மரணத்திலும் கொள்கை வழுவாத பெரியார் தொண்டர்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் இராணுவ வீரரும், உறுதியான பெரியாரியல்வாதியுமான, தோழர் தம்புசாமி 8-3-2014 அன்று இயற்கை எய்தினார். பெரியார் பிறந்தநாள் அன்று ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்த அவர், தான் இறந்த பின்னர் எந்த விதமான மதச் சடங்குகள் செய்யக்கூடாது என்றும், தனது மனைவியின் பூ, பொட்டு, வளையல் முதலியவற்றை நீக்கும் எந்த விதமான முட்டாள்தனங்களையும் செய்யக்கூடாது என்றும், முடிந்த வரை நாத்திக தோழர்களால் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நீண்ட ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு முடிவெய்தினார். தம்புசாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19-03-2014 புதன்கிழமை அன்று தம்புசாமி இல்லம் அருகே நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தம்புசாமியின் படத்தை திறந்து வைத்து, தோழரின் கடிதத்தை படித்துக் காட்டி இரங்கல் உரை ஆற்றினார். பெரியார் முழக்கம் 27032014 இதழ்