கடவுள் செயல் ஏழைகள் துயரம்

 

இடம் கோயில்.

பாத்திரங்கள் புரோகிதர்கள், ஏழை மக்கள், சாது.

ஆண், பெண், குழந்தைகள் ஆகியவர்கள் ஒரு கடவுள் விக்கிரகத்தின் முன் நின்று முறையிடுகின்றார்கள்:

ஓ கடவுளே! பஞ்சம்! பஞ்சம்!! இதைப் பார்த்துக் கொண்டு சகித்து மௌனம் சாதிக்கும் கடவுளே தங்களை வணங்குகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும்.

சதாகாலமும், தங்களையே தொழுகிறோம். ஆனால் தாங்கள் சிறிதும் செவி சாய்ப்பதில்லை.

“அதுவும் எங்கள் நன்மைக்கே” என்று நம்பும்படி கற்பிக்கப்பட்டிருக் கிறோம். அவ்வாறே நாங்களும் நம்புகிறோம். நாங்கள் எப்பொழுதும் நம்புகிறவர்கள். யார் எதைச் சொன்னாலும் நம்புகிறோம். அப்படியெல்லாம் நம்பியும் இன்னும் பட்டினி கிடக்கின்றோம்.

தயவு செய்து எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்! நாங்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்படுபவர்கள், உம்முடைய மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள், உணவற்றவர்கள், ரத்தமற்றவர்கள்.

குப்பைமேடுகளிலும், அழுக்கு மூலைகளிலும், குடிசைகளிலும் ஆடுமாடுகளைப்போல் சதா “துன்பம்” என்னும் கருவிலேயே வளர்ந்து வருபவர்கள். ஆதரவற்றவர்கள். ஏனைய ஜனங்களால் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்ட, பசிப்பிணியால் வாடிவதங்கும் அனாதைகள். எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்.

(அருவருப்பும், அலட்சியமும் நிறைந்த ஒரு சிரிப்பு விக்கிரகத்தின் பின் புறமிருந்து கேட்கிறது)

மீண்டும் ஏழை மக்கள்: எங்கள் நெஞ்சுலர்ந்திருக்கிறது. எங்கள் குழந்தைகளின் உதடுகளெல்லாம் காய்ந்திருக்கின்றன. இன்னும் சில இறந்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய குடிசைகளில் தானியமே கிடையாது, ஆனால் ஒரு சிலருடைய களஞ்சியங்களில் தானியங்கள் நிறைந்திருக்கின்றன. அவர்கள் விலைக்கு வாங்கி சேமித்து வைத்திருக்கிறார்கள். எங்களால் விலைக்கு வாங்க முடியாது; விலைகள் உயர்ந்து விட்டன. அந்தோ கஷ்டம் நாங்கள் என் செய்வோம்? எங்கள் கையில் காசில்லை. இதோ தங்களுக்கு புஷ்பங்கள் கொண்டுவந்திருக்கிறோம்.

மற்றொருவர்: நான் வெறுங்கையோடு தான் வந்திருக்கிறேன்.

ஒரு பெண்: இதோ நான் தேங்காய் பழம் கொண்டு வந்திருக்கிறேன். என் கையிலிருந்த காப்பை விற்றுத் தேங்காய் பழம் வாங்கினேன்.

மீண்டும் ஏழைகள்: சதா துன்பம்! ஆண்டவனே பேசக் கூடாதா? நாங்கள் ஏழைகளாகிய நாங்கள் ஆதரவற்ற நாங்கள்… பசியால் மடிகின்ற நாங்கள், சதா காலமும் ஏன் துன்பத்திலும், கஷ்டத்திலும் அழுந்தித் தவிக்க வேண்டும். தாங்கள் வாயைந்திறந்து பேசக்கூடாதா? நாங்கள் அருகதை யற்றவர்களாக்கும். எல்லாம் தங்கள் சித்தம்.

