கால் பந்தாட்டப் போட்டி – தெருமுனைக் கூட்டங்களுடன் மயிலையில் 4 நாள் பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

சென்னையில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை கால்பந்து போட்டிகளோடு இணைத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். கடந்த செப். 26ஆம் தேதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா, அறிவியல் பரப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளுடன் விழா எழுச்சியுடன் நடந்தது. இது குறித்த செய்தி:

சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் , துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, கழகப் போராட்டங்களிலும், களப்பணிகளிலும் முன்னணியில் நிற்கும் தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி பார்ப்பனரல்லாத இளைஞர்களின் விளையாட்டாகத் திகழும் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த செப்.25ஆம் தேதி இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன கிருட்டிணன் தொடங்கி வைத்தார். 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. அம்பேத்கர் பெயரில் இயங்கும் அணி போட்டியில் வெற்றி பெற்றது. அவர்களுக்கான பரிசுத் தொகை, விருதுகளையும், விளையாட்டு உடைகளையும் கழகத்தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்.

போட்டியில் இரண்டாவது இடத்தில் வந்த ஏ.வி.பி.செலக்ட் அணிக்கும் பரிசுத் தொகை களும் விருதுகளும் வழங்கப்பட்டன. பரிசுத் தொகை, விருதுகள் வழங்கும் விழா, செப்டம்பர் 26ஆம் தேதி மாலை மயிலாப்பூரில் ‘செயின்ட் மேரீஸ் பாலம்’ பகுதியில் எழுச்சியுடன் நடந்தது. விழாவுக்கு தோழர் ஜான் மண்டேலா தலைமை வகித்தார். ‘விரட்டு’க் கலைக்குழுவினர் ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நாடகங்கள் பாடல்கள் வழியாக கலை நிகழ்வுகளை நடத்தினர்.

முன்னதாக பறை இசை நிகழ்ச்சி நடந்தது. கலைக் குழுவினரின் நிகழ்ச்சிகளை மக்கள் இறுதி வரை இருந்து கருத்துகளை ஆர்வத்துடன் கேட்டனர். கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே வழக்கறிஞர் திருமூர்த்தி, வழக்கறிஞர் துரை. அருண், பெரியார் பிஞ்சு இனியன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். கோவை கழகத் தோழர் இசைமதி பாடல்களைப் பாடினார். வீதி முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிறைவாக கழகத்தலைவர் கொளத்தூர் மணி பரிசுகளை வழங்கி நிறைவுரை யாற்றினார். கழகத் தோழர் மாரிமுத்து நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் உமாபதி,மயிலை கழகத் தோழர் சுகுமார் ஆகியோர்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கழகத் தோழர்களுக்கு மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டது.

பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி மயிலைப் பகுதியில் இரண்டு தெருமுனை பரப்புரைக் கூட்டங்களுக்கும் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இராஜா அண்ணா மலைபுரம் காமராசர் சாலையில் செப்.21 அன்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உமாபதி, வழக்கறிஞர் துரைஅருண் உரையாற்றினர். 22ஆம் தேதி பல்லக்குநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, விழுப்புரம் அய்யனார் ஆகியோர் உரையாற்றினர்.

இரண்டு நாள் கூட்டங்களிலும் துரை தாமோதரனின் ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. பகுதி மக்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். முதல் நாள் கூட்டத்துக்கு கழகத் தோழர் த.குமரன், இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஆ.சிவா தலைமையேற்றனர். முதல் நாள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். துரை தாமோதரன், மூடநம்பிக்கைகளை விளக்கிப் பேசும் போது, பொது மக்கள் தங்களின் சந்தேகங்களையும் உரிமையுடன் கேட்டனர்.

பல்லக்கு மாநகர் கூட்டத்தில் ஒரு மூதாட்டி சாமியாடுவது பற்றி கேட்டபோது, துரை தாமோதரன் அதற்கான அறிவியல் விளக்கத்தை அளித்தார். மக்கள் பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளர்களாக இந்தக் கூட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு வாரம் கடை வீதிகளில் துண்டறிக்கைகளை வழங்கி நிதிதிரட்டினர். பெரியார் பிறந்த நாள் விழாவை கால் பந்துப் போட்டி, இரண்டு நாள் தெருமுனைக் கூட்டங்கள், நிறைவு விழா என நான்கு நாட்கள் மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சிறப்புடன் நடத்தினர்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 06102016 இதழ்

You may also like...