1. வீர வாலி
“தோழர்களே, இங்கு நடித்த வீரவாலி கதை நடிப்பைக் கண்டீர்கள். இதைப் பற்றி தலைமை வகித்தவன் என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இந்தக் கதை இராமாயணக் கதையில் வரும் ஒரு பாகத்தை யொட்டி செய்யப்பட்ட கற்பனைச் சித்திரமாகும். இராமாயணமே ஒரு கற்பனைக் கதை. அதை மதவாதிகள் மதக்கதையாகவும், ஒரு வகை ஆஸ்திகர்கள் கடவுள் கதையாகவும் ஆக்கிவிட்டார்கள். அக்கதை இன்று ஆரியர்களாலும் அவர்களது அடிமைகளாலும் மக்களுக்கு மதப் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இராமாயணக் கதைக்கு மூலக்கதை என்று சொல்லப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்படி சரியாக எவரும் பிரச்சாரம் செய்வதில்லை, அந்தப்படி நடிப்பதும் இல்லை. ஏனெனில் அதை வால்மீகி ராமாயணப்படி நடித்தால், அது மதப்பிரச்சாரத்திற்கோ அல்லது கடவுள் பிரச்சாரத்திற்கோ சிறிதும் பயன்படாது. காரணம் என்னவென்றால், அது ஆதியில் உண்டாக்கியவர் என்று சொல்லப்படும், (உண்மையில் அவரால் எழுதப்பட்டிருக்குமானால்) வால்மீகி முனிவர் என்பவர் அதை ஒரு மதக் கருத்துக் கொண்டோ அல்லது...