அரசியல் நாணயம்
சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப்பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப்பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன. பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரி கைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது. ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவை களிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “…………..இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில் தான் துர் அதிர்ஷ்டவசத்தினால்...
