சேலம் கழகச் செயலவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : வன்முறை போராட்ட வடிவம் உடன்பாடானதல்ல!

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 5.10.2013 அன்று சேலத்தில் செயலவைத் தலைவர் க. துரைசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் கூடியது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன:

பெரியார் கொள்கைகளை பெரியார் வழியில் மக்களிடம் கொண்டு செல்வதையே இலட்சிய மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். அந்த அடிப்படையில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஈழ விடுதலை, தமிழின உரிமைகளுக்காக தொடர்ந்து இயக்கங்களையும் பரப்புரைகளையும் நடத்தி வருகிறது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறைக்கு எதிரான, வன்முறை சார்ந்த போராட்ட வடிவங்கள் கழகத்திற்கு உடன்பாடானது  அல்ல. இத்தகைய, கழகத்தின் உடன்பாடு இல்லாத, போராட்ட முறைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சென்னை, சேலத்தைச் சார்ந்த 7 தோழர்களும் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் மீது கழக சார்பில் விசாரணை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

சேலம் வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் இணைத்து, பெரியார் கொள்கை களை முன்னெடுப்பதில் முனைப்புடன் செயல் படும் இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு கைது செய்துள்ள காவல்துறைக்கு தலைமைக் குழு வன்மையாக கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர் காலத்தில் கழகத் தலைமையின் முன்  அனுமதி பெற்றே எந்தப் போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைக் குழு அறிவுறுத்து கிறது.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது, இனப் படுகொலை நடத்திய நாட்டுக்கு, ஜனநாயக முகமூடி போட்டு மறைக்க முயலும் சதியே ஆகும். தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

காவல் துறையின் அடக்குமுறைகளைசந்தித்தாலும் கூட மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற முதன்மையான கோரிக்கையிலிருந்து பிரச்சினையை திசை திருப்பி, தமிழக அரசின் மீதான எதிர்ப்பாக மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு தொடர்ந்து காமன்வெல்த் புறக்கணிப்பிற்கே முன்னுரிமை தந்து குரல் கொடுக்க தலைமைக்குழு முடிவு செய்கிறது.

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...