7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு உரிமை உண்டு: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட்ட கருத்து:

“இந்த விவகாரத்தில் மீண்டும் யார் வழக்குத் தொடர்ந்தாலும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்சுக்குத்தான் வழக்கு விசாரணைக்குச் செல்லும். அவர்கள் அளித்த தீர்ப்பை அவர்களே எப்படி தவறு என்று சொல்ல முடியும்? தடை வழங்க முடியும்? எனவே அதற்கான சாத்தியம் இல்லை.

குற்ற விசாரணை முறைச் சட்டம் 435இன்படி, தமிழக அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்றுதான் கூறப்பட் டுள்ளது. அதற்காக, மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று இல்லை. ஒருவேளை மத்திய அரசு தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக கருத்துக் கூறினாலும் அதனை நிராகரிக்க மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆயுள் தண்டனை என்பது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் அந்த குறைந்தபட்ச தண்டனையைவிட அதிக காலம் சிறையில் உள்ளனர். எனவே, சிறையில் அவர்களின் நன்னடத்தையைக் கணக்கிட்டு, சீர்திருத்த அடிப்படையில் அவர்களை மாநில அரசு விடுவிக்கலாம்.

தண்டனை என்பது திருந்தி வாழ்வதற்காகத்தான். உயிரை எடுத்தால், உயிரை எடுக்க வேண்டும் என்றோ, மாறுகால் மாறுகை வாங்க வேண்டும் என்றோ இல்லை. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டு இருக்கின்றனர். சட்டரீதியாக மாநில அரசு எடுத்த முடிவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது” என்றார், சந்துரு.

பெரியார் முழக்கம் 27022014 இதழ்

You may also like...