காங்கிரசும் வாலிபர்களும்
இன்று, காங்கிரசு ஸ்தாபனம் தேசாபிமானச் சங்கமென்றும், ஜஸ்டிஸ் ஸ்தாபனம் வகுப்புவாத ஸ்தாபனமென்றும் பொதுமக்களுக்கு கற்பிக்கப் பட்டு வருகிறது.
அது மாத்திரமல்லாமல் காங்கிரசில் உள்ளவர்கள் எல்லாம் விரிந்த நோக்கமுடைய தியாகிகள் என்றும், ஜஸ்டிசில் உள்ளவர்கள் எல்லாம் குறுகிய நோக்கமுள்ள சுயநலக்காரர்கள் என்றும் பிரசாரம் செய்யப்படுவதுடன் பொது நோக்குடைய அனேக வாலிபர்கள் உள்ளத்திலும் அம்மாதிரியான ஒரு அபிப்பிராயம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டுவித அபிப்பிராயங்களின் மீதுதான் இன்று சென்னை மாகாணத்தில், சிறப்பாக தமிழ்நாட்டில் அரசியல், சமூக இயல் போர் நடந்து வருகிறது.
~subhead
நமது நிலை
~shend
ஆனால் நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த 10, 12 வருஷகாலமாகவே காங்கிரசானது பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆக பயன்படுத்தப் படுகின்ற ஸ்தாபனம் என்றும், ஜஸ்டிசானது பார்ப்பனரல்லாதாருடைய நன்மைக்கு ஆக ஏற்படுத்தப்பட்டு பயன்பட்டு வருகிற ஸ்தாபனம் என்றும் சொல்லி வருவதை யாவரும் உணர்ந்திருக்கலாம். இப்படிச் சொல்லி வருவதாலேயே காங்கிரசில் அனுபோகமில்லாமலோ, காங்கிரசினிடம் ஏதாவது எதிர்பார்த்து ஏமாந்து போய்விட்டதினாலோ சொல்லி வருவதாக யாரும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் காங்கிரசில் சகல அனுபவமும் பெற்றே இதைச் சொல்லுகிறோம். காங்கிரசு ஆரம்பித்த காலம் முதல் கொண்டு நாளிது பரியந்தம் அதன் ஆதிக்கம் எப்படி இருந்து வந்திருக்கின்றது என்பதை கவனித்தவர்களுக்கு நமது அபிப்பிராயம் சரியா தப்பா என்பது ஒரு விதத்தில் புரியலாமானாலும், இப்போதுள்ள வாலிபர்களுக்கு புரிவதற்காக 1919ஆண்டுமுதல் அதிக விளம்பரம் ஆகி வரும் காங்கிரசைப் பற்றியே கவனிப்போம்.
~subhead
பழைய கதை
~shend
1919ம் வருஷத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி தனது முனிசிபல் சேர்மென், ஜில்லா போர்ட் மெம்பர், தாலூக்கா போர்ட் மெம்பர் முதலிய பதவிகளை ஒரே காகிதத்தில் ராஜீநாமா கொடுத்துவிட்டு தோழர்கள் வரதராஜுலு நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களைப் பின்பற்றி காங்கிரசில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவர். அது சமயம் அவர் முதலில் சென்ற மகாநாடு திருச்சி மாகாண மகாநாடாகும். அதற்கு சுமார் 100 பிரதிநிதிகளுடன் ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு சென்ற போது அங்கு தோழர்கள் வரதராஜுலு, ஜோசப், சோமசுந்திர பாரதியார், கல்யாணசுந்திர முதலியார், சிதம்பரம் பிள்ளை (இருவரும் இருந்ததாக ஞாபகம்) முதலியவர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டதையும், ஜஸ்டிஸ் கட்சியை வைவதையும், ராமநாதபுரம் ராஜா தலைமை வகித்ததையும் இவர்களை யெல்லாம் ராஜகோபாலாச்சாரியார், விஜயராகவாச்சாரியார் ஆகியவர்கள் நடத்தினதையும் பார்த்து தோழர் ஈ.வெ.ரா. அதில் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் ஒரே ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
~subhead
முதல் சந்தேகம்
~shend
அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரைப்பற்றிக் குறை கூறுவது எல்லாம் சரி, ஆனால் அவர்கள் கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நியாயமானது தானே என்று கேட்டார். அதற்கு தோழர் வரதராஜுலு நாயுடு உள்பட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றி யாருக்கும் ஆக்ஷேபணை இல்லை என்றும், அதற்காகவே சென்னை மாகாணச் சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும், அதற்கு தோழர் பி. கேசவபிள்ளை தலைவர் என்றும், தோழர் பி. வரதராஜுலு காரியதரிசி என்றும் சொல்லப்பட்டது.
