வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

டெல்லியில் அதிகார மய்யங்களில் அதிகார சக்திகளாக செயல்பட்ட பார்ப்பன உயர்ஜாதி அதிகாரக் கும்பல், ஆட்சி மாற்றம் வரப் போவதை உணர்ந்து, உலக வங்கி, சர்வதேச நிதியம், வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் பதவியை உறுதி செய்து கொண்டுள்ளன. அதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 9, 2014) வெளியிட்டுள்ள செய்தி:

மத்திய அமைச்சகங்கள் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்கள், கூடு தாவும் பறவைகளாகி விட்டனர். உதாரணமாக, பிரதமரின் தனிச் செயலாளராக இருந்த இந்து சேகர் சதுர்வேதி, இப்போது வாஷிங்டனில் அய்.எம்.எப். எனும் சர்வதேச நிதியத்தில் ஆலோசகர் பதவிக்குப் போய்விட்டார். அன்னிய முதலீட்டு ஆலோசனை துறையின் கூடுதல் செயலாளராக இருந்த அஞ்சலி பிரசாத், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் தூதர் பதவிக்குப் போய்விட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செய்தி தொடர்பாளராக இருந்த நீலம் கபூர், லண்டனில் உள்ள நேரு மய்யத்தில் முக்கிய பதவியை ஏற்கிறார். மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவின் தனிச் செயலாளர் அஷிஷ் குந்ரா லண்டனிலுள்ள இந்திய தூதரகத்துக்கு போகிறார். அதே அமைச்சரிடம் ‘சிறப்புப் பணி’க்கான அதிகாரியாக இருந்த அயூஷ்மணி திவாரி, பிரஸ்ஸலில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் ப.சிதம்பரம் அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இருந்த விஜய்சிங் சவுகான், வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் பதவி ஏற்கவிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டிலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று நம்பி, பல அதிகாரிகள் வேறு உயர் அதிகாரப் பதவிக்கு பறந்து விட்டார்கள். அப்போது பிரதமர் அலுவலக செயலாளராக இருந்த புலோக் சட்டர்ஜி, வாஷிங்டனில் உலக வங்கி நிர்வாக இயக்குனராகிவிட்டார். அதேபோல் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த டி.பி.எஸ். சந்து, வாஷிங்டனில் வேறு பதவிக்கு பறந்து விட்டார். வாஜ்பாய் ஆட்சி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தபோது அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சக்திசின்கா எனும் அதிகாரி உலக வங்கியில் உயர் பொறுப்புக்கு ஓடி விட்டார். அதேபோல், மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைத்து விடை பெறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் வரும் என்று நம்பி, வெளிநாடுகளுக்கு ஓடும் இந்த பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்துக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் தூதரகங்கள் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

பெரியார் முழக்கம் 15052014 இதழ்

You may also like...