ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
ஈரோடு அர்பன் பாங்கியைப் பற்றியும், அதன் நிர்வாகத்தைப் பற்றியும் “”குடி அரசு” பத்திரிகையில் ஒரு குறிப்பு வந்திருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம். ஈரோடு அர்பன் பாங்கி வெகு காலம் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து வந்ததும், அது பார்ப்பனர் பாங்காகவே இருந்து வந்ததும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன சிஷ்யர்களுக்கும், அடிமைகளுக்கும் மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கு அதில் இடம் கிடைப்பதே கஷ்டமாய் இருந்ததைப்பற்றி அவ்வப்போது பல குறிப்புகள் குடி அரசில் வந்து கொண்டிருந்ததும் யாவருக்கும் தெரியும். இப்போது சுமார் 4,5 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கத்தின் பயனாய் பார்ப்பனரல்லாத மக்கள் விழிப்பெய்தி பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவது போலவே இந்த அர்பன் பாங்கி விஷயத்திலும் கண் விழித்தும் முன்னேற்றமடைந்து பாங்கியின் பயனை பார்ப்பனரல்லாத மக்களும் பங்கு வீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது அடைந்து வருகிறார்கள் என்பதைக் கேட்க பார்ப்பனரல்லாதார் எல்லோருமே மகிழ்ச்சி அடையக்கூடும். நிற்க சமீபகாலமாய் அதாவது 2,3 வருஷ காலமாய் ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டறேடானது ...
