வைக்கம் போராட்டம்: பெரியாரை சிறுமைப்படுத்துவோருக்கு பதிலடி
வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்களிப்பு பெரிதாக இல்லை என்று சில பேர்வழிகள் உளறத் தொடங்கியிருக்கிறார்கள். பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியில் வரலாறு புரியாது பேசும் அரை வேக்காடுகள் – வரலாற்றை ஒழுங்காகப் படித்து விட்டுப் பேச வேண்டும்.
- வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்ற ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. முதலில் அருவிகுட்டியில் ஒரு மாதம் சிறை; பிறகு திருவனந்தபுரத்தில் 4 மாதம் கடும் சிறை.
- பெரியாருக்கு முன் கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டனர். பெரியார் மட்டுமே கிரிமினல் கைதியாக கடும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
- பெரியாருக்கு சிறையில் சிறப்பு சலுகை எதுவும் தரப்படக் கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டது. 24 மணி நேரமும் திருவனந்தபுரம் சிறையில் கை, கால்களில் விலங்குகளுடன் கிரிமினல் கைதிக்கான உடையோடு கழுத்தில் கைதி எண் பட்டை தொங்கவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கம் போராளிகளில் ஒருவரான கே.பி. கேசவமேனன், ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலில் இதைப் பதிவு செய்திருக்கிறார். தனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமைகள் குறித்து பெரியார் வெளிப்படுத்தவே இல்லை.
- வைக்கம் போராட்டக் களத்தில் 141 நாள்கள் இருந்தவர் பெரியார். அதில் 74 நாள்கள் சிறையிலும் 67 நாள்கள் போராட்டக் களத்திலும் தன்னை ஒப்படைத்தார்.
- பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் தான் தனக்கு உந்துதலைத் தந்தது; மகர் குளத்தில் தீண்டப்படாத மக்களைத் திரட்டி, நீர் எடுக்கும் போராட்டம் நடத்த காரணமாக இருந்தது என்று அம்பேத்கரே எழுத்து வழியாகப் பதிவு செய்துள்ளார்.
- திரு.வி.க. ‘நவசக்தி’ பத்திரிகையில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டி ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் தந்தார்.
- பெரியார் களத்துக்கு வந்த பிறகு தான் அது மக்கள் போராட்டமாக வெடித்தது. திருவாங்கூர் சமஸ்தானம் அதிர்ச்சி அடைந்தது. திருவாங்கூர் மன்னர் இறந்தவுடன் பதவிக்கு வந்த மகாராணி, சாலைகளைத் திறந்து விட முடிவு செய்தார். ஆனால் பேச்சு வார்த்தையை பெரியாரோடு நடத்த திவான் விரும்பவில்லை. அவ்வளவு கோபம். ராஜாஜியை அழைத்து பெரியாரிடம் பேச மாட்டோம்; காந்தியை அழைத்து வாருங்கள் என்று கூறி விட்டார்.
- காந்தி சமரசம் பேச முன்வந்தபோது ஈ.வெ. ராமசாமி, வீதி உரிமையைத் தொடர்ந்து கோயில் நுழைவு உரிமைப் போராட்டம் நடத்தக் கூடாது என்று திவான் நிபந்தனை விதித்தார். அதைத் தொடர்ந்து காந்தி பெரியாரிடம் பேசினார். பெரியார் கோயில் நுழைவு உரிமைக்குப் போராடுவேன் என்றாலும் இப்போது ‘வீதி உரிமை’யோடு நிறுத்திக் கொண்டு மக்களைப் பக்குவப்படுத்தி அடுத்த போராட்டத்துக்கு தயாராவேன் என்றார். அதை காந்தி திவானிடம் கூறினார். அதற்குப் பிறகு தான் மூன்று வீதிகளில் ‘தீண்டப்படாத’ மக்கள் புழங்குவதற்கு உரிமை கிடைத்தது.
- வைக்கம் வெற்றி விழா பொதுக் கூட்டம் 1925 நவம்பர் 24இல் வைக்கத்தில் நடந்தது. இந்த வெற்றி விழாவுக்கு தலைமை தாங்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் பெரியார் என்று கருதி, பெரியாரை மட்டுமே அழைத்து தலைமை தாங்கச் சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே கேரளத்திலிருந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தான்.
இந்த வரலாறுகளைப் புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதா? இந்த வரலாற்றுச் செய்திகளை மறுக்க முடியுமா?
பெரியார் முழக்கம் 06042023 இதழ்