அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்
நாகம்மையார் மறைவு ; கிறிஸ்துவ திருமணம் ; நிலவிய சூழல்: 15-05-2014, 22-05-2014 ஆகிய நாள்களிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நாகம்மையார் மறைவு – அடுத்து தடையை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் – அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது’ என்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம். இவை தொடர்பான வேறு சிலவற்றையும், அதாவது அந்த நாட்களில் நிலவி வந்த சமூக, அரசியல் சூழல்களையும் சற்று நோக்குவோம். அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கில அரசு சில ஆண்டுகளாகவே பொதுவுடைமைக் கருத்துப் பரவலுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடங்கியிருந்தது. 1929 ஆம் ஆண்டே எஸ்.ஏ.டாங்கே, அதிகாரி, தேசாய் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 32 பேர்கள் மீது “இந்தியாவில் பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க” சதி செய்ததாக வழக்குத் தொடுத்திருந்தது. “மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு” என்று அறியப்பட்ட அவ்வழக்கு ஏறத்தாழ நான்காண்டுகள் நடைபெற்று, அவ்வழக்கில் இருந்தோரில் 5 பேர்களை விடுதலை...