~subhead
ஈரோட்டு மகாநாடு
~shend
அந்த சமயம் தோழர் ஈ.வெ.ரா. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதானால் ஜஸ்டிஸ் கட்சி அவசியமில்லை என்று சொன்னதின் பேரில் உடனே அங்கேயே பார்ப்பனரல்லாத பல பிரமுகர்கள் ஒன்று கூடி சென்னை மாகாணச் சங்கம் என்பதின் 2 வது மகாநாட்டை ஈரோட்டிலேயே வேண்டுமானாலும் கூட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் என்றும், அதைக் கூட்ட சம்மதிக்கிறீர்களா என்றும், தோழர் ஈ.வெ.ராமசாமியை தோழர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்திரம் முதலியவர்கள் கேட்க, ஒரே மாதத்தில் ஈரோட்டில் சென்னை மாகாண மகாநாடு கூட்டப்பட்டது. தோழர் கோவிந்ததாஸ் தலைமை வகித்தார். ஈ.வெ.ரா. வரவேற்பு தலைவராய் இருந்தார்.
தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, விஜயராகவாச்சாரியார் முதலியவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு போனார்கள். இதன்பிறகு பார்ப்பனரல்லாதார்களில் ஏதோ பணக்காரர்களாய் இருந்தவர்கள் போக, மற்றபடி உற்சாகமுள்ள வாலிபர் எல்லோரும் இவர்களைப் பார்த்து காங்கிரசில் சேர்ந்தார்கள். அது மாத்திரமல்லாமல் காங்கிரசில் தேசீயவாதிகள் (நேஷனலிஸ்ட் அசோசியேஷன்) சங்கம் என்பதாக ஒரு சங்கத்தையும் புதிதாக உண்டாக்கினார்கள். அதிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொண்டு அச் சங்கத்துக்கு தோழர் சி. விஜயராகவாச்சாரியார் தலைவராகவும் தோழர் ஸி. ராஜகோபாலாச்சாரியார் பொதுக் காரியதரிசியாகவும், தோழர் பிரகாசம் ஆந்திர நிர்மாண காரியதரிசியாகவும், தோழர் ஈ.வெ.ரா. தமிழ்நாட்டு நிர்மாணக் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
~subhead
ராஜாஜி சூழ்ச்சி
~shend
ஆனால் அதற்கு உபதலைவராயிருக்க தோழர் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரை பிரேரேபித்ததில், அது தோழர் ராஜகோபாலாச் சாரியாருக்கு பிடிக்காததால் அதற்கு பதிலாக வேறு ஒரு பார்ப்பனர் எஸ். கஸ்தூரி ரங்கய்யங்கார் பெயர் பிரேரேபிக்கப்பட்டது. அது சமயம் தோழர் ஈ.வெ.ரா., ராஜகோபாலாச்சாரியாருக்கு கடமைப்பட்டவராக இருந்தும், தோழர் வரதராஜுலு முதலியவர்கள் வி.ஓ. சிதம்பரம் பிள்ளைதான் உபதலைவராய் இருக்க வேண்டும் என்று சொன்னதால், ஈ.வெ. ராவும் அதை ஆதரிக்க, அந்த விஷயம் உடனே பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற உணர்ச்சியைக் கிளப்பி விட்டது.