மறுபடியும் ஏழைகள்: ஆண்டவனே! எங்கள் ஆண்டவனே! நாங்கள் எதையும் சகித்துக் கொள்வோம். ஆனால் ஓ கடவுளே! எங்கள் குழந்தைகள் பசிப்பிணியால் மடிகின்றன. கொடுமை! அந்தோ கொடுமை! என்றென்றும் துன்பம் எங்காவது தீப்பற்றிக்கொண்டால் எங்கள் குடிசைகளே அதிவிரைவில் பற்றிக்கொள்ளுகின்றன. காலரா முதலிய தொத்து நோய்களால் எங்களில் அநேகர் ஈக்களைப் போல் மடிந்து விடுகின்றனர். மழைவந்தால் எங்கள் குடிசைகள் ஒழுகுகின்றன. எங்கள் குழந்தை குட்டிகளெல்லாம் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் எங்கள் குடிசைகளை யெல்லாம் கங்காதேவி கமளீகரம் செய்து விடுகிறாள். அன்பான ஆண்டவனே! தங்களைத் திருப்திப் படுத்துகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும்.

(விக்கிரகத்தின் பின்புறம் தங்க நாணயங்கள் விழுகின்ற சப்தம் கேட்கின்றது.)

இன்னும் எவ்வளவு காலம் கஷ்டப்படுவது, நாங்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது எங்கள் “தலைவிதி” யாக்கும். அறிவாளிகளோ எங்களைப் பார்த்து நாங்கள் கஷ்டப்படத்தான் வேண்டுமென்கிறார்கள். எங்கள் எஜமானர்களும் அவ்விதமே கூறுகிறார்கள். முன் ஜென்மத்தில் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறோ மென்கிறார்கள். அது எங்கள் கர்மவினை என்கிறார்கள். அதையே அடிக்கடி சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

ஆனால் நல்ல வீடுகளில் யாதொரு வேலையும் செய்யாமல் பணக்காரர்களாய் சௌகரியமாய் வசித்து வருபவர்கள் வண்டி வண்டியாய்த் தானியங்கள் வாங்கி சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் முன் ஜென்மத்தில் நல்ல காரியங்கள் செய்திருப்பார்களாம். அந்த விதம் சொல்லியே எங்களை நம்பச் செய்கிறார்கள். நாங்களும் நம்புகிறோம். இந்த ஜென்மத்தில் அவர்கள் எந்த நல்ல காரியமும் செய்வதைக்காணோம். ஏன் அநேக காரியங்கள் செய்கிறார்கள். அவை நல்ல காரியங்களா? அல்ல.

ஆனால் செல்வவான்கள் கெட்ட செய்கைகள் செய்வார்களா? என்கிறார்கள். அப்படியானால் அவர்களிடமுள்ள தானியத்தில் எங்களுக்கு கொஞ்சம், கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தால் அது நன்மையான காரியமாகாதா? கட்டாயம் செய்வார்கள், கடவுள் சம்மதமிருந்தால் எல்லாம் அவர் விருப்பப்படிதானே நடக்கும், வறியராகிய நமக்கு அவருடைய சித்தம் மிகவும் கொடுமையான சகிக்க முடியாத் துன்பத்தோடு கூடிய உருக்கக் கூடிய கஷ்டத் தோற்றத்தோடு வருகிறது அவரது சோதனையெல்லாம் அவரது சித்தம். ஆனால் நம்மீது செலுத்தும் சித்தத்தின் தோற்றமென்ன? காலரா, பிளேக், நெருப்பு, வெள்ளம், பஞ்சம் முதலிய இந்த தோற்றத் தோடேயே நம்மை ஆசீர்வதிக்கிறார்.

இவை மட்டுமா? வரிப்பழு, அதிக வேலை, தூசி, உஷ்ணம், கல்லுடைத்தல், பாரமான சுமைகளை தூக்கல், வியர்வை, களைப்பு, அபராதம், எஜமானனின் கடுங்கோபம், வசவு, தண்டனை இது போன்றன.

