பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு 60% நிதிச்சுமையை ஒன்றிய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக...