பிறகு, உடனே இந்த விஷயம் ஒத்திப்போடப்பட்டு விட்டு பிற்பகல் மகாநாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைவர் சொல்லிவிட்டார்.
ஆனால் கூட்டம் முழுவதும் பார்ப்பன மயமாய் இருந்ததால் பிற்பகல் மகாநாட்டுக்கு தொழிலாளிகளில் 50 பேருக்குமேல் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் டெலிகேட்டு பணம் கொடுத்து 50 தொழிலாளி பிரதிநிதிகளை டாக்டர் வரதராஜுலுவும், ஈ.வெ.ராவும், திரு.வி. கல்யாணசுந்தரமும் கூட்டி வந்து உட்காரவைத்தவுடன் தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு சூழ்ச்சி செய்தார். அது என்னவென்றால் உபதலைவர் ஒருவர் என்று இருந்ததை 5, உப தலைவர்களாக்கி அதில் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களையும் ஒருவராகச் சேர்த்து அதற்கு மதிப்பில்லாமல் ஆக்கினார். இதையும் தோழர் ஈ.வெ.ரா., வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் ஒப்புக்கொள்ளாததால் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் உபதலைவராகத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. நிர்வாகக்கமிட்டி மெம்பர்களிலும் பகுதிக்கு மேல் பார்ப்பனரல்லாதார்களை போட வேண்டுமென்று ஈ.வெ.ரா. வாதாடியதால் அந்தப்படியே போட வேண்டியதாயிற்று. இதைப் பார்த்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் அன்றையதினமே தனது வாயால் “உங்களை விட ஜஸ்டிஸ் கட்சியாரே 100 மடங்கு தேவலாம்” என்று சொல்லி மனம் புழுங்கி விட்டார். இதைப்பற்றி உண்மை அறிய வேண்டியவர்கள் இன்றும் தோழர்கள் முதலியாரையும் நாயுடுகாரையும் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
~subhead
செத்தது
~shend
இந்தக் காரணங்களால் அடுத்த நாளே சென்னை மாகாணச் சங்கமும், தேசீயவாதிகள் சங்கமும் உடனே செத்துப் போய்விட்டன.
பிறகு அதைப்பற்றிய பேச்சே கிடையாது. அது முதல் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு முதலியாரிடமும், நாயுடுகாரிடமும், அந்தரங்கத்தில் நம்பிக்கை அற்றுப்போய் விட்டது. பின்னரும் அவர்களிடம் எப்போதுமே நம்பிக்கை இல்லாமலும் போய் விட்டது. ஆனால் ஈ.வெ.ரா.விடம் ஆச்சாரியாருக்கு நம்பிக்கை இருந்து வந்தது என்னலாம். ஈ.வெ.ராவும் ஆச்சாரியாரிடம் நம்பிக்கைத் தவறுதலாக நடக்க இஷ்டப்படவே இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் நேரில் சொல்லிவிட்டு செய்து வந்ததால் நம்பிக்கை இருந்தது.
அடுத்தாப்போல் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு கூட்டப் பட்டது. தோழர் சீனிவாசய்யங்கார் தலைமை வகித்தார். அங்கும் தோழர் ஈ.வெ.ராவும் தோழர் சிதம்பரம் பிள்ளையும் வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றினார்கள். பொது மகாநாட்டில் தலைவர் தனக்குள்ள விசேஷ அதிகாரத்தைக் கொண்டு அதை நிராகரித்துவிட்டார்.
