காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி கிளீனராக இருக்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி ( 35). இவர்களது மகள் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் விஸ்வநாதனின் மகனும், ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருபவருமான சந்தோஷ் என்ற சாமிநாதன் சுமதியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று வசதியான வீட்டு பிள்ளையை மயக்குகிறாயா என்று கேட்டுள்ளனர். இதனால் மாணவி சாமிநாதனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

22-04-2014 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி வீட்டுக்கு சென்ற சாமிநாதன் ஏன் என்னுடன் பேசுவதில்லையென கேட்டுள்ளார். தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். அப்போது மாணவரை பின் தொடர்ந்து வந்த அவரது தந்தை விஸ்வநாதன். தாய் செல்வராணி , விஸ்வ நாதனின் மைத்துனர்கள் சேட்டு, முனுசாமி, தாத்தா அய்யம்பெருமாள் உட்பட ஒரு 8 பேர் கொண்ட கும்பல் மாணவியையும், அவரது தாயார் மகேஸ்வரியையும் தாக்கி, நிர்வாணப்படுத்தி, மான பங்கப்படுத்தி, சித்ரவதை செய்துள்ளனர். அப்போது கடுமையாகத் தாக்கியது மட்டுமின்றி சுமதியின் பிறப்புறுப்பில் சாட்டைக்குச்சியையும் பாட்டிலையும் செருகிக் கொடுமைப்படுத்தி யுள்ளனர்.

மறுநாள் காலை (23-04-2014) மீண்டும் அவர்கள் வந்து தாக்கியுள்ளார்கள். அவமானம் தாங்க முடியாமல் தாயும், மகளும் விசம் குடித்து, அருகில் இருக்கும் ஒரு ஏரியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்து சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து லட்சுமாயூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தனபாலை சந்தித்து புகார் கொடுத்திருந்தும் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பார் என்று காத்து இருந்தனர். அதன் பிறகும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த தகவலை அறிந்த மகேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் லட்சுமாயூர் கிராம மக்கள் நேற்று காலை தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விஸ்வநாதன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். அங்கு வந்த ஓமலூர் டி.எஸ்பி முத்துக்கருப்பன், ஜலகண்டாபுரம் ஆய்வாளர் பரணிதரன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சந்தோஷ் என்ற சாமிநாதனை மட்டும் காவல் துறை கைது செய்துள்ளது.

நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் தோழர் பூமொழி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் அனைவரும் இணைந்து அடுத்த கட்டமாக 5-5-2014 திங்கள் அன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் அடுத்தக்கட்ட போராட்டங்கள் பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

பெரியார் முழக்கம் 01052014 இதழ்

You may also like...