உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிராயுதபாணியாக பிடித்து, சித்திரவதை செய்து, பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்தக் காட்சிகளை லண்டனிலுள்ள ‘சேனல்-4’ தொலைக்காட்சி வெளியிட்டவுடன், வழக்கம்போல, ‘போலி காட்சிகள்’ என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.

இசைப் பிரியா – போரின்போதுதான் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சாதித்தது. இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்ட போரில் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இசைப் பிரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ‘சேனல் 4’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்ரீலங்கா: கொலைக் களம்’ என்ற படத்தைத் தயாரித்த லண்டன் பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான கல்லம் மக்ரே, இதை மறுத்துள்ளார். ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேடு (நவ. 2) அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது இலங்கை அரசுக்கே தெரியும். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வெளிவர இருக் கின்றன என்று அவர் கூறியுள்ளார். இதைப் படம் பிடித்தவர்களே இலங்கை இராணுவத்தினர் தான். அவைகளை இலங்கை இராணுவமே கண்டுபிடித்து சேகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்போது வெளியிட்டுள்ள காட்சிகள் எங்களுக்கு அப்போதே கிடைத்தது என்றாலும் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்தி, ஆய்வு சோதனைகளுக்கு உட்படுத்திப் பிறகு வெளியிட்டுள்ளோம். பிரிட்டன் நீதிமன்றத்துக் காகவும், சர்வதேச நீதிமன்றங்களுக்காகவும் இதுபோன்ற காட்சிப் பதிவுகளை, ஆவணங் களை சோதிக்கக்கூடிய நிறுவனங்களிடம்தான் நாங்கள் இந்த வீடியோ காட்சிகளையும் சோதனைக்கு உட்படுத்துகிறோம். காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதா; ‘எடிட்’ செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளனவா, தொடர்ச்சி இருக்கிறதா, ஒளியில் மாறுபாடுகள் இருக்கிறதா என்பதையெல்லாம தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து உறுதி செய்கிறார்கள்.

காமன் வெல்த் மாநாடு நடக்க இருக்கும் நேரத்தில் இது வெளியிடப்பட்டதற்காக நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். இப்படி முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதுதான் வெளிவர வேண்டும். இந்த காட்சிகளில் பெரும்பாலானவை அய்.நா.விடமே இருக்கிறது. அய்.நா. அவற்றை சோதனைக்கு உட்படுத்தி, பாதுகாத்து வைத்திருக்கிறது. நாங்கள் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வரும் என்கிறார் கல்லம் மக்ரே.

இசைப் பிரியாவின் இந்தக் கொடூர கொலைக் காட்சி உலகம் முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்த காட்சிகள் உண்மை என்று தான் நம்பு வதாகக் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் வாசன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி யிடமிருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது.

அடுத்த சில நாட்களில் சேனல் 4 தொலைக் காட்சி தயாரித்த ‘நோ பயர் சோன்’ ஆவணப் படத்தை அத் தொலைக்காட்சி முழுமையாக வெளியிட இருக்கிறது. அந்தப் படம் வெளிவரும் போது அது இலங்கைக்கு மேலும் கடும் நெருக்கடிகளை உருவாக்கும்.

‘இசைப் பிரியாவின் இறுதி நிமிடங்கள் காட்சி – இந்தியப் பிரதமருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்; இந்தக் காட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது கடினம்’ என்று தமிழ் ‘இந்து’ நாளேடும் எழுதியுள்ளது. ‘இந்து’ ஏடு, இந்தியா காமன் வெல்த்  மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...