ஆனால் சிலருக்கு வேறுவிதமாய் தோற்றமளிக்கிறார். நல்ல காற்று, சுவையான உணவு, பெரிய வீடுகள், பட்டு மெத்தைகள், பிரகாசமான விளக்குகள், அசையாத வாகனங்கள், ஆடல் பாடல்கள், சிரிப்பு, சந்தோஷம் இவை முதலியன.

எப்படி இருந்தாலும் அவருடைய சித்தத்தை ஏற்று நாம் அநுபவிக்க வேண்டியதுதான். அவ்விதமே நாம் போதிக்கப்பட்டு வருகிறோம். ஒரு சிலர் ஏனையோர்க்கு இதை போதிக்கிறார்கள். எல்லோரும் அந்த ஒரு சிலரது சித்தப்படி அடங்கி நடக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒரு சிலரது சித்தம் கடவுளது சித்தமாகும். கடவுளே காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்றும்!!

(அக்கோவிலின் மற்றொரு பக்கம் நடைபெறும் ஒரு செல்வந்தர் விவாகம் அங்கு நடக்கும் நடன சத்தம், கைகள் கொட்டும் சத்தம் காதைத் தொளைக்கிறது.)

பசி… பசி… எப்படிச் சுடுகிறது? பிள்ளை பெற்றவளுக்குத் தெரியும் பிரசவ வேதனை என்பது போல பசியை அநுபவித்தவர்களுக்கே அதன் வேதனை தெரியும். ஒரு சிலருக்கு அது தெரியவே தெரியாது. ஏனை யோருக்கு அது தெரியும், அதிக காலமாகத் தெரியும். பசியென்ற நெருப்பு வயிற்றைச்சுடுகிறது.

மறுபடியும் ஏழைகள்: ஓ ஆண்டவனே! இப்போது ஒரு கைப்பிடி தானியமே வேண்டும். அதற்காகவே தங்களை வணங்குகிறோம்.

எங்களது பெண்களின் கண்ணீர் தங்கள் மனதை கரைப்பதில்லையா? எங்களது குழந்தைகளின் சோர்ந்த கண்கள் தங்கள் கருணையை ஈர்ப்ப தில்லையா? ரத்தம் வற்றிய அவர்களது உடல் தங்கள் கண்ணோட்டத்தை அழைப்பதில்லையா? உழைத்து ஒடிந்து போன அவர்களது சரீரம் தங்களது பெருமையைக் குறைப்பதில்லையா?

லட்சக் கணக்கானவர்கள் தாங்கள் தங்கள் சுயமரியாதை இழந்து மிருகங்களாகிக் கொண்டிருக்க தங்கள் சுயமரியாதையை நிலைநாட்ட இயலுமா? கஷ்டங்களெல்லாம் புண்ணியமானவையென்று அந்த ஒரு சிலர் சொல்லுகிறார்கள், கையால் அவர் கொடுக்கிற கஷ்டங்களுக்காக நாம் அவருக்கு வந்தனம் செலுத்த வேண்டுமாம். இது என்ன நியாயம்?

(வழக்கம்போல் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பிராமண புரோகிதர்கள் உள்ளே வருகிறார்கள்.)

அதோ அவர்கள் வருகிறார்கள்; மோட்ச வீட்டின் திறவுகோல் அவர்களிடமே இருக்கிறது. அவர்கள் மிகுந்த அறிவாளிகள்.

ஏழை மக்கள்: காப்பாற்றுங்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள்!

புரோகிதர்கள்: இதென்ன ஒப்பாரி வைக்கிறீர்கள். நீங்களெல்லாம் என்ன மிருகங்களா? நிம்மதியான இந்த இடத்தை அசுத்தம் செய்கிறீர்கள். (விக்கிரகத்தை சுட்டிக் காட்டி) அதோ பாருங்கள், என்ன மௌனமாய், சாந்தமே உருக்கொண்டு விளங்குகிறார் பகவான்.

