புதிய சகாப்தம்
திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற்கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திர கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடானதாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடையமுடியாமல், பெர்க்கன் ஹெட் பிரபுவின் இழிதகையான பழிச் சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கிறது. ஏனெனில், நம்மிடை பிரசாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது ‘தேசியம்’ என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டு வந்தது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ்காரம் இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் ஐயமில்லை. எப்பொழுது வெள்ளையர்கள் நம்மை அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர்...
