கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்
ச. சிவலிங்கம்
தலைவர், சுயமரியாதை தலித் சக்தி
அரங்கின் மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று முழங்கினார்கள். அதேபோல மேடையில் இருந்தவர் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழங்கினார்கள். அரங்கில் இருந்த எனக்கு “சென்னை கலைவாணர்’’ அரங்கில் இருக்கின்றோமா எனும் எண்ண ஓட்டங்கள். ஆனால் இந்த முழக்கங்களை வரலாற்றுப் பதிவாக மாற்றியது கொண்டஜ்ஜி பசப்பா அரங்கமாகும்.
பெங்களூரின் மையப்பகுதியில் இருந்தது அரங்கம். கருநாடகத்தின் சட்டமன்றமான ‘விதான சௌதாவிற்கு’ கூப்பிடும் தூரத்தில்தான் அந்த அரங்கம் இருந்தது.
மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிவெள்ளத்தில் கருநாடகத்தின் நிலவியலைக் கண்முன் நிறுத்தும் வண்ணமயமான காட்சிகள்; பசுமையான காடுகள், மலைத் தொடர்கள், நீர் வீழ்ச்சிகள், தங்களின் அடையாளம் உயிர் பெற்றதைப் போல பாடிக்கொண்டிருந்தன. அந்த பாடல்களின் உட்பொருளாக – சுனுளு எனும் எழுத்துகள் மக்களுடன் உறவாட துடித்துக் கொண்டிருந்தன. ஆம்! அதுதான் “ராஷ்ட்ரிய திராவிட சங்கம்” – RDS ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் அரங்கத்தில் இருந்தனர். அதேயளவு மக்கள் அரங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்த டிஜிடல் திரைகளில் நிகழ்ச்சியைப் பார்த்தனர். பங்கேற்றோர் மனங்களில் புதியதோர் எழுச்சியைக் காண முடிந்தது.
ராஷ்ட்ரிய திராவிட சங்கம் நடைபோடவிருக்கும் பாதையையும் அந்தப் பாதையை மறைத்திருந்த தடைகளையும், அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கியிருப்போரின் ஆற்றலையும், சிந்தனை யாளரும் எழுத்தாளருமான பஞ்ஜகெரெ ஜெய பிரகாஷ் சங்கத்தின் திசைவழி உரையில் முன் வைத்ததைப் பகிர்ந்துகொள்வோம்.
“இந்திய மண்ணின் பூர்வகுடிகள் திராவிடர்கள், ஆதிவாசி சமுதாயங்களாக, பன்முகக் கலாச்சார பண்பாடுகளைக் கொண்டிருந்தனர். மொழிக் குடும்பங்களின் அடையாளங்கள் திராவிடர்களின் சிறப்பான கூறுகளாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளின் சமூக வரலாற்றைக் கொண்டிருக்கும் திராவிட சமுதாயங்கள் தங்களுக்குள் மக்களாட்சியைக் கொண்டிருந்தனர். திராவிடர்களில் பிறப்பால் மேல் கீழ் எனும் வேறுபாடுகள் இருக்கவில்லை.
