‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது.

நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது.

தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.

கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த ஆவணப் படத்தில் பங்கேற்று கருத்து உரைத்தவருமான தீபக், வேலூர் பேராசிரியர் அய். இளங்கோவன், பேராசிரியர் சரசுவதி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன், ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், டி.எஸ்.எஸ். மணி, விகடன் செந்தில், நடிகை ரோகிணி, நாடக இயக்குநர்கள் பிரசன்னா, சிறீஜித், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செந்தில், இளைஞர் பெருமன்றத் தலைவர் திருமலை, மாணவர்கள் இயக்கத்தின் தினேஷ், ஜோ பிரிட்டோ, வழக்கறிஞர் கயல், திருமலை மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தபசி குமரன் மற்றும் தோழர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

திரையிடல் முடிந்ததும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த திண்டுக்கல் பீட்டர், உதவி செய்த மேட்டூர் பாலு, எடிட்டிங் செய்த ராஜா, ஒருங்கிணைப்பு செய்த தி. தாமரைக்கண்ணன் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் வந்திருந்தவர்கள் தங்கள் கருத்தினை பரிமாறிக் கொண்டனர். வந்திருந்தவர்களின் சந்தேகங்களுக்கு இப்படத்தில் பங்கெடுத்த மரபணு ஆராய்ச்சியாளர் டாக்டர் அரவிந்த் இராமநாதன் விளக்கங்கள் அளித்தார்.

தீபக், தமிழகமெங்கும் நடக்கும் மாற்றுத் திறனாளிகள் சுயம்வரத்தில் முதலில் இப் படத்தைப் போடப் போவதாகவும் இது மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைத்திருக்கும் ஆயுதம் என்றும் பதிவு செய்தார்.

அனைவருமே இப்படம் காலத்திற்கு தேவையானது என்பதை கூறி, இதனை பரப்புவதற்கு தங்களால் ஆன அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினர்.

பெரியார் முழக்கம் 15052014 இதழ்

You may also like...