வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாடு
தலைவர் அவர்களே! தோழர்களே! ! இன்று இந்த மகாநாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள பல சங்கங்களால் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லுவேன் என்று தலைவர் சொன்னார். வரவேற்புப் பத்திரங்களை ஒரு சடங்காகவே கருதி வருகிறேன், அவை புராணக் கற்பனைகள் போல் இருக்கின்றனவே ஒழிய உண்மைகள் மிக அருமையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில விஷயங்களினுடைய பாராட்டுதலும் எனக்குச் சேர வேண்டியதில்லை. அவைகள் எல்லாம் எனக்குத் துணையாய் இருந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிவந்த வாலிபர்களுக்கே சேர வேண்டியதாகும். ஆதலால் அப்புகழ்ச்சிகளை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன். தோழர்களே! இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்த தலைவர் தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல். அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னை தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேனென்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது ஒரு அளவுக்காவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று...