~subhead
தஞ்சை மகாநாடு
~shend
பிறகு தஞ்சையில் மாகாணக் கான்பரன்சு கூடிற்று. அங்கும் தோழர் ஈ.வெ.ரா. தனது (கோயமுத்தூர் பிரதிநிதிகள்) ஜாகையில் ஒரு பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் கூட்டம் கூட்டி, வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை சென்னை பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் தடுத்தும், காங்கிரஸ் ஸ்தாபனங்களில் 100க்கு 50 ஸ்தானங்களுக்குக் குறையாமல் பார்ப்பனரல்லாதார் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகச் சொல்லி ஈ.வெ.ராவுக்கே அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது.
பிறகு திருப்பூர் மாகாண மகாநாட்டுக்கு டாக்டர் வரதராஜுலு தலைமை வகிக்க மாகாணமெங்கும் ஆதரவு இருந்தும் மித்திரன் கூட்டம் முதலிய பார்ப்பனர்கள் அவரைப் போடக்கூடாது என்று சூழ்ச்சி செய்து, கடைசியாக வாசுதேவராவ் என்கின்ற ஒரு அநாமதேயப் பார்ப்பனரைத் தலைவராகப் போட்டுக் கொண்டார்கள்.
அங்கும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் விஷயம் பொது மகா நாட்டிலேயே வந்து, ஒருவருக்கொருவர் கை கலக்கும்படியான நிலை ஏற்பட்டு விட்டது. அதில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது, கோயில் பிரவேசம் ஆகிய தீர்மானங்கள் பார்ப்பனர்களால் பலமாக எதிர்க்கப்பட்டு கை நழுவ விடப்பட்டன. அங்குதான் தோழர் ஈ.வெ.ரா. ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னது.
~subhead
திருச்சி மகாநாடு
~shend
பிறகு திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக் கூட்டத்தில் தோழர் சீனிவாசய்யங்காருக்கும், தோழர் ராஜகோபாலாச்சாரிக்கும் இருந்த போட்டியால், தோழர் ஈ.வெ.ராமசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது என்றாலும் தலைவர் தேர்தல் நடந்து ஓட்டுகள் எண்ணிப்பார்த்து ஈ.வெ.ராமசாமி தலைவரானார் என்று சொன்னவுடனே, சென்னை பார்ப்பனர்கள் அவர்மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அதை அப்போது பார்ப்பனரல்லா தாரிடம் மிக மிக செல்வாக்குப் பெற்றிருந்த வ.வெ.சு. அய்யரைக் கொண்டு பிரேரேபிக்கச் செய்து அவரையே ஓட்டுச் சேகரிக்கச் செய்தார்கள்.
அது சமயம் தோழர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் எழுந்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்புத் துவேஷத்தின் மீது கொண்டு வரப்பட்டிருக்கிறதென்றும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் பிரேரேபிக்க வேண்டிவரும் என்றும் சொன்னதின் மீது, வ.வெ.சு. அய்யர் எவ்வளவு பாடுபட்டும் அத்தீர்மானம் தோல்வி அடைந்து விட்டது. அவருடைய குருகுலத்தின் வண்டவாளம் வெளியாகவும் அத்தீர்மானமே ஒரு காரணமாய் இருந்தது.
~subhead
திருவண்ணாமலை மகாநாடு
~shend
திருவண்ணாமலை மாகாண மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ராவே தலைமை வகித்து அங்கு பார்ப்பனர், அல்லாதார் விஷயம் தலைமை உரையில் பலமாகப் பேசி விவாதிக்கப்பட்டு குறிப்பாகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது சரி என்றும், மற்ற கட்சிகளைக் காங்கிரசுடன் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கும் போது ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் ஏன் தேசத்துரோகக் கட்சி என்று சொல்ல வேண்டுமென்று கேட்டு தலைவர் பிரசங்கிக்கையில், தலைவருடனேயே சில பார்ப்பனர்கள் வாதாடுகையில், அதை ஒரு பார்ப்பனரல்லாத பிரதிநிதி கடினமாகத் தாக்கிப் பேசியபின், பார்ப்பனர்கள் மேலால் பிரசிங்கிக்க விட்டார்கள்.
