இந்து மதப் பண்டிகைகள்
சொர்க்கவாசல் மகிமை
மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் :
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால் , அக்கோயிலின் மதில்களை யும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே அதாவது `நாமத்தையே’ சாத்தி விட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான்- ஓடக்காரன் துணையோடு. அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் `பார்வானத்துறை’ ( பார்வானம் – சுடுகாடு, பார்வணம் -சிரார்த்தம் செய்யும் இடம் ) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று கொல்லப்பட்டவர்க் கெல் லாம் `முக்தியும்’ அளிக்கப்பட்டதாம்
(`திருமங்கை ஆழ்வார் வைபவம்’ என்ற நூல் ஆதாரப்படி)
சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படு கின்றதே `சொர்க்கவாசல்’ -அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
சிவராத்திரி
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப் படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்பட வில்லை யாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நட மாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டு விட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலை களைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலை களில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்) அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி – பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலை களால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.
அடுத்த கதை
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்ற படியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக்கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் றீண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.
மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின் றோம். இந்த பாழும் அர்த்தமற்ற-பொய்யான -ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
ஸ்ரீராம நவமி
இருபது லட்ச வருடங்களுக்கு முன் ராமன் , அயோத்தி இருந்தனவா? இந்த நாள் – கோள் இருந்தனவா? ராவணன் இருந் தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லி கொண்டு வருடத்திற்கு ஒரு நாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப் படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒரு நாள் லீவும் கொடுக்கிறார்கள்.
ராமன் பிறந்தநாள் என்று சொல்லப்படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20லட்ச வருடங்களில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும்-உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம்-மனிதன்- காடுமேடு- உலக பூகோளம் மலை- சமுத்திரம் போன்ற யாவும் அழிவும்-மாற்றமும் அடைந்து விடும் . இது யாவரும் அறிந்ததும்- புராணக் கூற்றும் -சரித்திர உண்மையும் ஆகும்.
இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அனேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு ராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் – மாதம் – தேதி – கிழமை நாள் – கோள் இன்ன இன்னது என்பதும் அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு, பாண்டியநாடு -இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?
20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறை யாமல் இருக்கமுடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் சுகவாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் – செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் – அறிவாளிகள், பூகோளம் விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள் என்பது நமக்குப்புரியவில்லை.
இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பதும் அதிசயமாக உள்ளது.
வடநாட்டில் ராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் ராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தை பார்ப்பனரும் வடநாட்டாரும் செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக்கூடாது? ஆகவே மாணவர் கள்,இளைஞர்கள், திராவிடர்கழகத் தோழர்கள் , கட்டாயமாகச் சிந்தித்து நல்லபடி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும் அவசியம் என்றும் தோன்றினால், இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர் களுக்கு இருப்பதால் இதுபோன்ற (பார்ப்பனப்)பிரச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்தப்படியான பித்தலாட் டங்களில் ஏமாறாமலும் நம்மை இழிவு படுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் ராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்கவேண்டும்.
நவராத்திரி
நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் – இரவிலும் கொண்டாடப் படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக் குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள் களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம்படைத்த வைசியனுக்கும் மாத்திர மாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடை யவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு `ஆயுதபூசை’ என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடு கிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கை களைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற் சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள்.
நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்ன வென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்ட வர்கள் ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களா னதனாலும், இந்து மதத் தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப் பட்ட புராணக்கதைகளிலிருப்ப தாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களிடையேயும் உண்டு. மற்றவர்கள் `சரஸ்வதிபூசை’ யன்று துர்க்காலட்சுமி `ஸரஸ்வதீப்யோ நம’ என்று கூறிப் பூசை தொடங்குவார்கள்.
முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால் , இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவ பிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷா சூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்ற தனால் பார்வதிதேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத் தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக்கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர் களுக்கு இதில் வயிறுவளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந் தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரிய வர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை , ஆராதனைகள் , ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த
பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்ன வென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷறீத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். பிதுர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நமபீ என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக் கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல் லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக் கிறார்கள்?
முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந் தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டு தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடு கிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக் கிறது.பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு , கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.
இதை நம்பி நடக்கும் நம்மை விட , மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத் துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப் பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாக வும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத் தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட தாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.
கிரேதாயுகம் முதற் கொண்டு , இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூகங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்Žறீறு வருடங் களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு , வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப்பட்டிருக்கையில் நமது ‘சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்’ அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று குடிஅரசு கேட்டு விட்டால் சமயவாதியும் , சாஸ்திர வாதியும் ‘அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது’ என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா என்றுதான் கேட்கிறோம்.
மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் ‘பரிவேட்டை உற்சவம்’ என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று ‘பகவான்’ எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி , அந்த மரத்தை எரித்து விடு மாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள் கருத்தை வைத்து வைத்துத் தான் நம் நாடு உள்ளேயே போயிற்று . பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள் . (எந்த சூட்சும மும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேச மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்த மானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள் . இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அனேகம்.
மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமை யானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஒடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்கிறார்கள்.
கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடு வோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் ‘புண்ணிய தீர்த்தத்தில்’ கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித் திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒரு தரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய் கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்ச மும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த கார ணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்
‘ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார் கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்ப தில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமா னர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா?’ என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்திகர் கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்ப னர்களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக் கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகிவிடுவோமா? நீயே சொல்லு?
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக் கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண் களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்க ளில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?
இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக் காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்ப னர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரிகளையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடு வோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலை யில் கவலையற்றுத் றீங்குகிறதே!
வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற் றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?
சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்ட பமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண் டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார் கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும் , வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய `கடவுள்’ களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப் பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புபற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.
சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனா ளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.
முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடு வார்கள் என்ற பயம் இருந்தால் விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?
குளிப்பதற்காகச் சென்ற பார்வதி தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற் படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!
ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளா மல் இருக்கமுடியுமா? எனவே, சுத்த ஆபாசமும் அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.
அடுத்தப்படியாக , அவள் குளிக்கும்போது அங்கே வருகின் றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், “இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், நான் வரும்போது நடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன் என்றான்.
இதிலே குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தா லும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை?
இரண்டாவது அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்துவிட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது?
மூன்றாவது அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்?
இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப் புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும்.
இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலைதுண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, “நாதா என் அருமைச் செல்வம்-என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது!” என்று கூறினாள்.
பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.
மற்றொன்று பரமனும்,பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண்யானையும், பெண்யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதை ஆசையால் பரமனும் பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றது தான் விநாயகர்.
மூன்றாவது,
ஒரு நாள் பார்வதியும் பரமனும் போய்க்கொண்டு இருக்கை யில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார் களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம் . ஆகவே, அப்படிப் பிறந்தது தான் விநாயகர் என்றும் கூறுகிறார் கள். ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால் , இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வட நாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி-விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.
எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை. இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)
சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின் றார்கள்.
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கிய தையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதை களின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக் கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவ மெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேட உருவ மெடுத்து அவளைப்பின் தொடர்ந்து ஓடவும் , சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப் பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.
இரண்டாவது,
ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க , அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி , மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக் கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழி லுக்கு ஆதார மானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதிபூசை ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.
இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் , தராசு, படிக்கல், அளவு மரக் கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களை யும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை களையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங் களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார் கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத் தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதா விட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்கா மலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணய மானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக் கின்றார்கள். அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின் றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை – சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கின் றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 த்துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்க வேண்டும்.
இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த் தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தை யும் எழுத்தையும் சரஸ்வதி யாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளி களாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியா பார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து “முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டுமிராண்டிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும், தொழிலா ளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்! இராசாக்கள் கொலு இருப்பது , பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர் களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை .
தீபாவளி
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மான மில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார் கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை , விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீய நாளாக , அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித் தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப்பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவை களில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டு மிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங் கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வள முள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்லமுடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளையமுடியும்?
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
- ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
- தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம்(உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
- விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
- ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
- அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
- அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
- தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
- விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக்கொன்றான்.
- இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
- இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
1.பூமி தட்டையா? உருண்டையா?
2.தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3.எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4.சுருட்டினால் றீக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5.எங்கிருந்து றீக்குவது ? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
- விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம்என்ன?
7.அரக்கனைக் கொன்று பூமையை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8.பூமி மனித உருவா? மிருக உருவமா?
9.மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளைஉண்டாகுமா?
- பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும். இவைகளைக் கொஞ்ச மாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத் துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா” என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத் தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான `சனிக்கிழமை பெருமாள்கள்’ உள்ள ஊர் களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர் கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறி களையும், அயோக்கியர் களையும் மெனக்கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ , சூதாடாவோ கையில் பணமும் கொடுத்து இவ்வளவு போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச்சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடு களவும் அறிவு இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.