ஏழைகள்: ஆண்டவனின் கோபத்தை சாந்தப் படுத்தவே நாங்கள் வந்திருக்கிறோம். அவரது கோபத்தினால் எங்கும் பஞ்சம்.

புரோகிதர்கள்: நீங்கள் ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறீர்கள்?

ஏழைகள்: நாங்கள் துன்பம் நிறைந்த மனதுடன் வந்திருக்கிறோம். கடவுள் காணிக்கை செலுத்துகிறவர்களின் குறைகளையே கேட்பவர், நாங்கள் எங்கள் உயிரையே காணிக்கையாக கொண்டுவந்திருக்கிறோம். துன்பம் என்னும் புஷ்பத்தையும் கொண்டு வந்திருக்கிறோம்.

புரோகிதர்கள்: அவருக்கு இவை தேவை யில்லை. பலருடைய துன்பத்தை அவர் பொருட்படுத்துபவரல்ல. சிலருடைய சந்தோஷமே திருப்தியளிக்கக் கூடியது. போங்கள் வெளியே. எவ்வளவு தைரியத்தோடு நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். மரியாதையாகத் திரும்பி விடுங்கள்.

ஒருவர்: நான் ஒரு தேங்காய் கொண்டுவந்திருக்கிறேன்.

புரோகிதன்: அஃதென்ன அற்பம்.

ஓர் வயோதிகன்: நான் ஒரு ஆடு கொண்டுவந்திருக்கிறேன். கூட்டத்திலுள்ளவர்கள் (கோபத்துடன்) அந்த ஆடு திருடியது, அவன் எஜமானனிடம் திருடியது.

வயோதிகன்: இல்லை! இல்லை! நான் அதை விலைக்கு வாங்கினேன்.

ஒருவன்: உனக்கு அவ்வளவு பணமேது.

வயோதிகன்: அது கடவுளுக்குத் தெரியும். என் மகளை விற்று அந்தப் பணத்திற்கே ஆடு வாங்கினேன். ஆட்டைப் பலியிடுங்கள், என் மகளைப் பலியிடுவதற்கு சமமாகும்.

புரோகிதன்: ஒரு ஆடு அவன் மகள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

(விக்கிரகத்தின் பின் புறமிருந்து சத்தம்.)

“எல்லா ஏழைகளும் ஆடுகளே”

புரோகிதன்: ஆட்டைக் கொல்லுங்கள். (ஆட்டை கொல்லப் போகும் அதே சமயம் ஒரு சாது உள்ளே வருகிறார்.)

ஜனங்கள்: யார் அது? ஓ கோ! அவர்தான் கடவுளைப் பற்றி பக்திரசம் ஒழுகப் பாடிப் புகழ்ந்து எழுதிய பக்தர். அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது.

சாது: கடைசியாக பைத்தியகாரனானதற்கு சந்தோஷிக்கிறேன். நாம் எல்லோரும் ஏன் கஷ்டப்பட வேண்டும், முட்டாள்கள்.

ஜனங்கள்: நாங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டு மென்று எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். தாங்களும் கூட முன்னம் சொல்லி யிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள்.

சாது: அப்படியா… நான் என்னுடைய பாட்டுகளைச் சுட்டுக்கொளுத்தி விட்டேன். பொய்யும் முட்டாள்தனமும் மோசமும் நிறைந்த முந்திய நாட்களைப் புதைத்து விட்டேன். என் வீட்டின் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு, பசியினால் வாடுகின்ற உலகத்தைப்பார்த்து அது “கடவுள் சித்தம்”, “கர்ம வினை” என்று புலமை நிறைந்த பாட்டுகள் பாடுவதும், மற்றவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையிலும், நோயினால் வீடில்லாமலும், கந்தையோடும், பசியோடும் வாடி வதங்குவதைப் பற்றி யோசிப்பதும், ஒரு சிலரது சௌக்கியமான வாழ்க்கைக்கு நேர் விரோதமாயிருப்பதும், கடவுளது அறிய முடியாத திருவிளையாடல்களில் ஒன்றென எண்ணியதும் எல்லாம் மோசமும் பொய்யுமேயாகும்.

