மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தைச்சார்ந்த தோழர் ந. விஜயராகவன், ‘புத்தகச் சோலை’ என்ற புதிய புத்தக விற்பனை நிலையத்தை மயிலாடுதுறையில் தொடங்கியுள்ளார். புத்தகச் சோலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா 17.11.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

நாகை மண்டல கழக அமைப்புச் செயலாளர் நா. இளையராசா வரவேற்புரையாற்ற, பெரு வணிகரும் பெரியாரியலாளருமான சா.மீ.சு. முத்துச் செல்வன், வே. மோகன்தாசு, நா.க. உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.

“ஒரு பெரியாரியல்வாதியாக நான் இருந்ததால்தான் கடும் நெருக்கடிகளை துணிவாக எதிர்கொண்டு இந்த நிறுவனத்தை என்னால் தொடங்க முடிந்தது” என்று உரிமையாளர் ந. விஜயராகவன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். மோ.சுகந்தி விஜயராகவன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தகச் சோலைக் கட்டிடம் கம்பீரமாக முகப்பில் பெரியார் படத்துடன் தோற்றமளிக்கிறது. இரண்டடுக்கு மாளிகையாக எழுந்து நிற்கும் இந்த புத்தகச் சோலையில் 100 தோழர்கள் அமரக் கூடிய கருத்தரங்க வளாகமும் இடம் பெற்றிருக்கிறது.

தமிழகத்திலேயே சென்னையைத் தவிர வேறு எங்கும் இவ்வளவு பெரிய அளவில் ஒரு புத்தக விற்பனை நிலையத்தைப் பார்க்க முடியாது என்ற அளவில் பல்லாயிரக்கணக்கான பல்துறைச் சார்ந்த தமிழ், ஆங்கில நூல்களுடன் இந்தப் புத்தகச் சோலை பொலிவுடன் மிளிர்கிறது. நினைவின் மகிழ்வாக கழக ஏட்டுக்கு ந. விஜயராகவன் ரூ.5000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 21112013 இதழ்

You may also like...