‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு
ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்