~subhead
சு.ம. இயக்கத் தோற்றம்
~shend
அடுத்த, காஞ்சிபுரம் மகாநாட்டிலும் தோழர் கல்யாணசுந்தர முதலியாரை தலைவராக தமிழ்நாடு பூராவும் ஆதரித்தும் சுதேசமித்திரன் கூட்டம் அவர் கூடாது என்று எவ்வளவோ சூழ்ச்சி செய்து கடைசியாக ஈ.வெ.ரா. முயற்சியால் ஓட்டு அதிகத்தில் முதலியார் தலைமைப் பதவிக்கு வந்து காஞ்சீபுரத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியில் நிராகரித்து, பொது மகாநாட்டிலும் எதேச்சாதிகாரமாய் நிராகரிக்கப்பட்டு, அதற்கு பின்பே தோழர் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கம் ஏற்படவும், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எனவே பார்ப்பனர்கள் எந்த சமயத்திலாவது ஒரு பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் முன்னுக்கு வரவோ, தலைமைப்பதவி பெறவோ விட்டு இருக்கிறார்களா என்று பார்த்தால் காங்கிரஸ் பார்ப்பனர் இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும்.
~subhead
பார்ப்பனர் தந்திரம்
~shend
இவையெல்லாம் பழங்கதையானாலும் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.
அவர்களுக்கு நிலைமை கஷ்டமாக இருக்கும் போது குப்புசாமி போன்றவர்களை தலைவர்களாகவும், காரியதரிசி ஆகவும், சர்வாதிகாரி யாகவும் ஆக்கி விடுகிறார்கள். நிலைமை சற்று சவுகரியமாய் இருக்கிறது என்று தெரிந்தால் சத்தியமூர்த்தி போன்றவர்களை தலைவராக்கிக் கொண்டு முத்துரங்க முதலியார் போன்றவர்களையே அழுத்தி விடுகிறார்கள்.
உண்மையாகப் பேசப் போனால் இன்றும் தோழர் சத்திய மூர்த்தியாருக்கு சாப்பாட்டுக்கு யோக்கியமான வழி என்ன என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லுவாரா?
~subhead
சத்தியமூர்த்தி ஜாதகம்
~shend
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அறிய, தோழர் மூர்த்தியார் வாடகை வீட்டில் இருந்து கொண்டு டிராம் காரிலும் கால்நடையிலும் சீனிவாசய்யங்காரிடம் சென்று மான்யம் வாங்கிக் கொண்டிருந்தது யாரும் அறிந்ததுதானே?
இப்போது அவருக்கு இரண்டு இரட்டை மாடிவீடு எப்படி ஏற்பட்டது? மோட்டார் கார் ஏது? சாப்பாட்டுக்கு எப்படி வருகிறது? எந்தத் தொழிலில் சம்பாதித்தார்? இன்கம்டாக்ஸ் எவ்வளவு? தொழில் வரி உண்டா?
மற்றும் அவர் சிவிக் போர்ட் நாமினேஷன்களில் பணத்துக்காக அல்லாமல் எதில் நாணயக் குறைவில்லாமல் நடந்து கொண்டார் என்று சொல்லக்கூடும்?
மெயில் பேப்பர், மூர்த்தியாரை ஆதரிக்கும் இரகசியம், பாஷ்யம் அவர்கள் பட்டப்பகலில் தப்பட்டை அடிப்பதுபோல் எடுத்துச் சொன்னது ஆச்சாரியாருக்குத் தெரியாதா? மூர்த்திக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள சம்மந்தம் ஆச்சாரியாருக்குத் தெரியாதா?
மற்றும் அவருடைய சொந்தப் பழக்க வழக்கம், ஒழுக்கம் ஆகியவை களைப்பற்றி ஆச்சாரியாரே பலமுறை மற்ற ஜனங்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டது யாருக்கும் தெரியாதா?
