ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்? இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே?
தேர்தல் சம்மந்தப்பட்ட காரியங்களில் ஆதிதிராவிடர்கள் என்பவர் களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதில் ஆதிதிராவிடர்கள் என்பதாக எந்தெந்த வகுப்பார்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போது பொது ஜனங்களுக்குள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. லோக்கல் போர்ட் சட்டப்படியும், முனிசிபல் சட்டப்படியும் ஆதி திராவிடர்கள் என்பதற்கு வியாக்கியானம் சொல்லி இருப்பதில் “இந்து மதத்தைத்தழுவிக்கொண்டிருக்கும் பறையர், பள்ளர், வள்ளுவர், சக்கிலியர், தோட்டிகள், மாலா (தெலுங்கு பாஷையில் பறையர்) மாதிகர் (தெலுங்கு, கன்னட பாஷையில் சக்கிலி) ஹொலையர் (கன்னட பாஷையில் பறையர்) செருமர்கள் (மலையாள பாஷையில் பறையர்) ஆகிய இந்த வகுப்பார்கள் மாத்திரமே ஆதிதிராவிடர்கள் என்கின்ற வகுப்பில் அடங்கி இருக்கின் றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்திலோ மேற்கண்ட வகுப்பார்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று வகுப்பாருக்கு மாத்திரமே பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனால் இந்தியாவில் தீண்டா தார் என்கின்ற வகுப்பில் நடைமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற வகுப்பார் களில் அரைவாசிப்...
