அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’

சோழர் கால ஆட்சியிலேயே ‘குடவோலை’ முறை வழியாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று பெருமையுடன் வரலாறுகள் பேசப்படுகின்றன. இந்த குடவோலை முறை எப்படி நடந்தது? காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுகள் குறித்து, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அந்தத்துறை சார்பாக அண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய தொல்லியல் துறை அதிகாரி நீலகண்டன், ‘உத்திரமேரூர்’ பகுதியில் நடந்த குடவோலை முறை பற்றி விளக்கம் அளித்தார். இந்த முறைப்படி, “தேர்தலில் போட்டியிடுவோர் நான்கு வேதங்களைப் படித்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிருந்திருக்கிறது.

கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் இது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பார்ப்பனர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதை இத்தகவல் உறுதிப்படுத்துகிறது. இதுதான் சோழர்கள் காலத்தில் நடந்த

‘குடவோலை ஜனநாயகம்’. குடவோலை முறையை உலகுக்கே அறிமுகம் செய்த ஊர் உத்திரமேரூர்தான் என்று வரலாறுகளில் எழுதுகிறார்கள். அதன் ‘யோக்கியதை’ இப்படித்தான் இருந்திருக்கிறது. இப்போது அதே உத்திரமேரூரில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடக்கிறது?

‘தமிழ் இந்து நாளேடு’ வெளியிட்ட கட்டுரை (செப்.28) இங்கே என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ‘தலித்’ பிரிவினருக்கான பஞ்சாயத்தாக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்துக்கு விடப்படுகிறது. கடும் போட்டியில் அந்த ஊர் தலித் அல்லாத ஆதிக்க ஜாதிக்காரர் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கிறார். ஏலம் எடுத்தவருக்கு பஞ்சாயத்து தலைவராக யார் வர வேண்டும் என்ற உரிமை வழங்கப்படுகிறது. அவர் தனது ஆணைப்படி செயல்படக் கூடிய ஒரு ‘தலித்’ பிரதிநிதியை பஞ்சாயத்து தலைவராக கை நீட்டுகிறார். அவர் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2016 உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே இந்த ஏலங்களும் நடந்து முடிந்துவிட்டன.

“குடவோலை முறையை உலகுக்கு அறிமுகம் செய்த உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அத்தியூர் மேல்தாளி ஊராட்சி தலைவர் பதவி ரூ.4.2 இலட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது” – என்று அந்த கட்டுரை கூறுகிறது. சோழர் காலத்தில் பார்ப்பனர் மட்டுமே போட்டியிடலாம். இப்போது ‘தலித்’ இடஒதுக்கீடு இருந்தாலும் அவர்களுக்கான அதிகாரத்தை பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதி ஆதிக்கம் பறித்துக் கொண்டுவிடுகிறது. ஆக, தேர்தல்களை பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதியே சோழர் காலத்திலிருந்து தீாமானித்துக் கொண்டிருக்கிறது.

பெரியார் முழக்கம் 13102016 இதழ்

You may also like...