சுயமரியாதையும் காங்கிரசும்
சுயமரியாதை திரு. காந்தியால் 1921ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழை யாமை இயக்கமானது அரசியல் கொடுமைகள் ஒழிப்பதோடு பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கை கள் கொண்டிருந்தாலும் நம் போன்றவர்களின் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அது காணப்பட்டதை முன்னிட்டும், அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக நாலைந்து வருஷ காலம் உழைத்ததின் மூலமும் அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்பந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களை நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கைப் பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள் என்பதை நன்றாய் அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று. அங்கனம் யோசித்ததின் பலனாக நமக்குக் கிடைத்த பலன் என்னவென்றால் நமது மக்கள் அரசியல் விஷயமாய் கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும்...