கடவுளைப்பற்றி நான் அவ்வளவு புகழ்ந்தெழுதியதற்குக் காரணம் சௌக்கியமான வீட்டில் வசித்து வந்தேன். காலந்தவறாது கவலையின்றி உணவருந்தினேன். புஷ்பங்களும், பறவைகளும் அழகானவையென்று நினைக்க சாவகாசமிருந்தமையால் அவைகள் அழகானவை என்று எண்ணினேன். கடவுள் என்றால் என்ன? கவலையற்ற சாப்பாடும், அதன் பின்னர் ஏற்படுகிற வேலையின்மையும் சேர்ந்து உண்டாகிற முடிவே.

நீங்கள் பல நாள் பட்டினி கிடந்தீர்களானால் கடவுள் காற்றாய்ப் பறக்கிறார். கடவுள் என்பது செல்வந்தர்களது பொழுது போக்கு என்பதும் ஏழைகளை நசிப்பிக்க சவுகரியமுமான போதை வஸ்து என்பதும் எனக்கு இப்போது தெரிய வந்தது. அவர்களுக்கு உணவில்லை, கடவுளில்லை. ஓய்வில்லை, கடவுளில்லை என்ற இந்த உண்மைகளை, வறியனாகி, அதிக துன்பங்களை அனுபவித்த பிறகே நான் அறிந்து கொண்டேன்.

ஓர் வயோதிக மாது: நான் ஏழை, எப்போதும் ஏழை. ஆனால் கடவுளைப்பற்றி எண்ணம் உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. சாகின்ற நிலையிலுங்கூட அந்த எண்ணம் உண்டாயிற்றே.

சாது: அது இயற்கைதான். ஒருசிலர் ஏனையோரை கடவுள் என்ற மதுவை உண்ணும் கெட்ட பழக்கத்தில் ஆழ்த்தி விட்டார்கள். இறக்கப் போகும் மனிதனைக்கூட குடிக்காமல் தடுக்க இயலாது. இந்தக் கொடிய பழக்கத்தை விட ஒரே ஒரு மருந்துதானுண்டு. அது தான் ஞானம் உணவு, ஒவ்வொரு மனிதனின் உரிமை என்ற ஞானம். ஒவ்வொருவரும் அந்த உணவுக்காக மண்டியிட்டு வணங்குதலாகாது. ஆனால் சண்டை யிட்டுப் பெற வேண்டுமென்ற ஞானம்.

ஜனங்கள்: பெரியோர்களெல்லாம் அதற்காக வணங்கி, விரதமிருந்து தவமிருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே.

சாது: தெய்வ வணக்கம்………மது………ஆம் அதிக நாளாய் நாம் அந்த மயக்கத்தில் இருந்து விட்டோம். சகோதரர்களே! சகோதரிகளே! உண்மையாய்ச் சொல்லுங்கள். நீங்கள் வாழ்நாளெல்லாம் தெய்வ வணக்கம் செய்கிறீர்களே கடவுள் எப்போதாவது செவிசாய்த்து உங்கள் முறையீட்டைக் கேட்டதுண்டா? செல்வந்தர்கள் அதிகமாக கோவிலுக்குப் போவதையும் தெய்வத்தை வணங்குவதையும் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் போனாலும் சகல ஆடம்பரங்களோடும் தங்களை ஏனையோர் நன்கு மதிக்க வேண்டும், கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே போகிறார்கள் என்பதும் தாங்களறியீரா?