புரட்டாசி சனிக்கிழமை வந்தால் தங்களுக்குப் பட்டை நாமம் போட்டுக்கொண்டும் , செம்புக்கும் நாமத்தைப் போட்டுக் கொண்டும் துளசி, அரளிப் பூவையும் அந்தச் செம்புக்கு சுத்திக் கொண்டும் `வெங்கிடாஜலபதி கோவிந்தா’ என்றும் , `நாராயணா கோவிந்தா’ என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக்கொண்டு போவதில் ஏதாவது பலன் உண்டா என்றுதான் கேட்கிறேன்.
மற்றும், திருப்பதிக்குப் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும், தாடிமயிரும் வளர்த்து, வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக் கொள் வதும், பெண்பிள்ளைகள் சுற்றத்தாரை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியில் போட்டுப் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படியிலோ இலாபத்தில் பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும் ஆன பண மூட்டையைக் கட்டிக்கொண்டு, கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக் குறைக்குத் தெரு வில் கூட்டமாய், `கோவிந்தா கோவிந்தா கோவிந்தா’என்று கூப் பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயிலுக்குக் கொடுத்துத் திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும் ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும், அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக்கொள்வதும் கொண்டுபோன பணத்தை உண்டியலில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக் கடியில் இடிபடுவதும் பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேக வியாதிக்காரர்களுக்கும், வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர்களிலும் செய்த மாமணி மாலைகளையும் வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொள் வதும், மலைக் காய்ச்சலோடு மலையில் இருந்து இறங்கி வருவ தும், வீட்டுக்கு வந்து “மகேஸ்வர பூஜை” நடத்துவதும், பிராமண சமாராதனை செய்வதும் தவிர , மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக் கத்திற்கோ மதத்திற்க்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாக அதாவது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங் களை விடும்படி செய்ததாகவாது நம்மில் யாராவது பார்த்திருக் கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகிறது என்பதை எந்தப்பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா? என்றுதான் கேட்கிறேன்.
கார்த்திகைத் தீபம்
கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்பிரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங் களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்ற வற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!
இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்து விடு வார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படு பவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!
அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப் படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.
இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள் அடுத்த கதை
ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி பிஇந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் பெரியவர்பீ என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம். பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு ‘தாழம்பூ வந்துகொண்டு இருந்த தாம். அதைக் கண்டு பிரம்மன், ‘தாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு கால மாய் வருகின்றாய்’ என்று கேட்கவும் ‘நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக் கிறேன்’ என்றதாம். உடனே பிரம்மன். ‘நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா?’ என்று கெஞ்சினா னாம் . அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன் கோபங்கொண்டு ‘பொய்சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது’ என்றும் சாபமிட்டாராம்.
உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக ‘இம்மலை யின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்’ என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னா னாம். இது தான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.
இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண் காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்கு பவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத் துரோகி , மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகள் என்ற பட்டங் களைச் சூட்டி விடுகின்றார்கள் . சிறிதாவது பொறுமைகொண்டு, நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.
மாரியம்மன் திருவிழா
கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராமதேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.
இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அன்னிய புருஷன்மீது இச்சைப்பட்டு , அதா வது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ர சேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்று விடும்படி யாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளையிட்டார். பரசு ராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து மகனுக்காக மாரியை பிழைப் பிக்கச் செய்ய இசைந்து. மந்திரநீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில், கொலைக்களத்தில் பலமுண்டங்கள் வெட்டப்பட்டு இருந்தால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள் ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலை யுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து ‘நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு’ எனக் கூறி அனுப்பினான். அதுமுதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன்வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்கும் கோயில் கட்டிமாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள் . இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில் மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில் அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப் பட்டதால் அவள் அவனுடன் உடன் கட்டை ஏறி னான். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும் அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள “பஞ்சமத்” தெருவில் நிர்வாணத் தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக்கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும்,பழமும், இள நீரும் கொடுத்து உபசரித்தார்கள் ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம் தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை , உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
- சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
- கார்த்த வீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டு பிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும் கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள் கள் இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம் , நாகரிகம் என்பவை இல்லாமல், இவையாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதுபற்றிக் கவலைப்படவேண்டாமா என்றுதான் கவலைப் படுகின்றேன்.
