தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர்.
மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித், முஸ் லிம்கள், பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு நியாயங்கள் கற்பிக்கும் உளவியலுக்கு இழுத்துச் செல்கிறது.
தமிழ்நாட்டில் மதவெறி சக்திகள் காலூன்ற முடியாமல் தடுத்து நிறுத்தியதில் பெரியாரும் அவர் இயக்கமும் கடந்த காலங்களில் நடத்திய பார்ப்பனிய மத எதிர்ப்புப் போராட்டங்களும் இயக்கங்களும் ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து பெரியார் நிகழ்த்திய உரையாடலுமே அடித்தளம் அமைத்துத் தந்தது. கடும் எதிர்நீச்சல் போடக் கூடிய – ஊடகங்களின் விளம்பர வெளிச்சங்கள் கிடைக்காத இந்த அடிப்படைக் கடமைகளாற்றுவதில் பலரும் ஒதுங்கிக் கொண்டு விடுகிறார்கள்.
சமூக நீரோட்டத் தோடு இணைந்து நிற்கக் கூடிய விளம்பரமும் வரவேற்பும் கிடைக்கக் கூடிய பாதுகாப்பான செயல்பாடுகளோடு தங்கள் கடமைகளில் திருப்தி அடைந்து விடுகிறார்கள். தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்ட இந்த பாதுகாப்பான செயல்பாடுகள்தான் தமிழகத்தில் பெரியார் முன்னெடுத்துச் சென்ற கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் சூழலுக்கு உந்தப்பட்டு மத ஆதரவு சக்திகள் வேர் பிடிக்கும் நிலை வந்து சேர்ந்துவிட்டது.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரையானாலும் பார்ப்பனிய மத இழிவுகளுக்கு எதிரான இயக்கங்களானாலும் அவைகள் அரசுகளால் தடைப்படுத்தப்படுகின்றன. இந்த முட்டுக் கட்டைகளை எதிர்கொண்டு அதற்கான விலைகளைத் தருவதற்கு தயாராக வேண்டும் என்பதே – வரலாறு – பெரியாரியல்வாதிகளுக்கு வழங்கியிருக்கும் கட்டளை. இந்த நியாயங் களுக்கு முகம் கொடுத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை உறுதி மிக்க தோழர்கள் – மனு சாஸ் திர எரிப்பு, ஜாதி தீண்டாமை எதிர்ப்பு, அரசு நிர்வாகத்தில் ஊடுருவும் மதவாத எதிர்ப்பு என்ற கொள்கைத் தளத்தில் தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள்.
கசப்பான கொள்கை மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமைதான் உண்மையான பெரியாரியத்துக்கான பால பாடம். அப்படித்தான் பெரியார் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தினார்.
அந்தக் கடமையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு களமிறங்கி செயல்பட்டு சிறை சென்று மீண்டிருக்கும் கொள்கைத் தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் பாராட்டுகிறது; வரவேற்கிறது.
பெரியார் முழக்கம் 30102013 இதழ்