இன்னும் எவ்வளவோ மற்றவர்களுக்குத் தெரியாத இரகசியங்கள் அவரைப்பற்றி ஆச்சாரியாருக்குத் தெரிந்திருந்தும் இவ்வளவையும் லக்ஷ்யம் செய்யாமல் அதுவும் முத்துரங்க முதலியாருக்கு விரோதமாக மூர்த்தியாருக்கு தமிழ்நாட்டுத் தலைமைப் பட்டாபிஷேகம் செய்தார் என்றால் மூர்த்தியாரின் குணங்கள் எல்லாம் ஆச்சாரியார் மீது பிரகாசிப்ப தாகத்தானே அர்த்தம்.
~subhead
ஜாதிப் பற்று
~shend
அல்லது ஆச்சாரியாரின் மூக்குக்கு நல்ல வாசனை கெட்ட வாசனை அறிய சக்தி இல்லை என்றாவது சொல்லித் தானே ஆகவேண்டும். எவ்வளவு அயோக்கியரானாலும் சத்தியமூர்த்தியார் பார்ப்பனர், எவ்வளவு யோக்கியரானாலும் முத்துரங்க முதலியார் பார்ப்பனரல்லாதார் என்பதில்லாமல் இதில் வேறு என்ன காரணம் இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.
காங்கிரஸ் பார்ப்பனர் ஸ்தாபனம், அல்லது பார்ப்பனர் நன்மைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனம் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி நமது வாலிபர்களுக்கு வேண்டும் என்று கேட்கின்றோம்.
~subhead
ஒரு கேள்வி
~shend
பார்ப்பனர்கள் தின்று எச்சிலையில் மீதி விழுவதை பொறுக்கவும், நக்கவும் ஆசைப்பட்டு காங்கிரசிலிருப்பவர்கள் இருந்து தொலையட்டும், அவர்கள் கால்கழுவிய “தீர்த்தம்” சாப்பிடுவதின் மூலம் மந்திரிகளாகட்டும், ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் தலைவர்கள் ஆகட்டும், அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளுவோம். அப்படிப்பட்ட எண்ணமில்லாமல் ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக் கட்சி என்றும், காங்கிரஸ் தேசாபிமானக் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சுயநலக்காரர்கள் நாணயமற்றவர்கள் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் சுயநலமற்றவர்கள் நாணயமுள்ளவர்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற, தன்காலில் நிற்கக்கூடிய வாலிபர்களாய் இருக்கிறவர்கள் இப்படிப்பட்ட இயக்கத்துக்கும், இப்படிப்பட்ட தலைவர் களுக்கும் வால் பிடித்துத் திரிவது ஆண்மையும், சுயமரியாதையும் கொண்ட காரியமா என்று கேட்கிறோம்.
எவ்வளவு காலத்துக்குத்தான் தேசாபிமானம் என்னும் பெயரால் இம்மாதிரி முட்டாள்தனமானதும் சுயமரியாதை அற்றதுமான காரியத்தைச் செய்து கொண்டு உயிர்வாழ்வது என்கின்ற உணர்ச்சி உண்மையான, சுத்த ரத்த ஓட்டமுள்ள வாலிபர்களுக்கு வரவேண்டாமா? என்று கேட்கின்றோம்.
~subhead
அரசியல் விபசாரத்துக்கு முடிவில்லையா?
~shend
“கடவுள்” பேரால் நடந்த விபசாரத்துக்குக்கூட முடிவுகாலம் வந்து, பெண்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டபோது இந்த தேசாபிமானத்தின் பேரால் நடக்கும், விபசாரித்தனத்தைவிட மோசமான, அயோக்கியத்தனத்துக்கும் இழிவுக்கும் முடிவுகாலம் வந்து நமது வாலிபர்களுக்கு எப்போதுதான் பகுத்தறிவும், சுயமரியாதையும் ஏற்படப்போகின்றதோ தெரியவில்லை. சுயமரியாதையில் அபிமானமற்றவர்கள் தேசத்தின் மீது அபிமானங்கொண்டு இருக்கிறார்கள் என்றால் இதை யார்தான் நம்புவார்கள்? ஆகவே மனித வாழ்க்கையில் எந்த தத்துவத்தில் தோழர் மூர்த்தியாரிடம் சுயமரியாதை அல்லது ஒழுக்கம் காணக்கிடக்கின்றது என்று பார்ப்பனரல்லாத காங்கிரஸ் வாலிபர்களை வணக்கமாய் கேட்கின்றோம்.