இந்திய நாட்டின் பூர்வகுடிகள் திராவிடர்கள். சிந்துநதி நாகரிகம் நம்முடைய நாகரிகம். சிந்து நாகரிகத்திற்கு 5,000 ஆண்டுகளின் வரலாறு இருக்கின்றது. சிந்து நாகரிகத்தின் சமூகப் பண்பாட்டு அம்சங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றய உலக நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டிருந்த நாகரிகம் நமது நாகரிகம். அதில் சாதிமுறை இருந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை என்பது பற்றி உறுதியான முடிவுகள் இல்லை. எனவே இந்தியா நம் அனைவருக்குமான நிலமாகும். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட கவிஞர் பம்பன் “மனுஜகுலம் தானொந்தே வலம்” (மனிதர்கள் அனைவரும் ஒரே குலம்) என்று கூறினார். கன்னட கவி பம்பன் முதல் இன்றைய எழுத்தாளர் தேவனூர் மஹாதேவா வரை அனைவரும் மனிதகுலத்தை உயர்த்திப் பாடி யுள்ளனர். ஆரியர்களின் வருகைக்குப் பின்தான் மேல் கீழ் எனும் பாகுபாடு ஏற்பட்டது. புத்தர் வளர்த்த உயிர்களின்பால் கருணை, மக்களிடையே அன்பு, சகோதர உணர்வு முதலியவற்றை ஆரியர்கள் உருவாக்கிய சாதி, வர்ணாசிரம அமைப்புமுறை – அழித்து வருகின்றது. ஆரியர்களின் பண்பாட்டு ஒடுக்குமுறை கடந்த 2000 வருடங்களாக திராவிடர்களின் எல்லா அடையாளங்களையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறது. இப்பொழுது அரசியல் அதிகாரமும் இருப்பதால் உச்சகட்டமாக நமது பன்முகப் பண்பாட்டை அழித்து நம்மை ஒரே பண்பாட்டிற்குள் அடைக்க முயற்சிப்பதை நாம் சகித்துக் கொள்ள முடியாது. நம்மை மவுனப் பண்பாட்டிற்குள் அடைக்கப் பார்க்கின்றார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் மவுனமாக ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என எதிர்பார்க் கின்றார்கள்.
திராவிடர்களின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றுவதற்காக இந்தியா நம் அனைவரின் பூமி எனும் விழிப்புணர்வை வளர்த்திட நாம் அமைப்பாக செயல்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வரலாற்று சிறப்புமிக்க பணியை “ராஷ்ட்ரிய திராவிட சங்கம் – RDS ஆற்றும்” என பஞ்ஜகெரெ ஜெயப்ரகாஷ் தனது உரையில் வலியறுத்திக் கூறினார்.
இவ்விழாவில் கன்னட திரையுலக எழுத்தாளர் கவிராஜ் அவர்கள் தமது கருத்துகளைப் பதிவு செய்தார். அவர் கூறிய கருத்துகள் – “இந்தியாவின் ஆதிகுடிகளான திராவிடர்கள் மீது ஆரியர்கள் சகிப்புதன்மை அற்றவர்களாக இருக்கின்றாகள். அதன் காரணமாகத் திராவிடர்களைக் கீழானவர்கள் என எண்ணி நடத்தி வருகின்றனர். நமது மொழிகள், பண்பாடுகளின் மீது தீவிரமான ஒடுக்குமுறைகளை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் பெயரில் திராவிடர்களின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களையும், மொழிகளையும் வேரடி மண்ணோடு அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சமயத்தில் திராவிட மொழிகள் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் ஆரியத்தை நிராகரிப்போம் என்று முழங்கினார். நமது பாராளுமன்ற உறுபினர்கள் அனைவரும் வீரமற்றவர்களாக இருகின்றனர். நந்தினி (பால் உற்பத்தி குழுமம்) குழுமத்தை அழிக்க நினைக்கின்றார்கள். நமது மக்கள் பிரதிநிதிகள் வட இந்தியர்களின் அடிமைகளாக இருக்கின்றனர் என்று தமது ஆக்ரோஷத்தை வெளிபடுத்தினார். மேலும், ‘திராவிடர் என்றால் தென்னிந்தியாவைச் சேர்த்தவர்கள் ஒரே சாதி, ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்தவர்கள். ஆரியர்களின் படையெடுப்பால் திராவிடர்கள் சிதறியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் திராவிடர்கள் ஏன் ஒன்றுபட வேண்டும் என்றும் கேள்வி எழக்கூடும். மேல்வர்க்கத்தினரான ஆரியர்கள், திராவிடர்களைக் கீழானவர்கள் எனக் கூறி அவர்கள் மீது குரூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும் உழைக்கும் மக்களின் உணர்வுகளை கீழானதாக நிலை நிறுத்தி வருகின்றனர். அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, திராவிடர்கள் மீது ஆரியர்களின் தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. கன்னட இலக்கிய உலகின் இலக்கியவாதி ஒருவர், சமஸ்கிருத மொழியைப் புகழ்ந்து பேசுவ துடன் மட்டுமல்லாமல் சமஸ்கிருத மொழியிலிருந்து அ திகமான சொற்களைக் கன்னட மொழி ‘இரவல்’ பெற்றுள்ளது என்று கூறுகின்றார். அவருக்கு கன்னட மொழியின் வரலாறே தெரியவில்லை.