மகாமகம்
மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு திருவிழா கொண்டாடப் படு கிறது. அதுபற்றி எல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால் , தீர்த்தம் , ஸ்தலம், மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு றீரம் ஏய்க்கப் பட்டு , கடையர் களாய், மடையர்களாய் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
குளம் என்பது ஒரு சாதாரணத் தெப்பக்குளம் தீர்த்தம் என்றாலும் நதி என்றாலும் குளம் என்றாலும் மழை பெய்வதனால் எற்படும் வெள்ளங்களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் ஓடை அல்லது நீர்ப்போக் காகும். ஊரில் உள்ள அசுத்தங்களையும் , கசுமாலங்களையும் அடித்து வந்து தேக்கி இருப்பது தான் மற்றக் குட்டித் தீர்த்தம் என்பதும்,கிணற்றுத் தண்ணீர் ஊற்றம் போன்ற ஊற்றாகும்.
மேலும், அந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் (மாமாங் கக் குளத்தில்) வடக்கில் ஏழு தீர்த்தங்களும் கிழக்கில் நான்கு தீர்த்தங்களும் நடுமத்தியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளதாகவும், ஆக இந்த மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அந்தப் புராணத்திலேயே கூறப் பட்டுள்ளது. இந்த விஷயம் எவ்வளவு நகைக்கத் தகுந்த விஷயம். இதை எழுதியவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு முட்டாள் என்பது அல்ல நமது கேள்வி! இதைப் படித்துப் பார்த்து அதன்படி நம்பி நம் மக்கள் நடப்பார்கள் என்று நம் மக்களை எவ்வளவு முட்டாள்களாகவும் அடி வண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பது தான் நமது கேள்வி. மேலும், கும்பகோணம் ஸ்தலபுராணத்தைப் பார்த்ததைக் கீழே குறிப்பிடுகின்றோம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி , சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னிகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரம சிவனை அடைந்து, “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு தங்களைப் பாவங்களிலிருந்து மீட்டுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களின் பாவங்களைச் சுமப்பதை எப்படிப் போக்கிக் கொள்வது” என்றதும், சிவன் “கும்ப கோணத்திலே தென் கிழக்கில் ஒரு தீர்த்தம் உண்டு. அங்கே பன்னி ரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் மகாமக நாளன்று குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்றதும், “கும்பகோணம் எங்கே உள்ளது?” என்று கன்னியர்கள் கேட்டார்களாம் அதற்குச் சிவன்,
“ நீங்கள் எல்லோரும் காசிக்குப்போங்கள். அங்கே வந்து நான் விக்னேஸ்வரன் எனும் பெயரில் அழைத்துப்போகின்றேன்” என்று சொல்லி குளத்தில் அவர்களை குளிக்கச் செய்து, பிறகு சிவனும் அந்தக் கன்னியர்களும் அங்கேயே கோவில் கொண்டு விட்டார்கள். அந்தக் குளத்தில் குளிப்பவர்களுக்கு சர்வ பாவமும் தொலைந்து புண்ணியம் உண்டாகி, சர்வமங்களமும் உண்டாகும் என அப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப் பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சாமியை எப்படியெப்படி வணங்குவது என்பதும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கதையை ஆதாரமாக வைத்து இந்த மகாமக உற்சவத்திற்கு எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், விளம்பரங்கள், பணச்செலவுகள், கஷ்டங்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
அடுத்து, பாவமுள்ள மனிதர்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள நதிகளில் ஸ்நானம் செய்தால் நதிகளுக்குப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் அறிவோ உண்மையோ உள்ளதா? மேலும் அந்தப் பாவத்தைத் தொலைக்க நதிகள் மகாமகத் தீர்த்தத் துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என யோசியுங்கள்.
இத்தனைப் பாவங்களையும் தீர்த்துத் தன்னிடம் பெற்றுக் கொண்ட மகாமகக்குளம் எந்தஉருவில், எங்குப் போய் தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதை யோசித்தால் கடுகளவு அறிவுள்ள வனாவது இதை ஏற்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்!!
கந்தசஷ்டி
இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.
“ உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்” என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.
தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காத தைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்தஉலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக்கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சிவன், “நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தி னால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது” என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்த னராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.
கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு `காஞ்சிபுரத் திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்’ என்று கூறினாராம். அதன் படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.
கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர் கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் , முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.
ஸ்கந்தம் என்றால் , விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?
அய்யப்பன் கதை
பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி `உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்’ என்றான் அதற்கு பத்மாசூரன் `நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படி யாக வரம் அளித்தருள வேண்டும்’ என்றானாம்.
