சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும்,  சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும்,

ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்ட தர்மபுரி இளவரசனின் படுகொலை ஓர் ஆண்டு கடந்தும் முறையான விசாரணை இல்லாத காரணத்தால் இளவரசனின் படு கொலையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவும், ஜாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

சங்கராபுரம் வட்டம் சேஷ சமுத்திர கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாமி ஊர்வலத்தை அரசு பொதுச் சாலைகளில் நடத்தக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜாதி இந்துக்கள் தாக்குதல் நடத்தி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தடையை மீறி போராட்டம் நடத்தி தோழர்கள் கைதாகினர். இந்த ஆண்டு அவ்வாறு நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பெரியார் குமார், கி.ஆனந்தன், மு. நாகராஜ், சி. ஆசைத்தம்பி, இராமலிங்கம், குப்புசாமி உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 12122013

You may also like...