தமிழ்நாட்டில் மக்கள் திராவிட அடையாளத்தை காப்பாற்றி வருகின்றனர். அவர்களைப் போல நமது அடையாளங்களைக் காப்பற்றிக் கொள்ளாமல் எவ்வளவு வளர்ச்சியை அடைந்தாலும் அதனால் பயனில்லை என்று கூறினார். இந்த மாநாட்டில் உரையாற்றிய கன்னட போரட்டக்காராரும் பத்திரிகை யாளருமான ஜானகெரெ வெங்கட் ராமய்யா கூறிய கருத்துகள்.
பெரியார் அவர்களின் சிந்தனை வழியே நமது வழி. பெரியார் கருநாடகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமையாகும். நமக்கு விழிப்புணர்வு ஊட்டி யவர்கள் யாராவது இருப்பார்களென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமே என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.. தமிழர்களை எதிரிகளாக எண்ணியது சரியல்ல. தமிழர்களை எதிரிகளாக எண்ணும்படியான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
ஆரியர்கள் நமது வேர்களை அறுத்தெரிந்து கொண்டிருக்கின்றார்கள் கருநாடகத்தைப் பரிசோதனைக் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவு எளிதாக கருநாடகத்தைப் பரிசோதனைக் கூடமாக மாற்ற இயலாது. கன்னட சாகித்திய பரிஷத்தில் இருக்கும் புரோகிதர் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறுகின்றார் ஆகையால் திராவிடர்கள் அமைப்பாக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இம்மாநாட்டில் பேசிய ஏ.ஜி.கான் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக எவ்வாறு போராட வேண்டும் என்பதை இசுலாம் கற்றுத் தந்துள்ளதாகக் கூறினார். மேலும் அரசியல் சாசனத்தை நடைமுறைப் படுத்தும் இடத்திற்கு என் மக்கள் செல்லவில்லையென்றால் அரசியல் சட்டம் தவாறாகப் பயன்படுத்தப்படும் என்று ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ கூறினார். அவர் கூறியது உண்மையாகியுள்ளது என்றும் கூறினார்.
இம்மாநாட்டில் பேசிய மற்றொரு இலக்கியவாதியான எல்.என்.முகுந்தராஜ் அவர்கள், எதிர்வரும் நாட்கள் நாம் தலை நிமிர்ந்து நடக்கும் நாட்களாகும். அது இன்று முதலே தொடங்கிவிட்டது என்று பெருமிதத்துடன் கூறினார்.
திராவிட பூமி வளங்கள் நிறைந்த பூமி. திருடர்கள் செல்வந்தர்களின் வீடுகளில்தான் கொள்ளையடிப்பார்கள். அதைப் போன்றே வடஇந்தியர்கள் தென்னிந்தியாவைச் சுரண்டுகின்றார்கள். இது இராமாயண காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இராமாயணத்தில் கிஷ்கிந்த்தே என்று கூறுவது இன்றைய பெல்லாரியையே யாகும். பெல்லாரிக்கு இராமன் வந்தது, இரும்பிற்காகத்தான். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானைக் கொன்றது கே.ஜி.எப் தங்கத்திற்காகத்தான் என்பதை விவரித்தார். வடஇந்தியர்கள் செய்யும் ஒடுக்குமுறைகள் இன்றைக்கும் நிற்கவில்லை.