சிவனும் `அவ்வளவுதானே! அளித்தேன் போ!’ என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அதற்கு விஷ்ணுவானவன் `அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்.’என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றான். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு உடன்படுகின் றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டுவா என்று கூறினாள்.
அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில் கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப்பெண் வேடம்எடுத்துக் கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.
அதற்கு சிவன், `எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்’ என்றான் விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான் . அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.
இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்ப துண்டு. எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும். நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கைவிபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன் . இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.
சங்கராந்தி
பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும் , உழைப்பின் உயர்வை, உலகுக்கு அறிவுக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்! அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்
சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர் களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷீ ணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக் களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்தி ருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் என்பர்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரை யொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர்.
இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்த பார்ப் பனர்கள். மழை பொழிவதாம்- அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் – பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே அதை நம்பப் போகிறீர்களா?
கிருஷ்ண ஜயந்தி
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், `உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்தர்கள் தொல்லை பொறுக்கமுடியவில்லை அதைப்போக்க வலிமை யுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணு வைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரை பிடுங்கிக் கொடுத் தானாம். அந்த இரண்டுமயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத் தில் உள்ளது.
வருஷப்பிறப்பு
வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து `நீர் அறுபதனாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலா காதா என்ன?’ அதற்குக் கண்ணன் `நான் இல்லாப் பெண்ணை வரிக்க’என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லா விடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு `நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங்கொண்டேன்’ என்றனன்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு கேவலமான ஆபாசமான , அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடுபவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது?
கிருத்திகை ஏன்?
சப்த இருடிகளில் வசிட்டர் ஒழிந்த மற்ற அறுவரின் மனைவிமாரை ஒருமுறை அக்கினிபகவான் மோகித்தான் . இதனை அறிந்த அக்கினியின் மனைவியாகிய சுவாலை, அவர்களால் ஒருவேளை தனது நாயகனுக்குச் சாபம் நேரக்கூடும் எனப் பயந்து, அருந்ததி நீங்கிய மற்ற ஆறு பேர்களின் உருக்கொண்டு அக்கினியைக் கூடினாள். இதை அறிந்த ஆறு ரிஷிகளும் தம் தேவி மார்கள் குற்றப் பட்டனர் என்று தமது தேவியரை வினவினர். அவர்களோ நடந்ததைக் கூறினர். ஆனால் , அவர்கள் அதுகேட்டுத் தேறாதிருந்தனர். இதனால் அந்த ஆறு மனைவியரும் நட்சத்திரப்பதம் அடைந்தனர். இவர்கள் அறுவரும் குமாரக் கடவுளுக்கு முலைப்பாலூட்டி விரதப் பல மடைந்தனர்.
( அபிதான சிந்தாமணி; பக்கம்445 )
அமாவாசை ஏன்?
அச்சோதை என்னும் புண்ணிய நதி வடிவமான பெண் மாரீ மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமாரி. இவள் தன் பிதுர்களால் நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் நதிக்கரையில் 1,000 வருஷம் தவஞ்செய்ய, பிதுர்க்கள் பிரத்தியட்சமாயினர். அவர்களுள் ஒருவ னாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு, பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ்செய்தாள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை `அமாவாசை’ஆக்கினான்.
(அபிதான சிந்தாமணி பக்கம் 26)
ஆயுதபூஜையால் அழிந்த ராஜ்யம்
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்கமன்னன் செங்கமல தாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் றீண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமயமாகும். படைவீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூசைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளை யும். பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள் , “மன்னா கவலைப்படாதீர்கள் ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திரவிரோதம். நம் நாட்டின் மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனே ஓர் இந்து, மேலும் பரம வைணவன். ஆகவே திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படை களைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்”என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச்செடி களை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச்செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனா யாசமாகவும் துளசிச்செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக் குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன் “வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர்செய்தல் கூடாது” என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒழிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும் வேலைத் றீக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின. இதனால் தானோ “பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கர் துரைத்தனம் கெட்டது”என்று பழமொழி ஏற்பட்டது போலும்.
ஆயுதபூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?
நல்லநாள், கெட்டநாள், பண்டிகை கொண்டாடுவதெல்லாம் எதற்காக? மதத்தாலே ஏற்பட்ட சாதியை புராணத்தால் புகுத்தப்பட்ட சாதியை ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் கொண்டு வருவதற்குத் தனித்தனியாகப் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக , பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், மூலம் பிரசாரம் செய்வதே தவிர, அதனால் எந்தவிதப் பலனும் இருப்பதாகக் கூறமுடியுமா?