(சோற்றுக்கு வேறு வழியில்லையே என்பவர்களிடத்தில் நாம் கேட்க வில்லை. அவர்கள் அப்படியே இருக்கட்டும்)
எவ்வளவுதான் பார்ப்பனர்களை நாம் வெறுத்தாலும் பார்ப்பனர் களிடமிருந்து நமது வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில காரியங் களும் உண்டு. ஆனால் அவற்றை கற்றுக் கொள்ளாமல் அவர்களிடம் இருக்கும் குணங்களில் வெறுத்துத் தள்ளவேண்டியவைகள் எவையோ அவைகளை பல பரிசுத்தமுள்ள வாலிபர்கள் கற்றுக்கொண்டது மிகவும் கஷ்டமான காரியமாகும்.
~subhead
தேசாபிமானமா சுயநலமா?
~shend
கடைசியாக, இன்று காங்கிரசுக்கு வந்து சேரும் பார்ப்பனரல்லாத பெரிய ஆட்கள் என்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பயன் அடைந்து விட்டு இன்று அங்கு தங்கள் சுயநலத்துக்கு நம்பிக்கை இல்லை என்று கருதி வந்து சேருகிறார்களா? அல்லது தேசாபிமானத்தாலா என்று பாருங்கள். ஆகவே சுயநலக்காரர்களுக்கு நாணயமில்லாதவர்களுக்குப் புகல் இடமாய் இருப்பதும் பயன்படுத்திக் கொள்ள ஆதாரமாய் இருப்பதும் காங்கிரசா அல்லவா என்பதையும், செல்வாக்கில்லாத சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அதன் கொள்கைக்காகப் பாடுபடுவதும் அதற்காக அதில் வந்து சேர்வதும் சுயநலமற்றதும், நாணயமுடையதுமான காரியமா அல்லவா என்பதையும் பொதுஜனங்கள் உணர ஆசைப்படுகிறோம்.
~subhead
ஈ.வெ.ரா. சமய சஞ்சீவியா?
~shend
தவிர, தோழர் ஈ.வெ.ரா. தனது சொந்த வாழ்வைவிட்டு பொதுநல வாழ்வு என்பதற்கு வந்த நாள் முதல் இதுவரை தனது லக்ஷ்யத்தில் கொள்கையில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு தன்னலத்துக்கு சமயத்துக்கு தகுந்தபடி நடந்து வருகிறாரா? அல்லது ஒரு குறிப்பிட்ட லக்ஷியத்துக்கு கொள்கைக்கு ஆகவே ஆதி முதல் உழைத்து வருகிறாரா என்பதையும் பொது மக்கள் உணர ஆசைப்படுகிறோம்.
ஏனெனில் சில வாலறுந்த வாலிகள் ஈ.வெ.ரா. கடைசி காலத்தில் மந்திரிகளின் பின் திரிகிறாரே என்று விஷமப் பிரசாரம் செய்ததாகவும், தேசாபிமானத்தை விட்டு குறுகலான வழியில் நடக்கிறார் என்று சொல்லிப் பழித்ததாகவும், இதை சில வாலிபர்கள் நம்பி மோசம் போனதாகவும் தெரிந்ததால் இவற்றை எழுதுகிறோம். அன்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு ஏதாவது உணர்ச்சி தோன்றாதா என்ற ஆசையாலேயே இதை லக்ஷ்யம் செய்து எழுதப் புகுந்தோம்.
குடி அரசு தலையங்கம் 16.02.1936