள் செல்லாது’ என்ற அதிரடியான அறிவிப்பு வந்தது.
அக்டோபர் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் அதன் தொடர்ச்சியாக நவம்பர் 8ஆம் தேதி தீர்ப்பாயத்துக்கு எழுதிய கடிதமும் நிதித் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகுதான் மேல்மட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனைக்குப் பிறகு மோடியின் அறிவிப்பு வெளியானது என்று பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டுகிறார். (ஆதாரம்: ‘பிரன்ட்லைன்’ டிசம்பர் 8, 2016)
மோடியின் மீதான இந்த குற்றச்சாட்டுகளை டெல்லி சட்டமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியிருக்கிறார். ‘இந்து’ ஆங்கில நாளேட்டைத் தவிர, வேறு எந்த ஏடும் (‘தமிழ் இந்து’ உள்பட) இந்த செய்தியை வெளியிடவில்லை.
பெரியார் முழக்கம் 01122016 இதழ்