இரண்டு மசோதாக்களின் கதி
இந்திய சட்ட சபையில் இம்மாதம் 4-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகள் நமது நாட்டுச் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் கவனிக்கக் கூடிய தொன்றாகும். அன்று நமது நாட்டுப் பெண்மக்களுக்கு விடுதலையளிக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தன. அவைகளில் “விதவைகளுக்கு சொத்துரிமை” அளிக்கும் மசோதா ஒன்று. இம்மசோதா விவாதத்திற்கு வந்த காலத்தில், வைதீகர்கள் இதைப் பற்றி கூறிய அபிப்பிராயத்தையும் சென்றவாரம் எடுத்துக் காட்டி கண்டித்திருந்தோம். கடைசியாக இம்மசோதா தனிக் கமிட்டிக்கு அனுப்பப்படாமல் தோற்றது. இரண்டாவது “விவாக விடுதலை மசோதா” ஒன்று விவாதத்திற்கு வந்தது. கடைசியில் இம் மசோ தாவைப் பற்றிய விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் “விதவை களுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் போலவே தோற்றுப் போகும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இந்தியப் பெண்மணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் மசோதாக்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். முதற்காரணம் வைதீகர்கள்; இரண்டாவது காரணம் அரசாங்கத்தார்கள். இவர்களில் வைதீகர்களைப் பற்றி நாம் குறை கூறுவதில் ஒன்றும் பயன் உண்டாகப்...
