திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்
திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’ என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...