‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை
பார்ப்பனியம் – பன்னாட்டு கார்ப்பரேட் பண்பாட்டுடன் கைகோர்த்துக் கொண்டு தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது என்பதற்கு திருமண முறைகளில் நிக ழ்ந்து வரும் மாற்றங்களே சான்று. புரோகிதம் – சோதிடம் – வரதட்சணை என்ற பார்ப்பனிய திருமணம், ஆடம்பர திருமணமாகி, கார்ப்பரேட் நிக ழ்வாகி நிற்பதை விளக்குகிறது, இக்கட்டுரை.
இந்தியாவில் ஒரு திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது. இவற்றின் பின்புலமாக திருமணத்தை பார்க்கிறோம் என்றால் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகளையும், பணப் புழக்கத்தையும் இந்திய திருமணங்கள் கொண்டிருக்கின்றன என்கிற உண்மை விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்டுக் காண்டு திருமண செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது இந்திய திருமண சந்தை சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. இது ஆண்டுக்காண்டு இது 30 சதவீதம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒருவர் தன் வா ழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு வருமானத்தை திருமணத்துக்காக செலவு செய்கிறார் என்கின்றன புள்ளி விவரங்கள்.
சமீப காலங்களில் மெல்ல உருவான திருமண திட்டமிடல் என்கிற துறை இன்று திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிப்பதாக வளர்ந்து நிற்கிறது. கடந்த காலங்களில் ஆபரணம், ஆடைகள், உணவு என்பது மட்டும்தான் மிகப் பெரிய செலவுகளாக இருந்தன. ஆனால் இன்று மணமகன் அல்லது மணமகளை தேடுவதற்குகூட பல ஆயிரங்கள் செலவிட வேண்டும். இணையதளம் மூலம் தேடத் தொடங்கி இன்று செயலிகள் மூலம் மண உறவுகள் அமையத் தொடங்கியிருக்கின்றன. இப்போது மணமக்களை ஹனிமூன் அனுப்புவது வரை அனைத்தையும் ஒரே நிறுவனமே செய்து கொடுத்து விடுகிறது. திருமணத்துக்கு முன்னரான பேச்சிலர் பார்ட்டிகளைக் கூட ஒருங்கிணைத்து கொடுக்கும் அளவுக்கு சேவைகள் விரிவடைந்து வருகின்றன.
முன்பு திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு நிக ழ்வுகளுக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் இப்போது திருமணம் சார்ந்த அனைத்தையும் இந்த திட்டமிடல் நிறுவனங்களே முடித்து கொடுத்து விடுவதால்’திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்கிற பழமொழி எல்லாம் செல்லுபடியாவதில்லை. இன்று திருமணம் என்பது கோடிகளில் புழங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பித ழ் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலங்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளன. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதன் வளர்ச்சி ஆண்டுக்காண்டு 25-35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு திருமணத்துக்கு சாராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.
தவிர கேட்டரிங், புகைப்படம், திருமண மண்டபம் என ஒவ்வொன்றும் பல ஆயிரம் கோடி சந்தையை கொண்டிருக்கின்றன. முன்பு தனி நபர்களை நம்பி இருந்த இந்த ஏற்பாடுகள் இன்று நிறுவனங்கள் கையில் சென்றுள்ளதால் முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவும் பரிணாமம் எடுத்துள்ளது. இது போன்ற திட்டமிட்ட திருமணங்களால் ஒரு கார்ப்பரேட் தன்மை உருவாகிவிட்டது.
நன்றி : ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (12.9.16) வெளிவந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.
பெரியார் முழக்கம் 15092016 இதழ்