நமது வரிப்பணம் அதிகளவில் மத்திய அரசுக்குச் சென்று கொண்டிருக்கின்றது. அதே சமயம் மத்திய அரசு நமக்கு எதுவும் செய்வதில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், குவெம்பு அவர்களின் சிந்தனைமுறை அனைத்தும் திராவிட உணர்வாக இருந்தது. கன்னட நாடு இரண்டு தர்மங்களைக் கொண்ட நாடு.
லிங்காயத்து தர்மம், குவெம்புவின் விசுவமானவ தர்மம் (உலக மனித மதம்) இந்த இரண்டு தர்மங்களும் உழைக்கும் மக்களின் சார்பான திராவிட உணர்வின் பாகம் என்று கூறினார்.
ஆர்டிஎஸ்-RDS துவக்கவிழாவில் பேசிய அக்னிஸ்ரீதர் அவர்கள், குழந்தைகள் எத்தகைய உணவை உண்ண வேண்டும் என மடாதிபதிகள் தீர்மானிக்கின்றார்கள். தற்சமயம் காய்கறி உணவு விவாதப் பொருளாகியுள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த இட்லர் காய்கறி உணவைத்தான் சாப்பிட்டான். அதுமட்டுமல்ல இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கொலைகள் செய்தவன் ஒரு பிராமணன். அவன் மகாராஷ்ட்டிரத்தை சேர்ந்த ராமராகவன் என்பவன்தான் அவனும் காய்கறி உணவுதான் சாப்பிட்டான். அவன் சிறையிலும் ‘சந்தியா வந்தனம்’ செய்தான் அந்தப் பிராமணன்தான் பல ஏழை எளியவர்களைக் கொன்றழித்தான். இந்த விசயம் விவாதிக்கப்படவில்லை என்று தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் முசுலீம் இளைஞர்களும் அவர்களின் குடும்பங்களும் அச்சத்தில் வாழும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. கருநாடகத்தின் குறிப்பிட்ட சிலப் பகுதிகள் போதைப்பொருள்களின் இடங்களாக மாறியுள்ளன.
“இந்து நாமெல்லாம் ஒன்று” என்கின்றார்கள் இது உண்மையென்றால் இடஒதுக்கீடு எப்படி உருவானது? ளுஊ/ளுகூ மக்கள் மீது தாக்குதல்கள் ஏன் அதிகரித்து வருகின்றன? இவர்கள், இந்து , முசுலீம் என்று ஏன் கூறுகின்றார்கள்? திராவிடர் களைத் திசை திருப்பிடவே கூறுகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நாம் திராவிடர்கள் ஒன்றிணைந்து பிராமணியத்தை முறியடித்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் அந்த குறிகோளை நிறைவேற்றவே “ராஷ்ட்ரிய திராவிட சங்கம்” RDS தொடங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
ஆனால் நமது வரலாறு வேறு. DNA ஆய்வின்படி இந்தியாவின் பூர்வகுடிகள் ஆப்ரிக்கா கண்டத்தைச் சேர்நதவர்கள். மூன்று வகையாக இந்தியாவில் குடியேறினார்கள். பின்னர் இறுதியாக வந்தவர்களே ஆரியர்கள் என்றும் கூறினார். திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் என்பதற்கு சிந்துசமவெளி நாகரிகம் சாட்சியாக இருக்கின்றது என்றும் கூறினார்.
கன்னடம் கன்னடம்; திராவிடம் திராவிடம்
திராவிடம் திராவிடம்; கன்னடம் கன்னடம்
– எனும் முழக்கங்களுடன் மாநாடு நிறைவுப்பெற்றது.
பெரியார் முழக்கம் 26/01/2023 இதழ்