புரோகிதர்கள்: அவனை (அந்த சாதுவை)ப் பிடித்து வெளியே தள்ளுங்கள். பைத்தியக்காரனைப் போல உளறுகிறான் அவன்.

சாது: நாங்கள் பசியாய் இருக்கிறோம் உணவு வேண்டும். இந்தக் கல்லை (விக்ரகத்தை சுட்டிக் காட்டி) கேட்கிறோம். உம்மிடம் எங்களுக்குப் பேச்சில்லை.

புரோகிதர்கள்: உன்னுடைய முட்டாள்தனத்தை யெல்லாம் அவிழ்த்து விடாதே, அதிகப்பிரசங்க மடையா, மரியாதையாகப் போய் விடு, இல்லாவிடில் போலீஸ்காரரைக் கூப்பிடுவோம். நீ கடவுளையும் எங்களையும் அவதூறாய்ப் பேசுகிறாய்.

ஜனங்கள்: அந்தோ! அநியாயம், அவரைப் பிடித்துக் கைதியாக்கி அடைத்து விடுவார்களே.

சாது: அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் உழலும் உங்கள் சிறையைவிட வேறு சிறை இருக்க முடியுமா? புரோகிதர்களே! நீங்களும் உங்கள் கடவுளும் பேடிகள். சக்தியற்றவர்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. போலீஸ் உதவி கொண்டு உங்களையும் உங்கள் கடவுளையும் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்.

சாது: பசியால் வாடும் ஜனங்களே! புரோகிதர்கள் பரம்பரை ஜாலவித்தைக்காரர்கள். உங்களுடைய அறியாமையையும், மூட நம்பிக்கையையுமே கருவியாகக் கொண்டு அவர்கள் உங்களிடம் பணம் பறித்து உண்டு கொழுத்து வருகிறார்கள். இந்த ஜன்மத்தில் நன்மை செய்தால் அடுத்த ஜன்மத்தில் பலன் அநுபவிக்கலாம் என்கிறார்கள். முன் இறந்தவர்கள் யாராவது வந்து நம்மிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக் கிறார்களா? அல்லது நாமாவது அறிய முடிகிறதா? கிடையவே கிடையாது. இன்று கஷ்டப்படுகிற நமக்கு இன்றே பரிகாரம் கிடைக்க வேண்டும். இல்லையேல் அது மோசமும், முட்டாள் நம்பிக்கையுமே யாகும். அதை நீங்கள் ஏன் நம்பவேண்டும்?

புரோகிதர்: நாங்கள் உன்னை சபிக்கிறோம்.

சாது: புரோகிதர்கள் ஆசிர்வதிக்க அறியார்களே!

புரோகிதர்: நீ அதிகம் பேசினால் கடவுள் உன்னைக் கொல்வார்.

சாது: உமது கடவுளை நான் கொல்லுகிறேன் பார்.

(சாது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து விக்கிரகத்தை உதைத்துத்தள்ள அதன் கீழ் தங்க நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன.)

புரோகிதர்கள்: நாம் மோசம் போனோம், நமது ரகசியமெல்லாம் வெளியாய் விட்டன. நமது பிழைப்பே போய்விட்டது.

சாது: (ஜனங்களைப்பார்த்து) இப்பொழுது உங்கள் கண்களினால் உண்மையைக் கண்டுணருங்கள். அதோ தங்க நாணயங்களைப் பாருங்கள்.

ஜனங்கள்: ஆ என்ன ஆச்சரியம்! தங்க நாணயங்கள்!

சாது: ஒவ்வொரு நாணயமும், நம்முடைய ரத்தத்தின் துளிகளாகும்.

நீங்கள் வணங்கிய விக்ரகத்தின் கீழ் என்ன இருக்கிறது? உண்மையை இப்போது அறிந்தீர்களா? (மனமுடைந்த சிரிப்புடன் எல்லோரும் வெளியே வருகின்றனர்.)

பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் ஜுன் 1936

You may also like...